பொய்யாமை 2 – கலி விருத்தம் - வளையாபதி 33
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலி(வு) உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்(கு) ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்(து) ஓம்புமின். 33 வளையாபதி
பொருளுரை:
பொய்கூறி உயிர்வாழும் வாழ்க்கையில் கல்வியாலுண்டாகும் அறிவுப் பொருளில்லாமலும், கையிலுள்ள செல்வப் பொருள் அழிவும், நன்மையில்லாத செயல்களைச் செய்வதால் துன்பங்களாலே வருந்த வேண்டியிருப்பதும் ஏற்படும் என்பது பொய்யில்லை;
முக்காலும் வாய்மையேயாகும். இதில் ஐயம் சிறிதும் இல்லை.
ஆதலால், அப்பொய் கூறுதலை ஒழித்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்கள் என எச்சரிக்கப்படுகிறது.
விளக்கம்:
பொய் கூறும் இயல்புடையார்க்குக் கல்விநலம் கைகூடாது; கைப்பொருளுக்கும் கேடுவரும்; எப்பொழுதும் துன்பங்கள் வந்தவண்ணம் இருக்கும். ஆதலால் பொய் கூறாதீர்கள் எனப்படுகிறது.
வாய்மை அறங்களுள் சிறந்ததாவது போன்று, பொய்ம்மை தீவினைகளுள் சிறந்ததாவதாலும், பொய்யராகிய தீவினையாளர்க்கு இடையறாது துன்பங்கள் வந்தவண்ணமிருக்கும் என்பதனாலும் நல்லில் செல்லல்களால் நலிவுண்டாம் என்றார்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
