தொட்டுப்பேசிட ஆசை

சிறுவயதில் என்னைத்தூக்கி
கொஞ்சிய கைகளை எல்லாம்
கண்களில் ஒற்றிக்கொள்ள ஆசை

பசிப்பொழுதில் தன்விரல்களையும்
தந்து சுவை ஊட்டிய கைகளை
மீண்டும் ருசித்திட சின்ன ஆசை

வெயிலோடு சேர்ந்து உறவாடி
ஊர் சுற்றிய நண்பர்களோடு
ஆற்றில் அலையாகிட
இப்போதும் தணியாத ஆசைதான்

தாலாட்டு பாடிய ஆச்சியின்
சேலைத்தொட்டிலில் அசைந்தாடியபடியே
ஏதும் அறியாததுபோல் உலகை
ரசித்திட இன்னமும் ஆசைதான்

அம்மாவின் இடுப்பிலிருந்து
நழுவுவதே இல்லை நம் பால்யம்

எனும் இருவரி கவிதையினுள்ளேயே
அடங்கிவிடாத வாழ்க்கையில்

எல்லாவற்றையும் தொட்டுபார்த்திட ஆசைதான்
எல்லோரையும் தொட்டுபேசிட ஆசைதான்
மரப்பசு நாயகியைப்போல்..........!

எழுதியவர் : மேகலை (9-Jul-19, 11:35 am)
சேர்த்தது : மேகலை
பார்வை : 200

மேலே