உள்ளம் கனியின் உலகம் கனிந்துன்னை வாழ்த்தி வணங்கும் - நீர்மை, தருமதீபிகை 324

நேரிசை வெண்பா

உள்ளம் கனியின் உலகம் கனிந்துன்னை
வள்ளலென வாழ்த்தி வணங்குமால் - உள்ளம்
கடிதாயின் யாரும் கடிந்து வெறுப்பர்
கொடிதாகும் வாழ்வு குறி. 324

- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உனது மனம் புனிதமாய் இனிது கனியின் உலகம் உன்னை உரிமையுடன் உவந்து வாழ்த்திப் புகழ்ந்து போற்றும்; கடினமாயின் கொடியன் என வெறுத்துத் தூற்றும்; உன் வாழ்க்கையும் துயரமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், மனம் போல் உலகம் என மதிநலம் கூறுகின்றது.

உள்ளம் கனிதலாவது நெஞ்சில் கருணைப் பண்பு சுரந்திருத்தல். எவ்வுயிர்க்கும் இரங்கியருளும் தண்ணளியுடையவர் புண்ணிய சீலர் ஆகின்றார்; ஆகவே கரும உலகினர் அவரைத் தருமமூர்த்தி எனக் கருதி மகிழ்ந்து உருகி வணங்குகினறனர்.

தாயைப் பிள்ளைகள் மதித்துப் போற்றுதல் போல், தூய உள்ளமுடைய கருணையாளரை மக்கள் உவந்து போற்றுகின்றனர். மாக்களும் கனிந்து நோக்குகின்றன.

உள்ளம் கனிய உலகம் கனிகின்றது. உயிர் இனங்களை உலகம் என்றது. பாவ உலகில் பயிலும் சீவ கோடிகள் யாவும் பெரும்பாலும் தங்கள் நலங்களேயே கருதி அல்லும் பகலும் ஆவலித்துழலுகின்றன. அந்த ஆவலினால் பிறருடைய இதங்களை எண்ணி இரங்காமல் பிழைபடுகின்றன. தந்நலம் விழைந்தன; நன்னலம் ஒழிந்தன.

அன்பின் பண்பாகிய சுவை இன்மையால் அவை நவையுறுகின்றன. அன்புடையது பிறர்க்கு என்பும் உதவும் இயல்பில் இன்பம் புரிவதால், அவ்வுயிர் வாழ்வு தெய்வ நலம் சுரந்து திவ்விய மகிமை பெறுகின்றது. உயிர்களுக்குச் செய்வது கடவுளுக்கு உரிமை ஆகின்றமையால் அந்த அன்பாளரை உவந்து இறைவன் அருள் பொழிகின்றான்.

எங்கும் நிறைந்து யாரும் அறியாமல் இன்ப நிலையமாயுள்ள பரமன் அன்பின் வழியே அருள்செய்து ஒளிர்கின்றான்.

'அன்பினில் விளைந்த ஆரமுதே!
அருளுடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! - மாணிக்க வாசகர்

'அருள் பழுத்த பழச் சுவையே: - தாயுமானவர்

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில்புகும் அரசே!
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே!
அன்பெனும் கரத்தமர் அமுதே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிர்ஒளி அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே!
அன்புரு வாம்பர சிவமே! – இராமலிங்கர்

கடவுளை அன்பர்கள் இங்ஙனம் உருகித் துதித்துள்ளனர். இதனால் அவர்தம் உள்ளக் கனிவும், உலகம் அவரை உள்ளன்புடன் உவந்து கொண்டாடும் நிலையும் உணர்ந்து கொள்ள வந்தன.

தன்னுயிர் கனிந்து உருகிய பொழுது அம்மனிதனை மன்னுயிர்கள் மகிழ்ந்து. தொழுகின்றன. தன் உள்ளம் கனியாமல் வன்கண்ணனாயிருப்பின் வெய்யவன் என வையம் அவனை வைய நேர்கினறது. புறத்தே எவ்வளவு வசதிகளை உடையவனாயினும் அகத்தே பண்பு இல்லையாயின் அவன் வாழ்க்கை சுவையற்றதாய் இழிந்துபடுகின்றது. ’வாழ்வு கொடிதாகும்' என்றதனால் அவனது தாழ்வு நிலை தெளிவாம்.

தயை உயர் நலங்களை உளவாக்குகின்றன; அதனை எவ்வழியும் பேணிச் செவ்விய நீர்மையனாய்ச் செழித்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jul-19, 5:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே