குலமகன் என்பான் குடிவாய் ஒருவன் மனையாளை நினையான் - நெறி, தருமதீபிகை 334
நேரிசை வெண்பா
குலமகன் என்பான் குடிவாய் ஒருவன்
நிலைமனை யாளை நினையான் - புலைமகனே
நச்சி யிழிந்து நவையுழந்து ஞாலந்தான்
சிச்சி எனத்திரிவன் செத்து, 334
- நெறி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பிறனுடைய மனையாளைத் தழுவ நினையாதவனே நல்ல குலமகன் ஆவான்; அவளை நச்சி இழிந்தவன் புலைமகன் ஆகிப் பிழைகள் பல செய்து சவம் என உலகம் இகழ்ந்து வெறுக்க ஈனமாய் அலைந்து திரிவான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், பிறனில் விழையாதவனே குலமகன் என்கின்றது.
மனிதருள் மேன்மக்கள், கீழ்மக்கள், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பெரியோர், சிறியோர் என்பன எல்லாம் செயல் இயல்களைக் தழுவியே விளைந்துள்ளன. அரிய செய்வார் பெரியர்' என்றார் வள்ளுவர். பொய்யாமொழியின் பொருள் உணர்வு உய்தியை அருள்கின்றது.
பிறருடைய மனைவியை விழைவது பழி பாதகமான இழிசெயலாதலால் அதனை உடையவன் இழி மகன் ஆகின்றான்.
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145 பிறனில் விழையாமை
என்றதனால் அவ்விழைவின் விளிவு தெளிவாம். நெறியுடைய தன் இல்லைத் துறந்து நெறிகேடாக அயல் இல்லை அவாவிச் செல்கின்றவனை இல்இறப்பான் எனச் சுட்டியிருப்பது நினைப்புறற்பாலது. இறத்தல் - நெறிகடந்து செல்லல். அந்த இறப்பு இறப்பாகவே முடிகின்றது.
'குடிவாய் ஒருவன் நிலை மனையாள்' என்றது, ஒருவனுடைய குடிவாழ்க்கைக்கு உயிராதாரமாய் அமைந்து உறுதி புரிந்துள்ளவள் என அவளது இயலும் செயலும் அறிய வந்தது.
ஒருவன் நெறி கடந்து சென்றால் பிறனுடைய குடி குலைந்து படுகின்றது. பதிவிரதை என்னும் பெயரைக் கெடுத்து ஒரு குலமகளைப் பழிபடச் செய்து இல்லறத்தை இழிவுறுத்தலால், இவன் பொல்லாப் பாதகனாய்ப் புலையுறுகின்றான்.
தானும் இழிந்து அயலான் குடியையும் இழிவாக்கி அழிவு செய்வது, கொடிய தீமையாய் நெடிது ஓங்கி நிற்கின்றது.
இந்த இழிவைச் செய்யாதவன் உயர்ந்த குலமகனாய் ஒளி மிகுந்து திகழ்கின்றான். உத்தமன், யோக்கியன், சுத்தன், சீலன், மேலோன் என்னும் இச்சிறப்பு நிலைகள் எல்லாம் அயல் மனைவியரை நயவாத உயர் தகைமையாளரையே இயல் உரிமையாய்க் குறித்து வருகின்றன. சீலமும், கற்பும் இருபாலின் இனிய உயிர்கள்.
"இந்த இப்பிறவிக்(கு) இருமாதரைச்
சிந்தை யாலும் தொடேன்”
என இராமன் தனது அருமை மனைவியிடம் உறுதி கூறியிருக்கிறான் அமுத மயமான இப்புனித மொழியை நினைந்து நினைந்து சீதை உள்ளம் உருகியுள்ளாள். இலங்கைச் சிறையில் தன்னை அரிதின் வந்து கண்ட அனுமானிடம் இதனைக் தலைமையாகப் பரிந்து சொல்லிக் தன் நாயகனைக் கருதிக் கரைந்து கண்ணீர் சொரிந்து அப்பெண்ணரசி அழுதிருக்கிறாள்.
கலி விருத்தம்
(மா விளம் விளம் கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
வந்தெ னைக்கரம் பற்றிய வைகல்வாய்,
இந்த, இப்பிற விக்கிரு மாதரைச்
சிந்தை யாலும்தொ டேனென்ற, செவ்வரம்
தந்த வார்த்தைதி ருச்செவி சாற்றுவாய் - இராமா, சூளாமணிப் படலம், 34
என அத்தலைமகள் கூறியுள்ள இதில் இக்குலமகன் நிலைமையை நினைந்து வியந்து நாம் உவந்து கொள்கின்றோம்.
"மறுமங்கை யருக்கும், மறுமன்ன வருக்கும்
மார்பும் முதுகும் கொடாதவன்”
என இக்கோமகன் சீர் பெற்றுள்ளது போல் பார் பெற்ற மக்களுள் யார் பெற்றுள்ளார்: சீலமும், வீரமும் சீராமனுடைய கோலங்களாய்க் குலாவி ஞாலம் புகழ ஒளி வீசி நிற்கின்றன.
ஏகபத்தினி விரதன் என்னும் அருமைப் பெயரைத் தனக்கே தனி உரிமையாக்கி இவ்வுத்தம சீலன் உயர்ந்து நிற்கின்றான். இப்புனித ஒழுக்கத்தை உலக மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மருவி நிற்கின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு இராமனைப் போல் அவர் குலமக்கள் ஆகின்றனர்.
குலமகன் என்பான் அயல் மனையாளை விழையான் என்றதனால், விழைபவன் இழிமகன் என்பது வெளியாய் நின்றது.
கீசகன் துரோபதையைக் கண்டு ஆசை மீக்கொண்டான். ஒரு நாள் அருகில் நெருங்கி மறுகி வேண்டினான். அப் பதிவிரதை உள்ளம் பதறி அவனை எள்ளி நோக்கி ஒதுங்கி ஒழியும்படி உணர்வுரைத்தாள். சீறி மொழிந்த அத்தீர மொழிகள் நெறிகேட்டின் நீசங்களை விளக்கி அறிவூட்டி ஆர்த்து ஒளி நீட்டி வந்தன.
* (வில்லி பாரதம் இரண்டாம் பாகம், கீசகன் வதைச் சருக்கத்தின் முதற் பத்தொன்பது கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களுமாகி வந்த கழிநெடிலடி நான்கு கொண்ட எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் ஆகும்.)*
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் / மா விளம் விளம் விளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(இப்பாடலில் ஓரிரண்டு இடங்களில் விளச்சீருக்குப் பதில் மாச்சீர் வருகின்றது)
கூறு கின்ற மொழிகளுக் குத்தரங்
..கொடாது நின்றதொர் கொம்பரின் வாய்மறைந்(து),
ஏறு கின்ற பழிகளும் பாவமும்
..இம்மை தானும் மறுமையும் பார்த்திலை,
மாறு கின்றிலை சொல்லத்த காதபுன்
..மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும்வந்(து),
ஆறு கின்ற குடைநிழல் வேந்தனுக்(கு)
..அழிவு செய்தி யறிவிலி போலுநீ. 5 கீசகன் வதைச் சருக்கம், இரண்டாம் பாகம், வில்லி பாரதம்
என அறிவுரை கூறினாள்; கூறியும் அவன் மீறினான். பாஞ்சாலி அவனைச் சீறி வைது செயிர்த்து இகழ்ந்தாள்.
மார சாயகத் தாலுயிர் மாளினும்
..வசையி லாத மரபின்வந் தோர்பிறர்,
தார மானவர் தம்முகம் பார்ப்பரோ
..தக்க வர்க்குத் தகவிவை யேகொலாம்,
சோர னாதலிற் சொற்றாயி னித்தவிர்
..சுரேசர் ஐவர்தங் காவலென் றோளிணை,
வீர போவென் னருகுறில் ஆவிபோம்
..விழித்தி மைக்குமுன் என்றுவி ளம்பினாள். – 6, கீசகன் வதைச் சருக்கம், இரண்டாம் பாகம், வில்லி பாரதம்
உயர்ந்த குல மரபில் பிறந்தவர் உயிர் போக நேர்ந்தாலும் அயல் முகம் பாரார் என இக்குலமகள் அப்புலை மகனுக்குப் போதித்திருக்கும் வேகத்தையும், விவேகக்கையும் பார்க்க.
நிலை திரிந்து புலையான இழிசெயலை விழைந்து களித்தவன் புலைமகன் என நின்றான். ’நச்சி இழிந்து நவை உழந்து’ என்றது பிறர்மனை விழைவால் உளவாகும் இழிவுகளையும் பழி துயரங்களையும் தெளிய வந்தது. நவை - குற்றம், தீமை;
கலி விருத்தம்
(காய் மா காய் மா)
மடத்தகைய நல்லார் மனம்கரிய மாற்றார்
பிடர்த்தலைஒள் வாள்போல் பிறர்மனைகள் சேரின்
எடுப்பரிய துன்பத்(து) இடைப்படுவர் இன்னா
நடுக்குடைய காமம் விடுத்திடுதல் நன்றே, 2871 பிறவிகள் அறவுரை, முத்தி இலம்பகம், சிந்தாமணி
இளமை சான்ற மங்கையராகிய தம் மனைவியர் மனம் வருந்த, பகைவர் கழுத்தில் வைத்த ஒள்ளிய வாளைப் போற் கொடிதாகிய பிறர் மனையாளைச் சேர்தலைக் கொள்ளின் தாங்கற்கரிய துன்பத்தினிடையிலே அழுந்துவர்; ஆதலால், துன்பமாகிய நடுங்குதலையுடைய காமத்தினைக் கைவிடுதல் நல்லது.
தன் கழுத்தில் பகைவன் வைத்த வாள் போல்வது பிறர் மனைவி தோள்!. அதனைச் சேராதே’ சேரின் தீராத் துயரங்கள் நேரும் என நேர்வதை நினைவுறுத்தி இது உணர்த்தியுள்ளது.
நேரிசை வெண்பா
அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்ன(து) உடைத்து. 87 நாலடியார்
அயலான் மனைவியை மருவுதல் பாம்பின் தலையை நக்குவது போலாம் என இது உரைத்திருக்கிறது. கொடிய அபாயம்; உயிர்க்கேடு விளையும்; அதனை ஒழியவிடுக என உணர்த்துகிறது.
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
பெண்ணின் ஆகிய பேர்அஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன(து) ஆயினும் ஏதில்பெண் நீக்குமின். 15 வளையாபதி
பர தார கமனம் அளவிடலரிய துயரங்களையுடையது; அதனை யாதும் காதலியாதே என இது போதித்திருக்கிறது.
ஏதில் பெண் - அயலான் மனைவி, அஞர் - துன்பம். பழியும் துயர்களும் நெடிது விளைத்துக் குடிகேடு செய்தலால் பிறர்மனை நயத்தல் கொடிய தீது என மேலோர் இங்ஙனம் கடிது விலக்கியிருக்கிறார். சிச்சி என்றது இகழ்ச்சிக் குறிப்பு. சீ என இகழ்ந்து ஓட்டுவது நாயையே; ஆதலால் அந்த இகழ்நிலைக்கு நீ போயழியாதே என்.று புலனுறுத்தியதன் நலன் அறிந்து தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.