துறவு 3 - கலி விருத்தம் - வளையாபதி 44
கட்டளைக் கலி விருத்தம்
தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய்நில விற்கழி(வு) எய்தின
நானம் தோய்குழல் நமக்குய்தல் உண்டோ
மானம் தீர்ந்தவர் மாற்றம்பொய் அல்லவால். 44 வளையாபதி
பொருளுரை:
கஸ்தூரி முதலிய வாசனைப்பொடிகள் தோய்ந்த கூந்தலையுடைய நங்காய்!
யாமோ கழிந்த நம் வாழ்நாளிலே ஈதல் முதலிய நல்லறங்களைச் செய்திலேம்;
முதுமைப் பருவமெய்தியும் தவவொழுக்கமும் மேற்கொண்டிலேம்;
மாண்பிறந்த மானம் முதலிய குற்றங்களினின்றும் விலகிய சான்றோர் கூறிய அந்நல்லறங்கள் பொய்மையுடையன அல்லவே;
அந்தோ அரிது பெறுமிம் மக்கட் பிறப்பில் நமக்குற்ற வாழ்நாள் எல்லாம் காட்டில் எறிந்த நிலாப்போல வறிதே கழியப்பெற்றேம்;
இனி நமக்கு உய்தியுண்டாகுமோ என்ன செய்வோம் என்பதாம்.
விளக்கம்:
இது வாழ்நாளிற் பெரும்பகுதியைக் காமநுகர்ச்சியிலே கழித்துக் காமஞ் சான்ற கடைக்கோட் நாட்களில் தன் வாழ்க்கைத் துணைவியை நோக்கி ஒரு காமுகன் இருங்கிக் கூறியதென்க.
இல்லிருந்து வாழ்ந்தோம் ஆயினும் அறஞ் செய்திலேம். முதுமையும் வந்து பெரும்பகுதி கழிந்தது. தவமும் செய்திலேம். இப்பொழுதோ இன்ப நுகரும் ஆற்றலும் இழந்தோம்.
சான்றோர் கூறிய நல்லறம் பொய்யல்ல. அங்ஙனமாகவும் அவற்றையும் மதித்தொழுகினோமல்லேம். சாவு அணுகிவிட்டது இனி; யாம் என் செய்தும். நமக்கு எய்திய வாழ்நாள் காட்டில் பொழிந்தநிலா ஒளிபோலப் பயனற்றதாய் முடிந்தது என்று இரங்கிய படியாம்.