நெடுஞ்சாலை புத்தன் ...
நடக்கப்பழகிய காலம் முதல் - இன்று
நடந்துகொண்டிருக்கும் காலம் வரை ..
அந்த மனிதனை கடக்காமல் - எந்த
சாலையும் முடிவுற்றதில்லை .
எந்த பேதமுமின்றி ஒரே சிரிப்பு
அனைவரிடத்திலும் ..
மயிர்களுக்கிடையே சுருங்கிப்போயிற்று
அவனது முகம் .
அது அவனது அடையாளம் .
வறுமை சிரிப்பும்
தூய்மையற்ற சுவாசமும்
அவனை இயக்குகிறது .
உலக பொருளாதாரமும் , தனி மனித சோறும்
அவனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அவன் ஒரு நெடுஞ்சாலை புத்தன்.
எந்த மரமும் அவனுக்கு தேவையில்லை.
பலரது ஞானம் அவனது மௌனத்தில் அடங்கிவிட்டது.
அவனது மரணம் பலரது பாவத்தால் முடிந்துவிட்டது.
நம்முடைய மரணம் அவனது சாலையை கடந்துபோகின்றது.