இலியிச்சின் கடிதங்கள் 11 முதல் 14பின் இணைப்புடன்
அன்புள்ள கருணாகரனுக்கு
இலியிச்.
நீதி நேர்மைகளை எதிரியிடமிருந்தும் என் தோழனிடமிருந்தும் வேறு வேறாக கற்று வருகிறேன். அவைகள் தன்னளவில் நம்பிக்கை மற்றும் அன்புக்குமான துல்லிய இடைவெளியில் தங்களை மாற்றவோ மாற்றிக்கொள்ளவோ தயங்குவதே இல்லை.
நான் என் அமைதியை இவ்விரண்டையும் வெறுப்பதில் மட்டும் அடைகிறேன்.
எவருக்கும் உரிய ஒரு நீதியும், நேர்மையும்
தங்களை சிதைத்துக்கொள்ள தயக்கம் கொள்வது இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
கீழே இறக்கி விடப்பட்ட குழந்தையை போல் சத்தியங்கள் இந்த இரண்டு செய்திகளுக்கு மத்தியில் தவழ்கிறது.
உலகம் தன் சாலைகளை எப்போதும் இவை ஒன்றிற்காவே திறந்து வைக்கப்பட்டு பின் அதையே விரட்டிக்கொண்டு செல்கின்றன.
ஒருவருக்கு வந்து சேர்ந்த துன்பம் பிற மனிதர்க்கு உரித்த ஒன்றல்ல என்னும் சிந்தனையில் இவைகள் கிளைத்து வளரவில்லை என்றபோதிலும் அதை பற்றியும் அதற்குள்ளாகவும் பேசி இருக்கிறதா என்பது தெரியவில்லை.
யுத்தங்கள் மனதுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது என் கவனமெல்லாம் அதன் மீதே இருக்கிறது.
நான் உலகம் உறைந்து போவதை பார்க்க முடிகிறது.
நீ நலமா?
இலியிச்
____________________________________
அன்புள்ள மேனன்.
இலியிச்.
நான் முன்புபோல் இல்லை.
சமீபத்தில் நான் அடைந்த திகைப்புகள் மனிதராசிக்கு உரியதில் கொண்டு சேர்க்க முடியாது.
சில குழப்பங்களை தாங்கி பிடிக்கும் அளவுக்கு மாறி விட்டேனோ என்று தோன்றுகிறது.
எழுதுவதில் வரிகள் முன் பின்னாக மாறி விடுகின்றன. இந்த நேரங்களில் நான் குடிக்கவில்லை என்பதும் நிச்சயம்.
நான் பதில்களுக்கு காத்திருக்கிறேன் என்பதை விடவும் காக்க வைக்கப்பட்டு இருக்கிறேன் என்று தோன்றுவதால் என் சமாதானங்கள் இளகி விட்டன.
நான் ஓடுவதற்கும் பாய்ச்சலுக்குமிடையே
நிரம்ப மறுக்கின்ற பரிமாணத்தின் தர்க்கங்களை உதாசீனம் செய்வதற்கு மறுக்க மாட்டேன். அங்கு உலகமும் தன்னையே வெறுத்து முடிந்தளவு தள்ளி மட்டுமே நிற்கிறது.
படைப்புகளில் பேசுகின்ற மனதையும் குரலையும் யாரோவென்றுதான் என்னுள் நினைக்கிறேன். அதுவே உண்மையும்.
உண்மைகள் தானாய் விழிப்பதும் பிறரை விழிக்க தூண்டுவதும் ஒரு நீளமான தொடர்ந்த அலறலுக்கு பின்புதான்.
அந்த அலறல் எனக்கு கேட்கிறது. அது தன் பிணியில் இருந்து முளைக்கிறது.
எந்த ஓய்வையும் விரும்பாது கட்டிக்கொண்டு விம்மி வெடிக்காது நீளமாய் ஒரே பேரழுகையாய் எனக்குள்
கேட்டுக்கொண்டே இருக்கிறது.
மரணத்தின் நிழல் சூழ்ந்த இந்த நாட்களை நான் மதிக்கிறேன்.
எனது கைகள் மனதை மட்டுமே பற்றி இருக்கிறது. இப்படியான அந்த பற்றுதல் வெட்கமூட்டும் ஒரு ஆதாரத்தை சார்ந்து இருப்பதை என்னால் ஏற்க முடியாது.
மேனன்.
எனக்கு என்னவாகி கொண்டிருக்கிறது என்பதை இப்போது கணிக்க முடியாது.
வாய்ப்பிருப்பின் சந்திக்க வேண்டும் நீ.
இலியிச்.
______________________________________
அன்புள்ள கார்த்தி.
இலியிச்.
உன் தந்தை விபத்தில் மரணமுற்ற செய்தி அறிந்தேன். நான் வர தவிர்த்தேன். அதற்கான காரணம் உனக்கு தெரியும்.
அசோக் அந்த துயரத்தை விட்டு உன்னால் மீள முடியவில்லை என்பதை சொன்னதும் நான் இதனை எழுதுகிறேன்.
உன்னை ஊக்கமூட்டும் நிலைப்படுத்தும் எந்த சக்தியையும் கொடுக்க இயலாது.
மரணம் மொழிக்கு அப்பாற்பட்டது.
நீ மரணத்தை புரிந்து கொள்ள வேண்டும். இன்றில்லாவிடினும் ஒரு நாளிலாவது.
அது வெறுமையை உருவாக்கி ஒரு கடமையை பொறுப்பை ஏற்படுத்தும்.
உறவுக்குள் இருந்த போலி மயக்கங்களை மரணம் உருவி செல்கிறது.
அடுத்த நாள் முதல் பல அடுத்த நாட்களில் இழப்பின் வலியை கூர்மையாக்கி கொண்டு செல்ல மரணத்தால் முடியும். நம் மனம் அதை காரணமின்றி நோக்கி கொண்டிருக்கும்.
இந்த நோக்குதல் சார்ந்திருந்த மனதின் வேதனை. அது தன்னை நிறுத்தி கொள்ள விரும்பாது. அதன் வேலை அதுவல்ல.
அது சரியாக இயங்கும்போது நீ தவறாக முடுக்கப்படுவாய். சிக்கல்களில் அது வாழ விரும்பாது.
மனதின் மரணம் குறித்த ஈர்ப்பெல்லாம் தன் இயலாமை மற்றும் இருப்பை குறித்த நேர்மையான நேர்மையற்ற கேள்விகளும் பயங்களுமே.
கார்த்தி...
வார்த்தைகளும் காட்சிகளும் உனக்கு ஒரு போதும் மரணம் பற்றிய உண்மைகளை சொல்ல முடியாது.
எந்த மரணத்திலும் நாம் தேடிக்கொண்டிருப்பது நம்மையே.
உனக்கு இதில் வெளியில் வர தோன்றினால் அப்பொழுது வந்து விடு.
எதனிலும் சலிப்புறும் மனம் இதனிலும் தன்னை விடுவிக்க முனையும்போது அதற்கு நீ உதவ வேண்டும்.
எந்த வாழ்க்கையிலும் அடுத்த கட்டம் என்ற ஒன்று இல்லை.
வாழ்வு நேரானது. அதன் பயணம் ஒரு நொடியில் இருந்து அடுத்த நொடியில் மாறுவது மட்டுமே. இதையும் நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் போதுமான எதிர்வினை அதை முழுக்க எதிர்ப்பதிலும் முழுக்க அனுசரிப்பதிலும் இருக்கும் ஓர் இடைவெளியில் வாழ்வது மட்டுமே.
மனம் எதை நிறுத்திக்கொள்ள விரும்பவில்லையோ அதையே நீதான் விரும்புகிறாய் என்று உணர வேண்டும்.
விரைவில் சந்திக்கிறேன்.
இலியிச்.
_______________________________________
இலியிச்சின் சில கடிதங்கள் மட்டுமே இப்போது பதிக்க முடிந்தது. மற்றவை வரும் காலத்தில் முடிகிறதா என்று காத்திருக்க வேண்டியதாகிறது.
இலியிச் தனக்குரிய வேண்டிய முன்
உதாரணத்தவர்களை விட்டு மெல்ல விலக ஆரம்பிக்கும் தருணம் முதலே அவன் கெட்டி தன்மையுடன் தன்னை துவக்க ஆரம்பிக்கிறான்.
அவன் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை இல்லை என்பதால் அவன் இயல்பாக மடைமைகளை தாண்டி விடுகிறான்.
இலியிச்சுக்கு கால்களும் மனமும் எங்கும் சிக்கி கொள்வதே இல்லை.
இலியிச் கருத்துக்களுக்கு ஏற்ப தன்னை வார்த்து புடம் போட்டு வாழும் நெறிகளுக்கு முதல் விமரிசகனாக இருந்தான்.
அவன் கடிதங்கள் மூலம் நாம் வரும் முடிவுக்கு அவன் வந்திருப்பானா என்றால் அது கேள்விக்குரியது.
இலியிச் திரும்பி பார்க்காத நதி.
அவனிடம் பொய்யான மயக்கமும் மெய்யான மயக்கமும் அறவே கிடையாது.
நான் நின்று கொள்ளும் இடத்தில் அவன் சுழன்று சென்று விடுவான்.
இலியிச் நம்பிக்கைகளையும் பவித்திரங்களையும் மெழுகி துடைத்து
நமக்கு நாமே ஒப்பிக்கும் ஆறுதல் மொழிகளை ஒழுங்குபடுத்தும் சித்திரம் அல்ல என்பதை உணரும்போது எனக்கு ஏற்பட்ட அவமானம் வெட்கம் கொஞ்ச நஞ்சமல்ல.
இலியிச் இருப்பிடம் வெகு விரைவில் தெரிந்து விட வாய்ப்புண்டு என்பதை என் நண்பன் பைரவேல் மீண்டும் என்னிடம் சொன்னபோது நான் அமைதியாக இருந்தேன்.
அவனை நான் சந்திக்கும்போது இந்த அலைச்சல்கள் பற்றி சொல்வது ஒரு விதத்தில் நான் அவனுக்கு செய்யும் அசட்டு காரியம் மட்டுமே.
இலியிச் உலகம் ஒரு மந்தமான பார்வையில் கூட பிரகாசமாக ஒளிரும்.
நான் வேஷம் போடவே இட்டுக்கட்டி வாழ்ந்து வருபவன். அதன் மௌடீகத்தில் குளிர்ந்து போய் மகிழ்பவன்.
இனி அவனை நான் சந்தித்து கேட்கவும் சொல்லவும் ஒன்றுமில்லை.
___________________________________