இலியிச் கடிதங்கள் 6 முதல் 10
அன்புள்ள செல்வராஜ்.
உன் கடிதம் கிடைத்தது. வாசித்த பின் மீண்டும் வாசித்தேன்.
இருப்பதில் மரியாதையை இழந்து விட்டேன். அந்த இழப்பு மிக கொடிது. கொடிது என்றபோதும் அதையே நினைத்து கொண்டிருக்கும் என் மனம் இன்னும் அவலமானது.
நான் உன்னிடம் எந்த பரிகாரமும் கேட்க விரும்பவில்லை. இதை எழுத தோன்றியதால் எழுதினேன் என்று
கடிதத்தின் மூலம் மனதை கரைத்து கொள்ள முயன்றிருக்கிறாய்.
மனம் கரைந்ததா?
உனக்கு அதை மீண்டும் நினைவு செய்யவே இக்கடிதம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உன் விவேகம் என்பது படித்து அறிந்த பின் நீ கடைபிடிக்கும் சூட்சுமம் அல்ல என்பதை நான் அறிந்தவன்.
இழப்புக்கு முன்னதாக இருந்த மனதொன்றில் நீ இதுகாறும் இருந்து வந்ததை அறிந்துகொண்டதும் உண்டான சரிவு இது.
இந்த சரிவு உன் நிஜத்தையும் புலன்களையும் ஓசைகளுக்குள் அழைத்து சென்றதை என்னால் அறிய முடிகிறது.
நான் ஸ்தம்பித்தேன்.
"மனம் எனக்கு பறைசாற்றுவதை கேட்டு கொள்ள திருடனை போல் இயங்க ஆரம்பித்தேன். அதன் அப்போதைய அழகியல்களை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை இலியிச்" என்று முன்பொரு முறை எழுதியதை நான்
நினைவுபடுத்திக்கொண்டேன்.
நீ வீரன் அல்ல. அதனாலேயே கோழையும் அல்ல.
உனக்கு சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை என்பதை வலியுறுத்தவே இந்த கடிதம் எழுதினேன்.
இழப்பு என்பது எது இருந்ததோ அதற்கு மட்டுமே. அது உனக்கோ எனக்கோ அல்ல.
மனைவி மற்றும் குழந்தைகள் நலமா.?
என் விசாரிப்புகளை தெரிவிக்க வேண்டும்.
அன்புடன்
இலியிச்.
___________________________________
நண்பன் பூஷணத்திற்கு.
இலியிச்.
என் குடும்பம் நிறுவனமாகி வருவதை நான் வேலையை இழந்த இந்நாட்களில் நன்கு அறிய முடிகிறது.
அண்ணார் அப்படியாக தம்பியார் இப்படியாக கோலோச்சி கொண்டிருக்கும் போது நான் அரைக்கை சட்டை லுங்கி பீடியுடன் பொது நூலகத்தில் இருப்பதை என் கூட்டு குடும்பம் அதன் நடவடிக்கை மூலம் துரத்த ஆரம்பித்து உள்ளது.
அவர்கள் ஒருநாளின் மீது இனிக்க நெய்து கொண்டிருக்கும் ஒட்டுக்களை கண்கொண்டு காணவும் சகிக்கவில்லை.
நான் அவர்களை போன்று இல்லை என்பதாலேயே எல்லாவற்றையும் இழக்க
போகிறேன் என்று நம்புகிறார்கள் என்று எழுதிய உன் கடிதத்துக்கு பதில்...
பூஷணம்... இலட்சிய வேட்கையுடன் வேலைகளை உதறிவிட்டு வருவது சரி அல்ல. உறவுகளை இன்றளவும் பிணைத்து கொண்டிருப்பது பதவி லேபிள்களும் உண்டியல் வருவாய்களும்.
நீ வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் என் விருப்பமும். அதில் எதை நீ இழந்ததாய் துடிக்கிறாயோ அதையே வேறு ஒருவன் அடைந்ததற்கு துடித்து கொண்டிருப்பான்.
அது தன்மானம், சுதந்திரம் என்றெல்லாம் தத்துவ பீடிகையுடன் வாசிக்கப்படுவது இன்று இங்கெல்லாம் சகஜமாகி விட்டது.
யானையை குளிப்பாட்டியவன் எருமையை குளிக்க வைக்க நேர்ந்தது ஒன்றும் உண்டியலை பாதிக்காது எனில் அப்போது அதுவும் குற்றமல்ல.
விபச்சாரத்தையும் தூய்மை செய்யும் ஒரே சக்தி பணத்திற்க்கே உண்டு. இவைகளை கருத்தில் கொண்டு உன் எதிர்காலத்தை
மனதில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இதற்கு அப்பாலும் நீ மறுத்தால் உன்னை பாசாங்குக்கு அப்பால் காண தவிக்கிறாய் உனது நிலைநிறுத்தல் அவசியங்களை மீறிய தேடலுக்குள் புகுந்து விட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
எந்த வாழ்க்கைக்குள்ளும் வாழப்போவது உனக்கு சாத்தியமெனில் யார் கருத்தும்
தொல்லை செய்ய முடியாது.
அம்பாசமுத்திரம் வரும்போது நிச்சயமாக
உன்னை சந்திக்கிறேன்
அன்புடன்
இலியிச்
_________________________________
அன்புள்ள விமலா.
இலியிச்.
ஒன்றை விட ஒன்று பெரிதாய் தெரிகிறது. நிற்கும்போது ஓட விரும்பும் கால்கள். நான் நேற்றைய தினத்தில் சரிந்து விழுந்தால் அதுதான் இன்றைய தினம் என்பது வெட்கமாய் தெரிகிறது.
இப்படி நீ எழுதிய கடிதத்தில் நான் லயித்து இருந்தேன்.
சரிதான்.
வாழ்க்கையை வேறெப்படி அழைத்து செல்வது? அதில் இடைத்தரகர்கள் பலர் உறவென்ற பெயரிலும் நிர்பந்தத்திலும்.
நாம் அந்நியர் என்பது யாரையோ அல்ல.
நமக்கு நாமே அவ்வண்ணமே இருக்கிறோம். நீ எழுதியும் வாசித்தும் உன் கறைகளை போக்கி கொள்வது இயல்பில் ஒரு தவம் போன்றதுதான்.
கறை என்பது கற்று கொண்டதும் நம்ப வைக்கப்பட்டதும் உருவாக்கியதில் சிக்கி கொண்டதும் யாரையும் தலையசைத்து ஏற்று கொள்வதும் என்ற பொருளில்.
உன் சில கடிதங்களை வாசித்தேன். அது மனதுக்கு கிளர்ச்சி தந்தது.
அனுபவங்களை மட்டும் வாழ்க்கை என்று நீ ஏற்று கொள்ளாத ஒரு பரிமாணத்தில் உன் கருத்துக்களை கையாளும் போது அது வாழ்வின் விசித்திரமான பல்வேறு பார்வைகளை இன்னும் தாக்குகிறது.
கற்பின் நெடி என்ன என்று கேட்கிறாய். ஒழுக்கம் காழ்ப்புணர்ச்சியின் வாள். அது வரலாற்று சம்பவங்களில் மீந்து போன பழைய சாதம் என்கிறாய்.
மனதின் தேகம் என்பது எந்த உறையால் மூடப்பட்டது. யாரால் மூடப்பட்டது?
கடவுளிடம் எனக்கான வேண்டுதல் என்பது கடைசியில் உன்னிடம் நான் பட்ட அவமானத்தை பழி தீர்க்கும் ஒன்றாகவே இருக்கிறது என்றும் ஓரிடத்தில் எழுதுகிறாய்.
நாற்புறத்திலும் என்னை தாக்குவது எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற போதனைகள் மட்டுமே.
என் கைகளை நீங்கள் அறுத்தபோது என் நாக்கை மறந்து போனீர்கள்.
கடமையில் பூரிக்கும் அன்பும் பாசமும் அறிவில் நடனமிடும் சாக்கடை குமிழிகள்.
இந்த வரிகளை நான் படிக்கும்போது பேராசிரியர் தாமஸ் நினைவுகள் வந்து வந்து போனது. அவர் சிந்தனையும் ஒடுங்கும் மனதுக்கு மருந்துதான்.
விமலா, உன்னை காப்பாற்ற இனி எதுவுமில்லை என்றபோது நீ அழிவுக்கும் அப்பால் சென்றுவிட்டாய் என்பதை நீயும் புரிந்து கொண்டிருக்கிறாய்.
கோட்டையம் வரும் நாளை நான் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
உன்னை சந்திக்கவே.
அன்புடன்,
இலியிச்.
___________________________________
அன்புள்ள ரஹீனா.
இலியிச்.
இன்று காலையில் நான் கிளம்பும்போது அன்பு என்றால் என்ன? என்று கேட்டேன்.
முடிந்தளவு யோசித்துவிட்டு நம்பிக்கை என்றாய்.
பேருந்தில் வந்து கொண்டிருக்கும்போது உன் பதிலை யோசித்து கொண்டே இருந்தேன்.
இப்போது கடிதமாக எழுதுகிறேன்.
மீண்டும் கேட்கிறேன்...ரஹீனா,
அன்பு என்றால் என்ன? அது உணர்வு என்று நீ முடித்து விட கூடாது. அப்படி எந்த முடிவும் அதற்கு சொல்லப்படவில்லை.
காதலும், பாசமும்,நட்பும் சுற்றி திரியும் மனதுக்குள் அன்பு தான் அதுவல்ல என்று சொல்லிக்கொண்டும் சொல்லாமலும்
உறைந்து இருப்பதை நீ பார்த்தது உண்டா? கவனித்தது உண்டா?
இல்லையெனில் இனியும் பார்க்க வேண்டாம். அந்தக்கதவின் தாழினை நீ
ஒருபோதும் திறந்து விடாதே.
புரிந்துகொண்ட அளவிற்க்கு அன்பு என்பது எதுவோ அதுவாகவே இருக்கட்டும். அதை அளக்கவோ, தீர்மானிக்கவோ அதில் ஒன்றும் இல்லை.
கண்ணீர் இழப்பை,பிரிவை,வலியை தெரிவிக்கும்போது அது அன்பை ஒருபோதும் சொல்லும் மொழியல்ல.
சில கண்ணீர் துளிகள் அப்படிப்பட்டதும் அல்ல. நீ எனக்காக சிந்திய கண்ணீரில் ஆயிரம் பூக்கள் மலரும் சக்தியுண்டு என்பது எனக்கு தெரியும். அது அன்பு.
உனக்காக நீ சிந்தும் கண்ணீரில் குருதியில் அதையே காண முடியாது.
நாம் அனைத்துக்கும் பழக்கங்களை மட்டுமே சார்ந்திருக்கிறோம். இவற்றில்
பழக்கம், சார்ந்திருத்தல் இந்த இரண்டும்
அன்புக்கு உரியது அல்ல.
நாம் இவற்றின் மூலம் பகிரும் அன்பு வெறும் இருவருக்கிடையில் இருக்கும் வெற்றிகரமான ஒப்பிடுகள் மட்டும்தான்.
தன்முனைப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும்
எந்த அன்பும் இறுதியில் கீறித்தள்ளி விடும். நாம் அன்பை அறியவும் உணரவும் சார்ந்திருத்தலை விட்டுவிட்டும் ஒப்பிடுவதை கைவிட்டும் முழுமையாக
பார்ப்பது ஒன்றே சரியான வழி.
அன்பை விளக்க முடியாது. ஏனெனில் அது ஒருபோதும் தன்னை பற்றி பேசாது.
வாழ்த்துக்களுடன்
இலியிச்.
__________________________________
அன்புள்ள மேனன்.
இலியிச்.
நான் இரு தினங்களில் அங்கு வருகிறேன். எப்போதும் போல் பெரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டாம். அது எனக்கு கூச்சமூட்டும்.
வருவதற்கான காரணம் அங்கிருந்து பனி நகர்வதை மீண்டும் ரசிக்க வேண்டும்.
முன்னதாக இங்கிருந்து தப்பிக்க வேண்டும். விரிவாக சொல்கிறேன்.
ஆடி மாதத்து திருவிழாக்கள் களை கட்ட ஆரம்பித்து விட்டது. நேற்று கோவில் வாசலை கடக்கையில் அங்கிருந்த ப்ரும்மாண்டமான ஸ்பீக்கர் முன்பு இரண்டு சிறுவர்கள் தன்வயம் இழந்து ஆடிக்கொண்டே இருந்தனர். அவர்களின் தகப்பனார்களும் இந்தத்தொழிலில் கரை கண்டு ஓய்ந்து போனவர்களாக இருந்து இருக்கலாம் என்றே தோன்றியது.
ஓசைக்கு பரபரக்கும் கால்களின் மனம் குறித்து அச்சம் மூள்கிறது.
அங்கு ஒலிபரப்பிய எல்லா பாடல்களும் ஏதோ ஒரு பெண் தெய்வத்தை கதறி கதறி அழைத்து கொண்டே இருந்தது.
ஐயையோ..ஐயையோ என்ற ஒப்பாரியின் டியூனில் மட்டுமே பாடகி நெஞ்சு வெடிக்க புலம்பியபடி அழைத்து உருகினாள். பெண் தெய்வம் குலுக்கி கொண்டே ஓடி வரும் காட்சி வந்து வந்து போனது. தளர்ந்து போனேன்.
ஆன்மீகம் வறட்டு கூச்சலுக்கு முன்பு எப்படி சுருண்டு போய் விடுகிறது. யார் இதை அவர்களுக்கு சொல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஆன்மீகமும் இறைவனை தேடி தேடி என்னை புடம் போடுவதும் இயலாத ஒன்று.
ஆன்மீகத்தில் அகன்ற பின்னர்தான் மடங்களின் அட்டஹாசத்துக்கு இணையான பெரியார் குடில்களையும் ஒப்பிட்டு கண்டறிந்து விலக முடிந்தது.
ஆயினும் இன்னும் ஏன் திருவிழாக்கள் இப்படி ஸ்பீக்கர் சத்தத்தில் மட்டும் திகு திகுவென எரிந்து கொண்டிருக்கிறது.
கடவுள் முதலில் தன் காதுகளை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
இம்முறை நான் தகழிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்துதான். அதையும் முன்பே தெரிவித்து விட்டேன். நேரில் நாம் பேசிக்கொள்ள இன்னும் வாசித்துவிட்டு வருகிறேன்.
இலியிச்.
___________________________________