இலியிச் கடிதங்கள் 1 முதல் 5 வரை

அன்பார்ந்த திருச்செல்வன்.

இலியிச்.

நாம் பேசிக்கொண்டிருந்த பலவற்றை இப்போது நினைவுபடுத்தி பார்க்கிறேன்.

உன் வெறுப்பு புரிகிறது.

நான் அர்த்தங்கள் வேண்டி வெறுக்கும் ஒன்றை நீ புரியாமல் வெறுக்கிறாய்.

இந்த வெறுப்பை நாம் இருவருமே சற்று காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும்.

ஏதோ ஒரு இழப்பை நீ தாங்க முடியாமல் தவிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அது இன்னும் வர வேண்டிய ஒன்றோ வராமலே போய் விடும் ஒன்றோ? எனக்கு தெரியவில்லை.

நீ அதற்குள் மட்டுமே இருக்கிறாய். உன்னால் அங்கிருந்து செல்லவும் பின் நகரவும் முடியாத கஷ்டத்தில் இருப்பதை நான் அன்றே உணர்ந்து கொண்டேன்.

உனக்கு இழப்பீடு வேண்டும். நஷ்டங்கள் கரைய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஆறுதலாவது கிடைக்க வேண்டும்.

என்னிடம் இவை எதுவும் இல்லை என்று அன்றே உனக்கு சொல்லி விட்டேன்.

நீ தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று என்னால் இன்னொரு கற்பனைக்கு அழைத்து செல்ல முடியாது.

அது குற்றத்தின் இன்னொரு இழை. நீ விட்டு கொடுக்க வேண்டிய எதையும் உன் மனம் விட்டுக்கொடுக்க முனையாது.

இந்த போரை நிறுத்த முடியாதும் அதனில் இருந்து விலகி கொள்ள முடியாதும் இருந்த தருணத்தில் மட்டுமே நாம் அன்று சந்தித்து இருக்கிறோம்.

உனக்குரிய  தீர்வுகள் என்னிடமோ அல்லது உன்னிடமோ இருக்க வாய்ப்பில்லை.அது காலம் மற்றும் உன் தெய்வங்களிடமும் இருக்க முடியாது.
அது பிறரிடமிருந்து வர வாய்ப்பில்லை.

அனைத்தையும் கைவிட்டுவிட்டு மறந்து போகவும் உன்னால் இயலாத ஒன்று.

ஆகவே இந்த துயரத்தை உன் மனம் மட்டுமே சுமக்கிறது.

இந்த மனம் என்றும் உன்னிடம் இருந்தது அல்ல என்பதை மட்டும் நீ புரிந்து கொள்ள வேண்டும்.

சிக்கல்களில் கிழிந்து போவதை விடவும் நீ உயிரூட்டி கொண்டிருக்கும் அந்த மனதை விட்டு அகல்வது எளிதானது என்றே நான் நினைக்கிறேன்.

அடுத்த மாதம் ஜெயமங்கலம் மீறு கண்மாயில் பறவைகள் வரத்துவங்கும்.

அப்போது நீ வர வேண்டும்.

அன்புமிக்க
இலியிச்.

________________________________________
ஃப்ரபஸர் சிவானந்தம்.

வணக்கம். இலியிச்.

நேற்று நீங்கள் சொன்னதுபோல் நான் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்.

அப்போது இரவு ஒன்பது மணி. தெரு விளக்கின் அடியில் பேசிக்கொண்டே இருந்தோம். நான் புறப்படும்போது மணி இரவு ஒன்றுக்கு மேல் ஆகியிருந்தது.


தான் மிகுந்த ஒழுக்கத்துடனும் ஒப்பற்ற நல்லவனாகவும் வாழ்ந்து வருகிறேன்.
சலிப்பூட்டும் இந்த வாழ்க்கையை நான் வெறுக்கிறேன் என்று அவர் சொன்னதும் எங்கள் பேச்சு உயர்த்தன்மையுற்றது.

ஒழுக்கமும் நல்ல குணங்களும் சர்வ நிவாரணியாக ஒப்பித்து வந்த காட்சிகள் எல்லாம் மெல்ல உடைந்து நொறுங்கி வரும் வேளையில் என் படைப்புகள் இயல்பில் மங்கி குன்றுகின்றன என்றார்.

சுருள் முடி சாமியாரின் ஆசிரமத்தில் வாழும் குத்தாட்ட பக்தையின் கவர்ச்சி என் படைப்புகளில் இல்லை.

நவீன அகலத்திரை தொலைக்காட்சிகள் வீட்டின் கூடத்து அரங்கில் தொப்புளை தொடைகளை, ஸ்தனங்களை குவிக்கிறது. என் படைப்புகளில் இந்த உறுப்புகளை திரட்டி கோர்த்து எழுத எந்த நியாயங்களும் இல்லை.

சிறுவர்களும் சிறுமிகளும் பெற்றோருடன் வாரிக்குடிக்கும் இந்த இன்பங்களை நான் இனி எழுதவே இயலாது என்பதும் எனக்கு நன்கு தெரியும்.

ஆன்மீகத்தின் செல்லரித்த  பழைய கற்பனைகளை அறிவியலோடு தொடர்பு செய்வது இனியும் பொருந்தா முயற்சி.

கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து இருந்த எனக்கு இவை இன்று முழுக்க அயர்வை மட்டுமே தருகிறது. களிப்பூட்டும் போதையாக மட்டுமே இந்தக்கால வாழ்க்கை மாறி விட்டது.

வாசகருக்கு உரிய வாழ்க்கையின் மீதான அக்கறை இப்போது என்ன எது என்பதே எனக்கு தெரியவில்லை. நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டார்.

அவருக்கு நான் ஆறுதல் மட்டும் கூறவே உள்ளூர விரும்பினேன்.

தலைமுறைகள் இஷ்டம் போல சிறகை விரிக்க தானே காரணம் என்ற எந்த குற்றவுணர்ச்சியும் அவரிடம் இல்லை என்பதை விடவும் அவை அத்தனையும் சாதுர்யமாக மறைத்தார்.

ஒரு எழுத்தாளனாய் அவர் பெற்ற வெற்றிகள் அனைத்தும் அவரையொத்த ஒரு கும்பலின் ரசிக சேட்டைகள் மட்டுமே.
அவரால் முடிந்த அளவு வரலாற்று கதைகளை எழுதி குவித்தது மட்டுமின்றி சமகால பிடுங்குகளை இரைச்சல்களை துயரங்களை ஒருபோதும் தன் வாசக முத்துக்களுக்கு உணர்த்தவே இல்லை.

இந்த எழுத்தாளரின் இந்த இலக்கிய பேட்டைத்தனத்திற்கு அவரின் ரசிக கேடிகள் கூழுற்றும் திருவிழா நடத்தி திகைக்க வைத்து வாழ்ந்த காலம் சற்றும் எதிர்பாராது முடிந்து போனதை அவருக்கு தெரிவிக்க மனது வரவில்லை.

சற்று கழித்து அவர் குடும்ப விவரங்களை பேசி விட்டு தலை கவிழ்ந்தவண்ணம் நடந்து போனார். அவர் தொழுவத்து மாடுகள் முன்புபோல் நக்கி கொடுக்க மறுப்பதை தளர் நடை காட்டியது.


ஃப்ரபஸர்...

அந்த காட்சியை என் மனம் ரசித்தது.

போடிக்கு அடுத்த வாரம் வர நினைக்கிறேன். ஓய்வில்தானே நீங்கள்?

அன்புடன்
இலியிச்

___________________________________
அன்பார்ந்த கணேசனுக்கு

இலியிச்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் இட ஒதுக்கீடு முறையை எதிர்க்கிறேன். என் நண்பன் பஞ்சாட்சரம் முற்பட்ட வகுப்பினன். இதையே ஆதரிக்கிறான். இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று எழுதிய உனது கடிதம் வந்தபோது நான் ஒரு மலையக கிராமத்தில் இருந்தேன். ஆகையால் அதை நேற்றுதான் பார்க்க முடிந்தது.

நீ வாழ்ந்து வந்த சேரிகள் உன் பிள்ளைக்கு இனிமேல் இல்லை என்ற தளத்தை அடைந்தபின் அதில் இருந்து இயல்பாக வெளியேறி விட்டாய்.


பஞ்சாட்சரம் சேரி வாழ் பிரஜை அல்ல. அவரது கற்பனையில் இன்னும் சேரிகளும், அது சார்ந்த தொய்வுகளும் அப்படியே பிரமையாக இருக்கலாம்.

இட ஒதுக்கீடு யாருக்கும் எந்த  சமூக மதிப்பையும் அருளும் வரம் அல்ல. அரசு தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னதை வேறு வழியின்றி இந்நாள் வரையிலும் சமூகம் ஏற்று கடைபிடித்து வந்ததுதான் மொத்த அவலம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்ற இனத்தின் குரல்தான்  குஷன் நாற்காலியில் அமர்ந்த பின் தாழ்த்தப்பட்டவர் பதத்தை கொடுத்தது.

முரட்டு செல்வமும் வறட்டு சிலபஸ் கல்வியும் ஆங்கிலமும் ஒரு மனிதனை உயர்குடியாக மாற்றிவிடும் என்னும் சிந்தனை கீழ்த்தரமான அரசியல் பார்வை. பம்மாத்து நாடகம்.

ஆயினும் கேட்டார்க்கு கேட்ட வரம் அருளும் அரசியல்வாதிகள் இதை மட்டுமே சொல்லி வந்ததன் சீர்கேடும் இதுதான் என்பதன் சாட்சிதான் சேரிகள்.


இங்கு இட ஒதுக்கீடு வளர்ந்து வந்ததன் பின்னணி வயிற்றெரிச்சல் மட்டுமே. அந்த எரிச்சலை அவரவர்க்கு பிடித்த விதத்தில் பிடித்து வைத்து கொள்கின்றனர்.

சிலுவைப்போர்கள், தியானமென் சதுக்கத்து படுகொலைகள்,ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சூழ்ச்சிகள் இவற்றுடன் மண்டல் கமிஷனை சேர்த்து வைத்து பார்த்தாலும் அது புரிவதில்லை.

இதை சிந்தனையாக்கி பின் லட்சியமாக்கி பின் தத்துவமாக்கி பின் கொள்கையாக்கி அதனாலேயே பிளவுகளை உருவாக்கி பதவியில் குளிர்காய்ந்து காலம் சென்றதும் மெரினா சுடுகாட்டில் படுத்துக்கொண்ட அறிவுஜீவிகள் இந்தியாவின் வர்த்தக "ஜென்டில்மேன்"களுடன் கொஞ்சி குலாவிக்கொண்டு இருந்ததையும் மறக்க முடியாது. தவிர்க்கவும் முடியாது.

இந்து மதத்தில் அவர்கள் கட்டிய கூடுகள் எண்ணற்றவை. அதில் பிறந்த ஒவ்வொரு குஞ்சும் யாரையேனும் வாழ வைக்கவே தன் இன்னுயிரை ஈந்து கொண்டிருக்கும்.

உண்மையில் அதுதான் நடக்கிறதா என்பதை அந்த குஞ்சுகளின் சொத்துக்களும் வெளிநாட்டு பயணங்களும் பதவிகளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

ஒரு காலத்தில் எல்லா தெருக்களுமே சேரிதான். அனைத்து ஜாதியிலும் அதன் உட்குழுக்களிலும் அதன்குடும்பங்களிலும் தீண்டாமை இருக்கவே செய்தது.

பஞ்சாட்சரத்தின் பாட்டியை பஞ்சாட்சரம்
குளிக்காது தொட்டாலும் தீட்டு. அதை அவர்கள் மடி என்பார்கள். ஆச்சாரம் என்பார்கள். தீண்டாமை எனலாமா?

நாங்குநேரி கனகலிங்கம் பூணூல் அணிந்தாலும் கமுதி கமலஹாசன் பூணூல் அவிழ்த்தாலும் அவர்களின் ஜாதியை அவர்களிடமிருந்து பிரிக்காமல் பறிக்காமல் நோகாமல் காப்பாற்றுவது மட்டுமே நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசின் ரகசிய கடமை. அதை நன்கு நிறைவேற்றிய நாட்டில் நாம் இருப்பதன் சாட்சிதான் ஆணவக்கொலைகள்.


ஒரு இந்திய குடிமகன் தன் ஜாதி மதம் சார்ந்த அனைத்து பண்பாட்டு கலாச்சாரம், சம்பிரதாயங்களை முற்றிலும் முற்றாக கைவிட்டு விடுவதே ஜாதியை அழிக்கும் மருந்து.

மாறாக சவுண்ட் ஸ்பீக்கர் பொதுகூட்டமும்
ஜாதி சங்க மாமாக்களின் வாத, எதிர்வாத மஞ்சள் கட்டுரைகளும் வெறும் பொழுது போக்குகள் மட்டுமே. வழக்கம்போல
இதில் பாவம் கடவுளர்கள். அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.

கணேசன் தாழ்த்தப்பட்டவர்தான்.எனினும் இன்று வெற்றி பெற்ற சமூக குறியீடு. பஞ்சாட்சரம் முற்பட்ட வகுப்பினர்தான். அது வெற்றி பெற்ற வர்த்தக குறியீடு.

இந்த இரண்டுக்கும் நடுவில்  திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட சமூகங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற அரசியல் குறியீடு.

அம்பேத்கர் ஞானத்தின் உச்சமான சமூக நீதி என்பதன் உண்மையான அரசியல் பண்பாட்டு அர்த்தமே மனுநீதியை நவீன மனுநீதி தர்மமாக மாற்றுவதுதான். அது நிகழ்ந்திருக்கிறது.

இந்த நிகழ்வு அழிவே  இல்லாமல்  ஆயிரம் வருடங்களேனும் இருக்கும்.

வாழ்த்துக்களுடன்
இலியிச்.

___________________________________
அன்புள்ள ராஜத்துக்கு

இலியிச்.

தலைப்பில்லாத உன் கவிதை சற்றும் புரியவில்லை. அது எது பற்றியது என்பதை விடவும் நீ ஏன் இன்னும் இப்படியே எழுதுகிறாய் என்று பார்வதியிடம் கேட்டிருந்ததாக சொன்னாள்.

தலைப்பற்ற கவிதை என்பது உன் மனதுக்கான சுதந்திரம். நீ எதனுடனும் அதை பொருத்திக்கொண்டு வாசிக்கும் விடுதலையை அளித்து விடும்.

பொதுவில் புரிதல் என்பது இதுவரையில் நீ அறிந்த ஒன்றின் அறிவையோ மற்றும் அதன் பின் இயங்கும் கற்பனைகளையோ மட்டுமே சார்ந்திருக்கும்.

இவைகள் பெருமளவு வடிந்தும் மறந்தும் போகும்படியான சிந்தனைகள்.

ஒரு படைப்பு உனக்கு புரிந்த அளவிலும் உன் அனுபவங்களுக்கு மட்டுமே உரிய அளவிலும் இருக்க முடியாது.

ஒன்றை வாசிப்பது என்பதே கற்றலுக்கு இணையான ஒன்று.

கற்றல் என்பது பூத்து குலுங்குவதும் பின் மலர்வதுமான செயல்.

அது வெறும் பொறுக்குதல் அல்லது அள்ளித்திணித்தல் என்று ஆகாது.

மீண்டும் மீண்டும் மயக்கத்தில் கொண்டு சேர்க்கும் ஒன்றை படிப்பதும் பேசுவதும் தனக்குள் கட்டுப்பாடற்று சீரழிந்து போனதன் உச்ச அடையாளம்.

நீ கற்ற ஒன்றைக்கொண்டு மட்டுமே பொருட்படுத்த வேண்டிய ஒன்றினை நுண்ணறிவு கொண்டு தீர்மானிக்க முடியும்.

அதற்கு வாய் சவடால்களும், அரட்டையும் துணை நிற்காது.

ஆக புரிதல் என்பது தேடலில் மட்டுமே ஆரம்பிக்க வேண்டும்.

நீ படித்ததைக்கொண்டு பயணப்படும் உன் மனதை சுதந்திரத்துடன் செல்ல அனுமதிக்க வேண்டும். அது தன் நுட்பத்தை கொண்டு அர்த்தங்களை ஆராயவும் அனுபவிக்கவும் அனுமதிக்க வேண்டும்.

எழுதியவனை நோக்கி கேள்விகளை திருப்பி கொண்டிருந்தால் உன் பயணம் அவன் பயணமாகி விடும். அக்கணத்தில் உன்னை நீயே படைப்பாளிக்கு விட்டு கொடுக்கிறாய்.

இறப்பிற்கு முன் படிக்க வேண்டியவை என்று சில புத்தகங்கள் உள்ளன. அதில் சிலவும் வாசிக்க முடியாது போனாலும் குற்றமில்லை.

ஆனால் இதை வாசிப்பதை விடவும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற படைப்புகள் நிறைய உண்டு. அதையே உன் மனம் மீண்டும் மீண்டும் விரும்பி வாசிக்குமேனில் நீ தற்கொலை செய்து கொள்வதில் எவ்வித தவறுமில்லை.


படைப்புகள் கண்ணாடி போன்றவை.

சில துலக்கியும் விளக்கியும் காட்டும். சில கீறி காயமாக்கி புரையோடி உயிரையும் குடிக்கும்.

இறுதியாக புரியாதது என்பது ஒன்றும் இல்லை. புரிந்த ஒன்றின் குழம்பி போன காட்சியேதான் புரியாதது என்பதும்.

இனி என் கவிதைகளை நீ படிக்கும் முன் யோசனைகளையும் திட்டங்களையும் மறந்து விட்டு படிக்க வேண்டும்.

பார்வதிக்கு மருதாணி வேண்டுமாம். நீ வரும்போது கொண்டு வரவும்.


_____________________________________
சௌமியா....

இலியிச்.


இந்த  இரவில் ஒரு கனவு.

இப்போது நான் பழவேற்காடில் ஒரு லாட்ஜில் தங்கி இருக்கிறேன். இங்கு வரும் முன்பாக உன்னிடம் தெரிவித்து வரும் மன நிலையில் நான் இல்லை.

கூட சில சிகரெட்ஸ், விஸ்கி, கேனோ உபநிஷத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

இப்போது கனவு.

தொடர்ச்சியாகவும் விட்டுவிட்டும் இருந்தது அந்த கனவு.


மலையுச்சியில் நான். மேகங்கள். மிக உயரம். கீழே விழுகிறேன். உயரத்தை உடைத்து விட்டால் நான் பிழைக்க முடியும்.

விழுகிறேன். பின் விழித்து கொள்கிறேன்.

ஒரு அறை. தனியே நான். இருள் அதற்குள் நகர்வதை உணர்கிறேன்.

நகர்வது இருளா? நானா? புரியவில்லை.

இரண்டு கனவும் முன் பின்னாக வந்து இருக்கலாம். அல்லது ஒரே சமயத்தில் கூட வந்ததோ? அல்லது கனவற்ற வெறும் நினைவுகள்தானா? புரியவில்லை.

தள்ளாடியபடி எழுந்து கொண்டேன்.

அறை முழுக்க சுற்றி நடந்து கொண்டிருந்தேன். அதன் பின்பு தூங்க எனக்கு விருப்பம் இல்லை. மணி இரவு இரண்டு இருக்கும்.

பஸ் ஸ்டாண்டில் கூட்டம் மிக குறைவு என்பது ஜன்னல் வழியே பார்க்கும்போது தெரிந்தது. இறங்கி சற்று நடக்கலாம் போல் இருந்தது.

கீழே இறங்கி போனேன்.

மணி நிச்சயமாய் இரண்டு இருபது. பஸ் ஸ்டாண்டில் இரண்டு பஸ்ஸை சுற்றி ஒரே கூட்டம். ஒரு சிலர் பஸ்ஸை சுற்றி சுற்றி வந்தனர். பேச்சு சத்தம். ஒவ்வொருவராய் உள்ளே போய் கொண்டு இருந்தனர்.

ஒரு சிகரெட்டை புகைக்க ஆரம்பித்து இன்னும் சற்று நடக்க ஆரம்பித்தேன்.

பஸ் ஸ்டாண்டின் சுற்று சுவரில் மூத்திரக்கறை அப்பிக்கிடந்தது. பன்றிகளும் சில கன்றுக்குட்டிகளும் விலகித் திரிந்தாலும் பரிச்சயத்தில் ஒன்றாய் திரிவது போலவே இருந்தது.

அப்போது அந்த பெண் வந்தாள். குழந்தை. மூன்று வயது இருக்கும். என் தொடைகளை தட்டி தட்டி கூப்பிட்டு தன் வயிற்றில் அடித்து கொண்டாள்.

சௌமியா...

நான் உறைந்து போய் விட்டேன்.

ஒரு குழந்தை விழித்திருந்து இறைஞ்சும் நேரமா அது? சற்று தொலைவில் அதன் சுற்றம் இருந்தது. அனுப்பி வைத்து விட்டு வெறிக்க பார்த்தது.

நான் அறைக்கு வந்து  இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்தேன்.

இருக்கும் விஸ்கி போதுமானதாக இல்லை. குடிக்க மனமின்றியிருந்தேன்.
குடிக்காது போனால் இறந்து போகவே விரும்புவேன்.

நாளை வந்தால் உன்னை சந்திக்கிறேன்.

இலியிச்.

___________________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (16-Jul-19, 5:52 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 46

மேலே