தமிழகத்தின் தனிப்பெரும் சகாப்தம் சிவாஜி கணேசன் --------------------ஜூலை 21 சிவாஜி நினைவு நாள்

ஜூலை 21 சிவாஜி நினைவு நாள்

மாலை மலர் 2019, ஜூலை 20ஆம் தேதி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

தமிழகத்தின் தனிப்பெரும் சகாப்தம் : சிவாஜி கணேசன்!

ச.நாகராஜன்

நடிப்புக்கு ஒரு திலகம்


அறிவியல் விளைவித்த அதிசயங்களுள் ஒன்று திரைப்படம். இந்தக் கலையில் பல்வேறு துறைகள் உருவாக லட்சக்கணக்கானோர் இதில் ஈடுபட்டனர். உலகெங்கும் இதுவரை சுமார் ஐந்து லட்சம் திரைப்படங்கள் உருவாகியுள்ளன என்பது மலைக்க வைக்கும் ஒரு செய்தி.

புதிதாக உருவான இந்தக் கலைக்கு இலக்கணம் என்பது இல்லை என்ற குறையைப் போக்க சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தார். காட்சிக்குக் காட்சி, கணத்திற்குக் கணம் மாறி ஓடும் திரைப்படக் கதையோடு ஒன்றி அதற்கு ஈடு கொடுத்து பாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி, ஆனந்தம் அடையச் செய்வது, அழ வைப்பது, கோபப்பட வைப்பது, சிருங்காரத்தில் தோய்ப்பது என்று உணர்வுகளின் உச்சத்தில் ஏற்றி கோடிக்கணக்கானவரை மகிழ்வித்தவர் சிவாஜி.

விழுப்புரம் சின்னையா கணேசன் எளிய குடும்பத்தில் பிறந்தவர். (தோற்றம் 1-10-1928 மறைவு 21-7-2001). இயல்பாகவே நடிப்புக் கலைக்கெனவே பிறந்தவர் போல நாடகங்களில் பிரகாசிக்க ஆரம்பித்தவர் 300 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துக் கொடிகட்டிப் பறந்தார். 9 தெலுங்குப் படங்கள், 2 ஹிந்திப் படங்கள், ஒரு மலையாளப் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றார்.

1952இல் திரையுலகில் நுழைந்தவர் இறுதி வரை தனது திறமையை மக்களின் முன் வைத்து மனமகிழ்ந்தார்; லட்சக்கணக்கானோரை மனம் மகிழ வைத்தார்.

நவரஸங்களையும் முகத்தில் தேக்கி வைப்பது, அதைக் கண நேரத்தில் காட்சிக்குத் தக காண்பிப்பது சிவாஜிக்குக் கை வந்த கலை.

கட்டபொம்மன் முதல் கர்ணன் வரை

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்தவர் தற்போது இல்லை. ஆனால் சிவாஜி கட்டபொம்மனை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அடடா! என்ன ஒரு கம்பீரமான தோற்றம்! ‘எங்களோடு வயலுக்கு வந்தாயா’ என்று வீர வசனத்தில் விளையாடும் குரல் வளமும், போரில் வீர கர்ஜனை முழங்கப் புறப்படும் பாங்கும் வார்த்தைகளின் வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. வீரத்திற்கு ஒரு திலகம் சிவாஜி கணேசன்.

தமிழ் மன்னன் ராஜராஜ சோழனை இன்று காண முடியுமா? முடியும் என நிரூபித்தார் சிவாஜி. படம் முழுவதும் தமிழனின் சிறப்பு ஓங்கி நிற்பதைக் கண்டு தமிழ் நெஞ்சங்கள் குளிரும்!

திருவருட்செல்வராக அப்பரை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி அருள் பொங்கும் முகத்தைக் காட்டினார் சிவாஜி. காஞ்சி பெரியவரை நினவில் கொண்டு நடித்தேன் என்று அவர் கூறினார்; பெறுதற்கரிய காஞ்சிப் பெரியவரின் பாராட்டையும் ஆசியையும் பெற்றார்.

மஹாபாரதத்தில் சிக்கலான ஒரு கதாபாத்திரம் கர்ணன். பலவித தர்மசங்கடங்களுக்கு ஆளான, ‘உள்ளத்தில் நல்ல உள்ளமான’, அற்புத கர்ணனைச் சொல்லால் வடித்து விட்டார் வியாஸர். அதை நேரில் காண்பிப்பது சாத்தியமா? சாத்தியமே என்று கணத்திற்குக் கணம் நிருபித்து மக்களை அதிசயிக்க வைத்தார் சிவாஜி.

தேசபக்தியை ஊட்டி சுதந்திரத்திற்கு வித்திட்ட கப்பலோட்டிய தமிழனான வ.உ.சியை அப்படியே லட்சக் கணக்கானோரின் முன் கொண்டு வந்து நிறுத்தியபோது கடைசியில் கிழிந்த கோட்டுடன் அவர் செல்வது நெஞ்சத்தை உருக்கி அழ வைத்தது.

போட்டியை விரும்பி ஏற்பவர் அவர். தருமியாக நடித்து சக்கை போடு போட்ட நாகேஷ் உற்சாக மிகுதியால் திரைப்பட வசனத்தில் இல்லாத சிலவற்றைத் தானே சேர்த்து நடிக்க, இதை அறிந்து கொண்ட அவர், “அட, எனக்கே தெரியாம, பிரமாதமா செஞ்சுட்டியே” என மனம் திறந்து பாராட்டினார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞனின் பாராட்டைப் பெற்ற நாகேஷ் அதைத் திருப்பித் திருப்பிக் கூறி பெருமிதம் கொள்வார்.


படமே ஒரு போட்டியில் தான் ஆரம்பம். கதையோ ஆனந்தவிகடனில் வெளியாகி ஆயிரக்கணக்கான வாசகர்களை வாராவாரம் கவர்ந்த நாவல்- கொத்தமங்கலம் சுப்பு எழுதியது – தில்லானா மோகனாம்பாள். பத்மினியும் சிவாஜியும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க இசைமேதை சிக்கல் சண்முகசுந்தரத்தை – நாதஸ்வர வித்வானை – அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி மகிழ வைத்தார் சிவாஜி.

28 விநாடிகளில் ஒரு குட்டிச் சரித்திரம்

கை கொடுத்த தெய்வம் படத்தில் பாரதியாராக சிந்து நதி மிசை நிலவினிலே பாடலில் அவர் காண்பிக்கும் முக பாவங்கள் ஒன்றே அவர் நடிப்புக் கலை மன்னன் என்பதைப் பறை சாற்றப் போதுமானது. ஆறு நிமிடங்கள் 18 விநாடிகள் நீடிக்கும் அந்தப் பாடலில் சுமார் 28 விநாடிகளில் அவர் காண்பிக்கும் முக பாவங்கள், கண்ணசைவுகள் …. என்ன ஒரு பெருமிதம்! நடிகர் திலகத்தின் குட்டிச் சரித்திரம் இந்தச் சில விநாடிகள்!

உடல் பேசும் மொழி

பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் பேசும் மொழிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிவாஜி கணேசன். ராஜாஜி பார்த்து மகிழ்ந்து போற்றிய படம் சம்பூர்ண ராமாயணம். அதில் அவர் சிவாஜியின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.

அயோத்தி ஒளியிழந்து களையிழந்து இருப்பதைப் பார்க்கிறான் பரதன். ஏதோ ஒரு தாங்கொணா விபரீதம் நடந்து விட்டதைக் குறிப்பால் உணர்கிறான். சாரதியை நோக்கி விரலை அசைக்கிறான். அந்த விரல் அசைப்பு எந்த நடிப்பையும் மிஞ்சிய மொழி. இப்படி ஒவ்வொரு படத்திலும் அவரது உடல் மொழியைச் சுட்டிக் காட்டும் கணங்களை மட்டும் தொகுத்தால் அது நடிப்புக்கான என்க்சைக்ளோபீடியாவாக மாறும்; எதிர்கால சந்ததியினருக்கு உதவும்.

அவர் பட்டத்தைத் தேடிப் போகவில்லை. அவரை நாடி விருதுகள் வந்தன. செவாலியே விருது. பத்ம பூஷண் விருது, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன

அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி நயாகரா நகருக்கு ஒரு நாள் மேயராக சிவாஜியை நியமித்து கௌரவப்படுத்தியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம். அமெரிக்காவிலிருந்து சிவாஜி வெற்றியுடன் வந்ததைப் பாராட்டி எம்.ஜி.ஆர் நடிகன் குரலில் எழுதிய கட்டுரை அவர்களின் இணக்கத்தையும் பரஸ்பர பாராட்டுதலையும் காண்பிக்கும் ஒன்று.

குடும்பத்தின் ஏற்படும் பாச உணர்வுகள், சிக்கல்கள் இவற்றை சிவாஜி நடிப்பில் கையாண்ட விதமே தனி.பாசத்திற்கு ஒரு பாசமலர், ஊனமுற்றவனாக வந்து நெகிழவைக்க ஒரு பாகப்பிரிவினை, படிக்காத மேதையாக வந்து அழ வைக்க ஒரு படிக்காத மேதை, எழுத்தாளராக வந்து பெருமிதப்படுத்த ஒரு பாவை விளக்கு, இரட்டை வேடத்தில் வந்து மாறுபட்ட நடிப்பை ஒரே படத்தில் காண்பிக்க ஒரு உத்தம புத்திரன் .. விவசாயியாக, நீதிபதியாக, வக்கீலாக, டாக்டராக .. எதை விட?! எதைச் சொல்ல??!!!!

சக கலைஞர்களை ஊக்கியவர்

சிவாஜி என்றாலே பாடல் காட்சிகளுக்கு ஒரு தனி மவுசு உண்டு. மேலை நாட்டு படங்களில் இல்லாத ஒரு அம்சம் இந்தப் பாடல் காட்சிகளே. அதை மெருகூட்டி ஆச்சரியப்பட வைத்தவர் சிவாஜி.

வசந்த முல்லை போலே வந்து, முல்லை மலர் மேலே, தேன் உண்ணும் வண்டு, போனால் போகட்டும் போடா – முடிவில்லாத பட்டியல் இது. இதில் அவர் காட்டும் சிருங்கார பாவங்கள் உள்ளிட்ட நவரஸங்கள் அவர் இதற்கெனவே பிறந்தவர் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.

பாடலைப் பதிவு செய்யும் ரிகார்டிங் போதும் அவர் அங்கு வந்து பாடகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம். கவிஞர்கள், இயக்குநர்கள், மற்றும் இதர தொழில்துறை நண்பர்களும் அவரைப் போற்றிக் கூறும் சம்பவங்கள் எண்ணிலடங்கா.

இப்படிப்பட்ட ஒரு திலகத்தை (கவிச் சக்கரவர்த்தி கம்பன் மிக உயரிய அரிதான பட்டத்தை சீதைக்கு மட்டுமே கொடுத்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. வனிதையர் திலகம் என சீதையை அவன் குறிப்பிட்டான்!) – நடிகர் திலகத்தைப் பெறத் தமிழகம் பெருந்தவம் செய்திருந்ததோ!

காலத்தால் அவர் பூதவுடல் மறைந்தாலும் அவர் புகழ் மறையுமா என்ன? அது எதிர்கால சந்ததியினருக்கு – குறிப்பாகத் திரைப்படத் துறையினருக்கு உத்வேகம் ஊட்டும்.

தமிழகத்தின் தனிப்பெரும் சகாப்தம்

சரி இப்படிப்பட்ட ஒரு மகோன்னத மனிதரை ஒரே வரியில் என்ன சொல்லி அழைக்கலாம்?

‘தமிழகத்தின் தனிப் பெரும் சகாப்தம் – சிவாஜி கணேசன்’ என்றே சொல்லி முடித்து விடலாம்!

ஆங்கில அகராதி Epoh making person -ஐப் பற்றி என்ன விளக்கம் தருகிறது? A human being marked with simplicity, clarity, and good sense beyond praise என்று தானே!

அப்படியானால் தனிப்பெரும் சகாப்தம் என்ற சொற்றொடர் நமது சிவாஜிக்குப் பொருத்தம் தானே!

****


Share this:
TwitterFacebookLinkedInEmail

எழுதியவர் : மலை மலர் (21-Jul-19, 2:22 pm)
பார்வை : 34

மேலே