கேரளாவில் கன மழை பம்பையில் வெள்ளம் ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை காசர்கோடுக்கு ரெட் அலர்

. திருவனந்தபுரம்:

கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக, கேரளாவின் காசர்கோடு மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின், இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே, இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 19 முதல் 22 வரை வயநாடு பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. நாளொன்றுக்கு 20 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால் இந்த எச்சரிக்கைவிடுக்கப்படும். ஜூலை 19 ம் தேதி மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கும், ஜூலை 20 ஆம் தேதி காசர்கோடு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விரிவுபடுத்தப்பட்டது. ரெட் அலர்ட் விடுக்கப்படுவது என்பது, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான எச்சரிக்கையாகும். ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள நான்கு அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், கரைகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களும் மேற்கண்ட நாட்களில் மிக அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அங்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்படவில்லை. கேரளா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதியில், வடமேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசுவதால் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஐந்து நாள் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள பதனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், இடைவிடாத மழையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பம்பை நதி பெருக்கெடுத்து ஓடுவதால், பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எழுதியவர் : வீரகுமார் (28-Jul-19, 4:09 am)
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே