கடல் நரம்புகள்

நீ

தலைகவிழ்ந்து நீங்கியதும்
வீடு பொறுக்கும் தனிமை
சிக்கி இழுக்கிறது கால்களை.

உன் எதிர்ப்பின் சொற்கள்
வழியும் சுவரிலிருந்து
வழிகிறது பகலும் பிற்பகலுமாக.

சுற்றி சுற்றி வருகிறேன்.

வீடொன்றையும் விழுங்கும்
பல்லி ஒன்று அலைகிறது
என் நிழல் பட்ட முற்றத்தில்.

நரகத்தின் தீப்புண்ணாய்
நேற்றைய தினம் புளித்தது
நமக்குள். உன்னால் என்னால்.

வரிகள் விரித்த வலியில்
சிதைந்து அலைகிறோம்

கடல் நரம்பொன்றில்
புகுந்த காற்றாய் தன்னந்தனியே.

வாஷிங் மெஷினில்
உழன்று உழன்று பேசும்

என் ஜாக்கெட் கொக்கிக்குள்
சிக்கிய உன் லுங்கியில்

அழுக்கற்று இருப்பது
இந்தக்கவிதை மட்டும்தான்.

எழுதியவர் : ஸ்பரிசன் (31-Jul-19, 8:08 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : kadal narambugal
பார்வை : 65

மேலே