இழிவாய்ப் பழிமிகுந்து பொல்லாமை ஆகும் புவிக்கு - நேயம், தருமதீபிகை 366

நேரிசை வெண்பா

உள்ளன்பில் லாத உருவும், உயர்கலையின்
தெள்ளறிவில் லாத திருவுநல் - ஒள்ளொளியுள்
இல்லா விழியும் இழிவாய்ப் பழிமிகுந்து
பொல்லாமை ஆகும் புவிக்கு. 366

- நேயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளே நல்ல அன்பு இல்லாத உருவமும், உயர்ந்த கலை ஞானம் இல்லாத செல்வமும், ஒளி இல்லாத விழி போல் இழிந்து உலகில் யாண்டும் பழி மிகுந்து படும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உருவம் உயிர் நிலையமானது; வடிவங்களுள் மனித தேகம் பெருமை மிகவுடையது. அத்தகைய அரிய உருவம் .பெறினும் இனிய அன்பு இல்லாத போது அது இன்னாதாயிழிந்து ஈனம் உறுகின்றது. குணம் குன்றியது மணம் குன்றி மடிந்து போகின்றது.

அன்பு ஆன்மாவின் இனிய பண்பு; அந்தப் பான்மை பதிந்துள்ள அளவே மனிதன் மேன்மை கனிந்து திகழ்கின்றான். செல்வம் மிகவும் சிறந்தது; ஆயினும் நல்ல கல்வி அறிவு இல்லையானால் அது புல்லிதாய் இழிந்து படுகின்றது.

கண்விழி பெரிதும் அருமையானதே; எனினும் ஒளி இல்லையாயின் அது ஈனமாய் இளிவுறுகின்றது.

அன்பில்லாத உருவினது இழிவினைத் தெளிவாக விளக்க இந்த இரண்டும் எடுத்துக் காட்டுகளாய் ஈண்டு அடுத்து வந்தன.

திருவும் உருவும் முறையே அறிவும் அன்பும் மருவிய போதுதான் இருமையும் இன்பமாய் அவை .பெருமை பெறுகின்றன; இல்லையானால் ஒரு பயனும் காணாமல் வீணாய் விளிந்து ஒழிகின்றன. உயர் இயல்புகள் உயிர் நிலைகள் ஆகின்றன.

நல்ல தன்மைகளைத் தழுவியுள்ள அளவே எந்தப் பொருளும் நன்மையாய்த் துலங்கி நலம் புரிகின்றது.

அன்புடைய மனிதன் பண்பு சுரந்து எங்கும் இன்ப நிலையமாய் இனிது திகழ்தலால் உலக மாதாவுக்கு அவன் உயர்ந்த தலைமைப் புதல்வனாய் நிலவி நிற்கின்றான். அவனைக் காணுந்தோறும், எண்ணும் போதும் சன சமுதாயம் தனியே உவகை மீக்கொள்ளுகின்றது. தன் உள்ளத்தில் அன்பு இல்லாதவன் ஒளியில்லாத விழி போலவும், அறிவில்லாத செல்வம் போலவும் புலையாய் இழிந்து புன்மையுறுகின்றான்.

’பொல்லாமை ஆகும் புவிக்கு’ என்றது அன்பு இல்லாமையால் விளையும் கொடுமையும் தீமையும் குறித்து வந்தது. பொல்லாமை - தீங்கு, இளிவு.

இனிய இரக்கமாகிய அன்பு நெஞ்சில் இல்லையானால் அக்த மனிதன் கொடியவன் ஆகின்றான்; ஆகவே சீவர்களுக்கு அவனால் அல்லல்கள் விளைகின்றன; அதனால் அவனது உருவத் தோற்றம் உலகிற்குத் தீது என நேர்ந்தது.

உயர்ந்த மனிதப் பிறப்பும் அன்பு குன்றிய பொழுது அவலமாய் இழிந்து படுகின்றது; அங்ஙனம் ஒழிந்து போகாமல் உள்ளம் கனிந்து நல்ல தயையுடன் ஒழுகி ஒல்லையில் எல்லை உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Aug-19, 2:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே