உள்ளம் உயர உணர்வுயர்ந்து நல்லின்ப வெள்ளம் பெருகி விரியும் - நினைவு, தருமதீபிகை 376
நேரிசை வெண்பா
உள்ளம் உயர உணர்வுயர்ந்து நல்லின்ப
வெள்ளம் பெருகி விரியுமே; - கள்ளம்
தினையளவு நெஞ்சினிடைச் சேர்ந்தாலும் தீதாய்ப்
பனையளவு துன்பம் படும். 376
- நினைவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உள்ளம் நல்லதாய் உயரின் உணர்வு ஒளி மிகுந்து பேரின்ப வெள்ளமாய்ப் பெருகி மிளிர்கின்றது; நெஞ்சில் தினையளவு கள்ளம் புகின் பின்பு பனை அளவு துன்பம் விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
மனிதன் புகழ்ச்சியை விரும்புகிறான்; இகழ்ச்சியை வெறுக்கின்றான். தன்னை உயர்ந்தவனாக எல்லாரும் சொல்ல வேண்டும் என்றே யாண்டும் அவன் ஏங்கி நிற்கின்றான். உயர்நிலை யாவும் உள்ளத்திலிருந்தே உதயம் ஆகின்றன. தன்னுடைய உயர்வை அயலிடமிருந்து நாடுகின்றவன் மயலுடையனாகின்றான். .
ஒருவனுக்கு உயர்வும் மகிமையும் தருவது உணர்வு. அந்த உணர்வு உள்ளத்தின் தகுதியால் ஒளி மிகுந்து உயர்கின்றது.
தாழ்ந்த நிலையில் வீழ்ந்து மனம் இழிந்து படாமல் உயர்ந்த நிலையில் அது வாழ்ந்து வரும்படி செய்தலை ’உள்ளம் உயர’ என்றது. உள்ளம் இளிவுறின் ஒளி இழந்த விழி போல் மனிதன் பழியுறுகின்றான். இழி நினைவு அழி துயராகின்றது.
மனிதனுடைய வாழ்வு யாவும் உள்ளத்தால் ஒளிபெற்று வருதலால் அதன் இயல்பும் இருப்பும் அறியலாகும்.
மனம், சித்தம், உள்ளம் என்னும் மொழிகள் ஒரு பொருளனவாய்த் தோன்றினும் நினைவின் வகையில் நிலை வேறுடையன. எண்ணல், சிந்தித்தல், உள்ளல் என்னும் வினை வேறுபாடுகளால் நினைவின் கூறுகள் நிலை பிரிந்துள்ளமையை நுணுகி உணர்ந்து கொள்ளலாம். இனிய நினைவுடையது தனி மகிமை அடைகின்றது.
உயிர் வாழ்க்கைக்கு உறுதி புரிந்து ஊக்கி வரும் ஆக்கம் எல்லாம் உள்ளத்தையே ஆதாரமாக நோக்கி யுள்ளது.
வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய(து) உயர்வு. 595 ஊக்கமுடைமை
மனிதனது உயர்ச்சிக்கு உள்ளம் மூல ஆதாரமாய் நிலைத்துள்ள உண்மையை வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார்.
இந்த உள்ளம் புனித நிலையில் கனிந்து நீர்மை சுரந்து நிலவின் உணர்வு கூர்மையாய் ஒளி மிகுந்த விளங்குகின்றது. அந்த இனிய உணர்வால் எல்லா இன்ப நலங்களும் எளிதில் வருகின்றன. வரவுகள் நினைவின் உறவுகளாயுள்ளன.
’இன்ப வெள்ளம் பெருகி விரியுமே’ என்றது உள்ளமும் உணர்வும் நல்லனவாய போது உளவாகும் ஊதியங்களை உணர்த்தி நின்றன.
நல்ல உள்ளத்தால் தெளிவான அறிவும், தெள்ளிய அறிவால் இன்ப வெள்ளமும் பெருகி வருதலால் யாண்டும் இன்பமே வேண்டி நிற்கும் மனிதன் முதலில் தன் உள்ளத்தை நல்லதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பாயது.
தனக்கு மகிமை தன் உள்ளத்திலேயே உள்ளது என்னும் உண்மையை ஒருவன் உணர்ந்து கொண்டால் அவன் அயலே மயலாய்ப் புன்மை புகான்; தன் நெஞ்சமே சான்றாய் யாண்டும் நன்மையே கருதித் தன்மை உயர்ந்து நிற்பான். தன் உள்ளத்தை அணுகி நோக்கவே இறைவனை அங்கே நுணுகி நோக்குகின்றான்.
எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
அறிவிலா மாந்தர் நல்லனென்(று) உரைக்க;
அல்லனென்(று) உரைக்கமற்(று) அவரால்
செறிபயன் உளதோ நெஞ்சமே! குளத்தூர்ச்
சிவபிரான் ஒருவனே அகத்துப்
பிறிவிலாத் துணையாய் உடனிருந்(து) அறிந்து
பெரும்பயன் அளிப்பவன் அவனே
நெறியினால் அறிய வேண்டுமென்று) இதனை
நினைந்திடாய் நன்றுநின் அறிவே. - குளத்தூர் அந்தாதி
தன் உள்ளத்தோடு மனிதன் ஒன்றி நின்றபோது இங்ஙனம் நல்ல ஞான நோக்குடன் உரையாட நேர்கின்றான்.
இனிய உள்ளம் தெய்வ மணம் கமழ்த்து இன்பம் தருகின்றது. இத்தகைய புனித நிலையத்தைப் புலை அடைய விடின் மனிதன் நிலை குலைந்து கெடுகின்றான்.
நல்ல உள்ளம் உணர்வும் ஒளியும் உதவி உயர் பேரின்பம் அருள்கின்றது. அது தீதாய்க் கள்ளமுறின் எல்லா நலங்களும் இழந்து பொல்லாத் துயரங்களைப் பொருந்தச் செய்கின்றது.
உள்ளம் கெடின் உணர்வு கெடுகின்றது; உயர்வு ஒழிகின்றது; துயரங்களும் பழிகளும் தொடர்ந்து வருகின்றன.
துன்ப விளைவுகள் தோயாதபடி உன் உள்ளத்தையும், நினைவையும் தூய்மை செய்து கொண்டு, இன்ப நிலையை எளிது தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.