மெய்யுணர்தல் - கலி விருத்தம் - வளையாபதி 45

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

பருவந்து சாலப் பலர்கொல் என்றெண்ணி
ஒருவந்தம் உள்ளத்(து) உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்(கு) உளன்என்னும் ஆறே. 45 வளையாபதி

பொருளுரை:

அச்சம் வருதற்குக் காரணமான துன்பத்தினின்றும் விடுவிக்கும் பேராற்றலுடைய இறைவன் ஒருவனே உளன் என்னும் மெய்யுணர்வு பெறுமின்: உலகிற்கு இறைவராவார் மிகப் பலர் என்று எண்ணியும்; துன்பம் வந்துற்ற காலத்தே இவை பிறரால் வந்ததென்று கருதி வருந்தி, இன்பம் வந்த காலத்து இவை யாம் தேட வந்தனவென்று கருதி உள்ளத்தே மகிழ்ந்தும் வாழ்வதனை ஒருதலையாக விட்டொழிவீராக என்பதாம்.

விளக்கம்:

உலகிலுயிர்களைத் துன்பத்தினின்றும் விடுதலை செய்யும் கடவுள் ஒருவனே என்றுணர்மின்!

பலர் உளர் என்று கருதி வருந்தாது ஒழிமின். இன்பம் வந்தகாலத்தே களிப்புறாது ஒழிமின்.

எல்லாம் ஊழின் செயலென மெய்யுணர்வோடு வாழக்கடவீர்! என்பதாம்.

இன்பதுன்பங்கள் ஊழால் வருவன; ஆதலின் அவை வருங்காலத்து மகிழ்தலும் வருந்துதலும் பேதமை என்பது கருத்து.

இறைவன் ஒருவனே உளன்; அவனடி பற்றினவரே இன்ப மெய்துவர்;

இறைவர் பலருளர் என்று கருதி. அவ்வழியில் உழல்வோர் துன்பமேயுறுவர் என்பார். சாலப் பலரென்றெண்ணி பருவந்து என்றார். பருவந்தும் உழத்தலும் எனல் வேண்டிய உம்மைகள் தொக்கன. ஒருவந்தம் - ஒருதலையாக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Aug-19, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 116

மேலே