மனம் கொண்டு மரம் வளர்ப்போம்- பகுதி 1

#மனம்_கொண்டு_மரம்_ வளர்ப்போம்

இந்தப் பூமித்தாயை இயற்கையின் பேரழிவிலிருந்து காக்க வேண்டுமானால், காட்டழிப்பை நிறுத்தி விட்டு இன்னும் 1.5 டிரில்லியன் மரங்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் சாராம்சம்.


பருவநிலை மாற்றம் (Climate Change) என்பது இந்த நாட்களின் பேசும் பொருளாக மாறி விட்டது. ஆர்ட்டிக், அண்டார்டிக் பிரதேசங்களின் பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகிக் கொண்டிருக்கின்றன, இதனால் கடலின் நீர்மட்டம் அதிகரித்து, கடலின் கரையோர நகரங்கள் (நம் சென்னை உட்பட) எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்குவதற்கான அபாயங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன என்று சூழலியல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் ஒவ்வொரு நாளும் அபாயச் சங்கு ஊதிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனாலும் அதை நாம் காதில் வாங்காமல் நம் வாழ்க்கைப் பயணத்தில் ஓடிக் கொண்டேயிருக்கிறோம், அதன் விபரீதம் புரியாமல்.


இது ஒருபுறமிருக்க, ஒவ்வோர் ஆண்டும் பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்துப் போவதும், இன்னொரு புறத்தில் கனமழை பெய்து வெள்ளக்காடாக மாறிப் போவதும் நம் செவிகளில் செய்தியாக விழுந்து கொண்டேயிருக்கின்றன.


இயற்கையோடு ஒன்றித்து வாழப் பழகிய மனித குலம் இயற்கைக்கு எதிராகப் போர் தொடுத்து, வசதி வாய்ப்பான வாழ்க்கைக்காக வாகனப் பெருக்கத்தையும், தொழிற்சாலைகளையும், குளிர்விப்பான்களையும் அதிகப்படுத்தியதால் அதிலிருந்து வெளியிடப்படும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற கரியமில வாயுக்களின் அபரிமிதமான உமிழ்வே இச்சூழலுக்கு மூல காரணம்.


இத்தகைய கரியமில வாயுக்களை உள்ளிழுத்து, நமக்குத் தேவையான உயிர்ம வாயுவான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இயற்கைத் தொழிற்சாலைகளாக இருந்தவை, இருப்பவை, இருக்கப்போவவை மரங்கள்.


மரம் சூழ்ந்த கானகங்களாக இருந்தவையெல்லாம் மாமனித பேராசையால் கட்டாந்தரைகளாகவும், பாலைவனங்களாகவும் மாறிக்கொண்டேயிருக்கும்.


... தொடரும்

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (2-Aug-19, 2:57 am)
பார்வை : 1593

மேலே