அறிவுயர்ந்த சாதியாம் என்று தருக்குவார் நின்றுயர்வது என்றோ நிலை - நிலை, தருமதீபிகை 386

நேரிசை வெண்பா

ஆதிநிலை யாதும் அறியார்; அறிவுயர்ந்த
சாதியாம் என்று தருக்குவார்; - கோதுமிக
என்றும் இழிவே இயற்றுவார்; ஈனரிவர்
நின்றுயர்வ(து) என்றோ நிலை. 386

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தமது ஆதி மூல நிலையை யாதும் உணராமல் யாம் உயர்ந்த சாதியினேம் என்று செருக்கித் தீமை புரிந்து இழிந்து நிற்கும் இழி நிலையாளர் உயர் நிலையை அடைதல் அரிது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறவியில் நேர்ந்துள்ள பழி துயரங்களுள் மனிதனாய்ச் செய்து கொள்ளுவன பல. எண்ணமும் பேச்சும் செயலும் ஈன நிலைகளில் படிந்து வரும்பொழுது அவன் இழிமகன் ஆகின்றான். இயலும் செயலும் இனியனவாயின் மனிதன் உயர்கின்றான்: அவை கொடியனவாயின் இழிவுறுகின்றான்.

பல இழி பிறவிகளையும் கடந்து படியேறி வந்துள்ள மனிதர் தமது நிலைமையை உணர்ந்து மேலும் உயர்ந்து உய்தி பெறாமல் வெய்ய நிலைகளில் அழுந்தி விளிந்து தொலைதல் வெந்துயராகின்றது. வந்த பயனை அடையாமல் மதி கேடராய் மாய்கின்றார்.

’யாம் உயர்ந்த சாதி என்று தருக்குவார்’. என்றது தீது வகைகளில் ஒன்றைத் திறந்து காட்டியது.

மனிதர் களித்து வரும் களிப்புகளில் குலத்திமிர் என்பது கொடிய செருக்காய் நெடிது .நீண்டு நீசம் பூண்டுள்ளது.

கல்வி, செல்வம், அழகு, அதிகாரம், குடிப்பிறப்பு முதலியன நல்ல பாக்கியங்களாய் மதிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பெற்றவன் பிறரை ஆதரித்தருளும் கடனாளி ஆகின்றான். அந்தக் கடமையை மறந்து களித்து நின்று பிறரை அவமதிக்க நேர்வது மயலான மடமை ஆகின்றது.

தான் குலத்தில் பெரியவன் என்றொருவன் செருக்கி நிற்பானாயின் அவன் மிகவும் சிறியவனாய் இழிக்கப்படுகின்றான். எவ்வகையிலாவது பிறரைத் தாழ்த்தித் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது சின்ன மனிதருடைய புன்மையாயுள்ளது. பொல்லாத் தருக்கு புலைப் பெருக்காகின்றது

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதரா கும்மே. 36 நறுந்தொகை

தன் குலம் உயர்ந்தது என்று புகழ்ந்து பேசும் புன்மகன் நிலைமையை உணர்த்தியிருக்கும் இதன் நுண்மையை நுனித்து நோக்குக. பிறரை இகழ்ந்து தன் உயர்வு கூறுவோன் மனிதப் பதராகின்றான். குல நலம் பேசுதல் புலை நிலையாகும்.

உயர்வெல்லாம் செயல் இயல்களின் நலங்களால் உளவாவன: அவ்வுண்மையை உணராமல் ஊனமுறுதல் ஈனமாகின்றது.

’ஆதிநிலை யாதும் அறியாரென்றது‘ அறிந்தால் தீது புரியார் என்பது கருதி வந்தது. சீவ கோடிகள் யாவும் கடவுளிடமிருந்தே வந்திருக்கின்றன. மனிதர் எல்லாரும் அவனுடைய பிள்ளைகளே என்னும் அறிவு சிறிது தோன்றினும் வறிதே குலநலம் பேசிப் புலையாட மாட்டார்.

அந்த அரிய ஆதி மூல நிலை தெரியாது போயினும், பிறந்துள்ள சாதி மூலங்களைக் கொஞ்சம் சிந்தனை செய்துணர்ந்தாலும் 'நான் சிறந்த சாதி' என்று பேச எவனும் நெஞ்சம் துணியான்.

ஒருவன் பெரிய சாதி என்று தன்னைக் குறித்துப் பெருமை பேசுகின்றான்; அங்ஙனம் பேசுகின்றவனை நோக்கி ஒருவன் கேட்கின்றான்: 'சாதி என்றால் என்ன? எதனால் அது பெரியது? அதனால் உனக்கு வந்தது யாது? என்னும் வினாக்களுக்கு அவன் விடை கூற வேண்டும். அங்ஙனம் கூற நேரின் அவன் கொண்டிருந்த குலச் செருக்கு குடிவாங்கிப் போகும். முன்னம் மாடாய் இருந்தவன் இப்பொழுது மனிதனாய் வந்திருக்கலாம்; இதில் செருக்குவது ஏன்? முன்னும் பின்னும் முடிவும் படிவும் எண்ணிப்பார்.

பிறந்த பிறப்பால் உயிர்க்குச் சிறந்த உறுதி நலனைச் செய்து கொள்ளுகின்றவனே உயர்ந்த பிறப்பினன் ஆகின்றான்; அல்லாதவர் எல்லாரும் இழிந்த சாதியினராய்க் கழிந்து போகின்றார்.

ஒழிந்து போகின்ற ஊனமான தேகநிலையை மாத்திரம் பற்றிச் செருக்கி நிற்பவர் ஞானசூனியராய் ஈனம் அடைகின்றார்.

என்னைத் தொடாதே! ஒதுங்கிப் போ! என்று பிறரைத் தாழ்த்திச் சொல்லுகின்றவன் பின்பு தாழ்ந்த சாதியனாய் ஒதுக்கப்படுகின்றான். தீண்டாதார் என்று இன்று தியங்கி நிற்பவர் யார் தெரியுமா? நாங்கள் மேலான சாதியார், நீங்கள் எல்லாரும் கீழானவர்கள் எங்களை யாரும் தீண்டலாகாது” என்று குலத் திமிர் மண்டி முன்பு கொடுமை புரிந்து வந்தவரே.

ஒத்த மக்களிடம் உரிமை செய்யாமல் பித்தமயக்கால் பிழை புரிந்தவர் பிழைபடலாயினார். பிறரைத் தாழ்த்தினவர் தாழ்ந்து வீழ்ந்தார்; தாழ்வாய்த் தளர்ந்து தவித்தவர் உயர்ந்து வாழ்ந்தார். வினையின் முடிவுகள் அதிசயமான வினோதங்களுடையன.

யாரையும் எவ்வகையிலும் யாதும் இகழ்ந்து பேசாதே; உனக்கு ஏதேனும் சில வசதிகள் வாய்த்தால் அவற்றைக் கண்டு செருக்காதே; அவை கொண்டு மற்றவருக்கு உதவி செய்தருளுக.

எய்திய பிறவியால் உய்தி பெறுவதே உயர் பிறப்பு; அல்லாதது இழி கழுதைப் பிறப்பு என மேலோர் வைது மொழிந்திருக்கிறார். இயல்பிலும் செயலிலும் பன்றி, நாய், கழுதை முதலிய ஈன மிருகங்களாய் இழிந்து நின்று தம்மை உயர்ந்த சாதியினர் என்று மனிதர் செருக்கிப் பேசுதல் மிகவும் அருவருப்பேயாம். ஞானக் கேடும் மானக் கேடும் மருவி வாழுதல் பெரிதும் ஈனமான பரிதாபங்களாய் யாண்டும் இழிந்து முடிகின்றது.

உயிர்க்கு உறுதி செய்து கொள்வது எதுவோ அதுவே புனிதமான உயர் பிறப்பு ஆகின்றது; அல்லாததைப் பொல்லாதது என்று நல்லோர் கருதி வருந்துகின்றனர்.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே. 9 பொது, ஆறாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)

3293 குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே. 4. பிறப்பவம் பொறாது பேதுறல், இராமலிங்கர்

குலந்தான் எத்தனையும்* பிறந்தே இறந்தெய்த் தொழிந்தேன்*
நலந்தான் ஒன்றுமிலேன்* நல்லதோர் அறம்செய் துமிலேன்*
நிலம்தோய் நீள்முகில்சேர்* நெறியார் திருவேங் கடவா*
அலந்தேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண் டருளே. - நான்காம் பாசுரம், பெரிய திருமொழி,
ஒண்ணாம் பத்து, ஒன்பதாம் திருமொழி, திருமங்கையாழ்வார்

குலந்தாங் குசாதிகள் நாலிலும் கீழ்இழிந்(து) எத்தனை
நலந்தான் இலாதசண் டாளசண் டாளர்கள் ஆகிலும்
வலந்தாங் குசக்கரத்(து) அண்ணல் மணிவண்ணற்(கு) ஆள்என்றுள்
கலந்தார் அடியார் தம்மடி யார்எம் அடிகளே. - நம்மாழ்வார்

உயர்ந்த ஞான சீலர்கள் உலக நிலையில் அமைந்துள்ள குல நலங்களைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளனர். ஆன்ம ஊதியத்தை அடைந்து கொள்ளுகின்றவனே மேலான சாதியான்; அவன் பிறப்பே சாலவும் உயர்ந்தது; அவனைத் தெய்வத் திருவினன் என்னும் உண்மையை இங்கே உணர்ந்து கொள்கின்றோம்.

மனித வாழ்வு நிலையில்லாதது; விரைவில் அழிவது; அது அழிந்து படுமுன் அடைய வேண்டியதை அடையாமல் இடையே தோன்றியுள்ள மாயத் தோற்றங்களில் மயங்கிக் களிப்பவர் மதி கேடராய் இழிவடைகின்றனர். அந்த இழிவில் வீழாமல் விழி திறந்து நோக்கி வழி தெரிந்து எவ்வழியும் ஒளி புரிந்துயர வேண்டும்.

சாதியில் பெருமை பாராட்டிப் பேசுவது பேதைமை; த்ன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துவது சின்னத்தனமாகும்.

எல்லாரையும் சமமாக எண்ணுக; ஒரு தாய் வயிற்றில் பிறந்த உரிமைத் துணைவராகவே எவரையும் கருதி வருக என்றும், அக் கருத்து கதி நலம் அருளும் என்றும், மதி நலமுடன் மருவி இதமாய் வாழுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-19, 6:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

மேலே