மனமொழிமெய் மாண்புடைய வாகி இதம்புரியின் ஒன்றும் உயர்வு - நியமம், தருமதீபிகை 396

நேரிசை வெண்பா

மனமொழிமெய் யாண்டுமே மாண்புடைய வாகிப்
புனித நினைவுசெயல் பூண்டு - இனியவே
என்றும் எவர்க்கும் இதம்புரியின் நல்வினையாய்
ஒன்றும் உயிருக்(கு) உயர்வு. 396

- நியமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனம் மொழி மெய் என்னும் மூன்று கரணங்களும் இனியனவாய்ப் புனித நிலையில் நிகழுமாயின் புண்ணியம் சுரந்து உயிர் உயர் நலனை அடையும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனுடைய உணர்ச்சிகள் மூன்று கரணங்களால் வெளிப்படுகின்றன. வெளியீடுகள் அயலே பரவி அவை பயன்படும் வகையில் நயன் படுகின்றன. தன்மை அளவு நன்மை உளது.

மனத்துக்கு மாண்பாவது எவ்வழியும் மாசு படியாதிருத்தல். இளிவான நினைவுகள் தோயாதிருக்கும் அளவே மனம் ஒளியும் உயர்வும் பெற்றுத் தெளிவடைந்து நிற்கின்றது.

யாண்டுமே என்றது எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையினும் யாதும் பழுது படாமல் விழுமிய நிலையில் உள்ளம் கெழுமியிருக்க வேண்டும் என்பதை விளக்கி நின்றது.

எண்ணமும் செயல்களும் யாண்டும் பரிசுத்த நிலையில் தோய்ந்திருக்குமாயின் அம் மனித வாழ்வு தவ மகிமையுடையதாய் மிகவுயர்ந்து ஒளி பெறுகின்றது.

தவம் தருமம் என்பன எல்லாம் ஆன்ம ஊதியங்களான மேன்மை நிலைகள். சீவ கோடிகளுக்கு இதவுரிமைகளாய் மருவி வருவன புண்ணியங்கள் எனப் பொலிந்து திகழ்கின்றன.

என்றும் எவர்க்கும் இதம் புரியின் நல்வினை. எஞ்ஞான்றும் எவ்வுயிர்க்கும் இத நலங்களை ஒருவன் செய்து வருவானாயின் அவன் புண்ணிய சீலன் ஆகின்றான்; ஆகவே எண்ணிய இன்ப நலங்கள் யாவும் இயல்பாகவே அவனிடம் எளிது வந்து சேருகின்றன. தருமம் அதிசய நிலைகளை அருளுகின்றது.

’உயிருக்கு உயர்வு ஒன்றும்’ என்றது ஆன்ம உய்தியின் அமைதி உணர வந்தது.

கீழ்மையில் இழிந்து துயரம் அடைவதை எவரும் விரும்புவதில்லை; மேன்மையில் உயர்ந்து சுகம் பெறுவதையே யாவரும் விழைந்து வருகின்றனர். உயர்வும் இன்பமும் தமது செயல் இயல்களிலேயே உறைந்திருத்தலால் அவற்றைப் புனிதமாகப் பேணி வருபவர் பேரின்ப நலனை அடைகின்றனர்.

நல்ல சத்துள்ள உணவுகளால் உடல்கள் வளம் பெற்று வளர்கின்றன; நல்ல உத்தம நினைவுகளால் உயிர்கள் ஒளி பெற்று மிளிர்கின்றன. இனிய உணவால் உடலை ஓம்புதல் போல் புனித நினைவால் உயிரை ஓம்பி வருபவர் புண்ணிய சீலர்கள் ஆகின்றனர்.

நெஞ்சத் தூய்மையும், இன்சொல்லும் மனிதனைப் புனிதன் ஆக்கி வருதலால் அவை இருமை நலங்களையும் அருளுகின்ற தரும சீர்மைகளாய்ப் பெருமை பெற்றுள்ளன. இனிய பண்புகளை மருவியுள்ள அளவுதான் வாழ்வு இன்ப நிலைகளை எய்தி வருகின்றது; பண்பாடுகள் குன்றிய பொழுது புண்பாடுகளாய்த் துன்பங்கள் தொடர்கின்றன.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

900
மனத்திலோர் தூய்மை இல்லை;
..வாயிலோர் இன்சொல் இல்லை:
சினத்தினால் செற்றம் நோக்கித்
..தீவிளி விளிவன் வாளா;
புனத்துழாய் மாலை யானே!
..பொன்னிசூழ் திருவ ரங்கா!
எனக்கினிக் கதிஎன்? சொல்லாய்!
..என்னையா ளுடைய கோவே. 30 திருமாலை, தொண்டர் அடிப்பொடி ஆழ்வார், முதல் ஆயிரம், நாலாயிர திவ்ய பிரபந்தம்

மனத்தூய்மை இல்லையானால் கதியில்லை என்பதை அதி விநயமாக இது காட்டியுள்ளது. பொறாமை, கோபம், குரோதம் முதலிய புன்மைகளை ஒழித்து தன்மையான எண்ணங்களையே நாளும் பழகி வருபவன் நலம் பல காண்கின்றான். இதமான நினைவுகள் இனிய அமுதங்களாய் இன்பம் தருகின்றன. நெஞ்சில் இனிய நீர்மைகளைப் பேணி; வாயில் நல்ல வார்த்தைகளைப் பேசினால், எல்லா நன்மைகளும் எளிதே உளவாகும் எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-19, 6:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

சிறந்த கட்டுரைகள்

மேலே