மனசின் பக்கம் - விடுமுறையும் நௌஷாத்தும்

வார விடுமுறையுடன் பக்ரீத் விடுமுறையுமாக ஐந்து நாட்கள் விடுமுறை... பகலில் எங்கும் செல்ல முடியாதபடி வெய்யில் அடித்துக் 'கொல்'கிறது. வெளியில் போனால் சுட்டபழமாக மட்டுமல்ல... வியர்வையில் குளித்துத்தான் திரும்ப வேண்டும் என்பதால் வீட்டுக்குள்ளேயே சிறைவாசம்தான்... வாசிக்க, எழுத, படம் பார்க்க, சமைக்க, சாப்பிடவெனவே மூன்றாம் நாள் நகர்கிறது. மாலை வேளைகளில் வெயிலைவிட வெக்கையே இன்னும் அதிகமாய்க் 'கொல்'கிறது.



தம்பி நௌஷாத் எழுதிய நான்கு புத்தகங்களைக் கொடுத்ததை முன்பே பகிர்ந்திருந்தேன். அதில் ஒரு புத்தகமான 'தடீச்சா பிரதா'வுக்கு அணிந்துரை எழுதியதால் ஒருமுறைக்கு இருமுறை படித்தேன். இப்போது 'கண்ணீர் வடிக்கும் முலைகள் யோனிகள்' என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். நௌஷாத்தைப் பொறுத்தவரை தலைப்பு ரொம்ப மோசமானதாக இருக்க வேண்டும் அது சிறுகதை என்றாலும் தொகுப்பு என்றாலும்... இந்தத் தலைப்பச் சொல்லும் கதை ஆப்பிரிக்காவில் காமுகர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முலைகளைச் சுட்டும் யோனிகளைத் தைத்தும் செய்யப்படும் கொடுமையைப் பேசுவதாய் இருக்கிறது.



இவர் எடுக்கும் கதைக்களன்கள் மிகவும் அற்புதமானவையாக இருக்கின்றன... அதை எழுத்து வடிவில் கொண்டு வரும் போது சற்றே சறுக்கி விடுகிறார். இதிலிருக்கும் கதைகளில் பெரும்பாலானவை முன்பே வாசித்தவைதான்... முதல் கதை அந்தப் புத்தகத்தை வாசிப்பவரை அடுத்த கதைக்கு இழுக்க வேண்டும்... கதையின் ஆரம்பம் இதற்குள் என்னவோ இருக்கிறது என்பதாய் அடுத்தடுத்த பாராக்களுக்கு நகர்த்த வேண்டும். இது இரண்டையும் செய்தாய் என்றால் உன் கதைகள் இன்னும் சிறப்பாகும் என இவரிடம் எப்பவும் நான் சொல்வது உண்டு. அதை தனது அடுத்த புத்தகத்தில் செய்வார் என்று நம்புகிறேன்.



கதை சொல்லியாக நகர்ந்து, கதாபாத்திரமே பேசுவதாய் சட்டென மாறும் பாங்கு இவரின் பல கதைகளில் பார்த்திருக்கிறேன். இந்தத் தவறை ஒருமுறைக்கு இருமுறை வாசிக்கும் போது திருத்த முடியும். அதை இவரும் கதையை அச்சிடுபவர்களும் ஏன் செய்வதில்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தத் தவறு இந்தத் தொகுப்பிலும் இருக்கிறது.



அதே போல் கதையின் ஆரம்பத்தில் இவர் பேசும் சமூகம் சார்ந்த கருத்துக்களும் இறுதியில் இவர் சொல்லும் அறிவுரைகளும் கதையை வாசிப்பவரை யோசிக்க வைத்து விடுகிறது. இவர் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் அப்படி வாசிக்கும் போது இவரின் எழுத்து நடையில் மாற்றம் வரும்... நிச்சயம் நல்ல கதைகளைக் கொடுப்பார். இன்னும் இவரின் இரண்டு கவிதைத் தொகுப்புக்களான 'என் மேல் விழுந்த மழைத்துளியே'', காதல் செய்ய விரும்பு' வாசிக்க வேண்டும்.



வாழ்த்துக்கள் நௌஷாத்.



கல்கி சிறுகதைப் போட்டியில் பிரசுரத்துக்கு உரிய கதைகளில் குடந்தை ஆர்.வி.சரவணன் அண்ணனின் சிறுகதையும் எனது நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான சத்யாவின் சிறுகதையும் தேர்வாகியிருப்பதில் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.



பார்வதி நடித்த 'உயரே' என்னும் மலையாளப்படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விரிவாக எழுதுவேன்... விருப்பமுள்ளவர்கள் யுடிப்பில் பாருங்கள்...



கழுகு-2 என்றொரு படம் செந்நாய்களின் தொல்லை என ஆரம்பித்து எங்கோ கொண்டு முடித்தார்கள். எப்படியெடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இயக்குநர்களுக்கு ரொம்பவே அதிகம். முடியல.



தொரட்டி என்றொரு படம்... இராமநாதபுரத்தில் ஆட்டுக்கெடை போடும் ஒருவரின் கதையாம்... ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னாங்க... இன்னும் இணையத்தில் வரலை... வந்ததும் பார்க்கணும்... ஆடு, மாடு மேய்க்கிறவனுங்க கதையின்னா அது நம்ம கதைதானே...



பிக்பாஸ் பார்க்காதேன்னு எனக்குப் பலர் அறிவுரை சொல்றாங்க... அதை ஒரு நிகழ்ச்சியாகப் பார்ப்பதில் என்ன தவறென்றுதான் எனக்குப் புரியவில்லை. என்னை பிக்பாஸ் ஒரு போதை வஸ்து அதைச் சுவைக்காதே என்று சொல்பவர்கள் எல்லாம் மெகாசீரியல்களைப் பார்க்கவில்லை என்று சொல்லட்டும் நானும் விட்டு விடுகிறேன்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (14-Aug-19, 1:22 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 62

மேலே