உறங்கிய கவிதை 2

என் கவிகளின் மானசீக குரு…
புது கவிகளின் அகராதி…
காலத்தாலும் அழிக்கமுடியாத கால் நூற்றாண்டு வரலாறு- அவன் ...

“வளர்ந்ததும் யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம் ¿ “
யாருமே அறியாத தந்தையின் தாலாட்டை உலகறிய செய்த தாயுமானவனே….
“ கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே “ –
இது ஒவ்வொரு தந்தையின் ஏக்கம்….

கிராமத்து மண்வாசனை அந்த பொட்டல்காடு ,புழுதி மேடு, கம்மா கரை இவையெல்லாம் நகரத்தின் பிள்ளைகள் அறிந்திராத ஒரு சொர்க்கம்…
“ வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்” இதுதான் கிராமம் இதுதான் எதார்த்தம்…
மழை பொய்த்த பூமியின் தாகத்தை
“எங்க ஊரு மேகம் எல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும் அப்போ நாங்க மின்னல் இல போட்டோ “-
இதை எல்லோரும் ஒருமுறையேனும் செய்திருப்போம் இதுதான் நிதர்சனம்….
“வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோம்... வெயிலைத் தவிர வாழ்க்கையில வேறு என்ன அறிஞ்சோம் “ அந்த ஊரில் வெயிலோடு தானே விளையாட முடியும்…
என்ன இல்லை உன் வரியில் நம்பிக்கை ஊட்டுவதாகட்டும் உன் போல் சொன்னவர் யாரும் இல்லையே
“ எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
புல் கூடத்தான் பூமியை பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்.. “எத்தனை பெரிய எனர்ஜி டானிக் இது…
எல்லாமே தனக்கு எதிராய் நடப்பதாய் தோன்றும் வேளையில்
“வவ்வாலை போலே நீ வாழ்ந்தால் பூமி எங்கும் தொங்கும் தோட்டம்” என்றாய்...
சுக்குநூறாய் மனமொடிந்து நொந்த நிலையில் “கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்…” இது தானோ வார்த்தைகளில் கரகோஷம்…
காதல்… பூ ,தென்றல் என்பதை எல்லாம் தாண்டி
“காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் “என்றாயே…
காதல் கொண்டவனின் மனதை இப்படியெல்லாம் கூடவா விவரிக்க முடியும்
“மரியாதை இல்லாம மனசு என்னை திட்டுதடி
உன் உன் பெயர சொல்ல சொல்லி உள்நாக்கு
கத்துதடி”
காதலர்கள் சந்திப்பில் “தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்”

“யாரும் வந்து போகாத கோவில் தீபம் போலே என்னை மாற்றும் காதல் என்று முடியும் நான் தேடும் தேடல் நீ இன்றி நான் நான் ஏதடி “
என்று அவனை தவிக்க வைக்கிறாய்…
அவன் ஏக்கத்தை “காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும் கரையும் என் நாழிகை “என கரை(க்)கிறான்..

அதே காதலில் ஊடல் கொண்டபோது “யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுதே….”
எல்லாக் காதலர்களுக்கும் ஆசைதான் “அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் “ நீயோ ஒரு படி மேலே போய் “வேறு யாரும் இங்கே இல்லாத பூமி நாம் வாழ “
எல்லா காதலனுக்கும் காதலியின் அத்தனை ஆசையையும் நிறைவேற்ற பெற்ற பேராசைதான்
இந்த காதலன் அதனால் தான் “யாரும் நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே நிஜமாக்கி வைப்பேன் “..
பிரிவு வந்தும்
“காயம் நாறு கண்ட பின்னும் உன்னை என் மனம் வெறுப்பதில்லை “
பிரிந்த காதலின் ஏக்கமாய் ….
“சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமோ…
சோர்ந்து போன என் கண்களின் சோகம மாறுமோ….
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமோ




ஒரு தலை காதலின் வலியை….
“யார் தன்னை பார்க்கவேண்டும் விண்மீன் தான் சொல்லுமோ
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜா பூ சொல்லுமோ..”
#Feel my love
“காற்றில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது “
இங்கு அன்பு இல்லை இல்லை காதல் மீண்டும் தான் பிரதானம்……




நட்பிலோ…
“உன் தோள்கள் ஏணியைப் போல்
ஏறி மிதித்தேன் தாங்கினாய்…
எழும் போது கை தந்து..
அழும் போது கடன் தந்து….
இளைப்பாற மடி தந்து எனக்கென வாழ்வது நீ தானே…..!”

எங்கள் வீட்டிலெல்லாம் இரண்டு மூன்று ஜன்னல்கள் இருக்கும்….
ஆனால் உனக்கெப்படி சாத்தியமானது “அந்த ஆயிரம் ஜன்னல்கள் வீடு….அன்பு வாழும் கூடு….”

“கல்லும் மீண்டும் வீடுகளில்லை…..
அன்பின் வீடோ அழிவது இல்லை….
வெறும் தரையில் படுத்துக்கொண்டு விண்மீன் பார்ப்பது யோகம் தான் “


சமூகத்தின் பேரில் எத்தனை அக்கறை
“காற்றின் முகத்தில் கரியை பூசாமல் காரை விட்டு சைக்கிள் வாங்கி பறக்க….”


காலத்தின் கணக்கை….
“நிகழ்காலம் கண்முன்னே…
வருங்காலம் கனவின் பின்னே
விதிபோடும் கணக்கிற்கு விடை இல்லையே….”

விடையில்லை அந்த விதியின் கணக்கில்
இல்லையெனின் எத்தனை சுலபமாய் எடுத்திருக்காதே உன்னை…..

ஆச்சர்யம் நீ…
நாள் இதை எழுதும் போதும் இதை யாரேனும் படிக்கும் போதும்….
சில நூறு செவிகளினேளும் உன் கவி புகுந்து கண்ணீரை உனக்கு காணிக்கை ஆக்கிக் கொண்டிருக்கும்….



உன் வரிகளை வார்த்தைகளை காதலித்த ரசிகைகளில் நானும் ஒருவள்
என் கவியின் ஆதியே…
இன்றும் தூக்கம் மறுத்த இரவுகளில் துணைக்கு வருகின்றன பாடல்கள்

வரிகளாய் வாழ்கிறாய் மீளா உறக்கம் கொண்ட கவியே….

கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகளில் அவருக்கான நினைவஞ்சலி….

எழுதியவர் : Geetha Paraman (14-Aug-19, 6:08 pm)
பார்வை : 234

மேலே