எண்ணிநீ ஊக்கி முயல்க உரிமையுனை நோக்கி அடையும் நுழைந்து - நிலை, தருமதீபிகை 388

நேரிசை வெண்பா

எண்ணியன எல்லாம் எளிதெய்தும் எண்ணாமல்
மண்ணாய் இழிந்து மடிகின்றாய்; - எண்ணிநீ
ஊக்கி முயல்க; உடையான் உரிமையுனை
நோக்கி அடையும் நுழைந்து. 388

- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நீ எண்ணிய நலங்கள் எல்லாம் எளிதில் வந்து கை கூடும்; எதையும் கருதி உணராமல் விருதாவாய் விளிந்து தொலைகின்றாய்; உண்மையை உணர்ந்து ஊக்கி முயன்றால் உடையவன் உரிமைகள் உன்னை நோக்கி விரைந்து வந்து புகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் எண்ணத்தின் ஏற்றத்தை உணர்த்துகின்றது.

மனிதனுடைய உயர் நலங்கள் யாவும் அவனது உள்ளத்திலிருந்தே விளைந்து வருகின்றன. உள்ளுவது என்பது ஊன்றி எண்ணுவது என்னும் குறிப்பை உணர்த்தி நிற்றலால் அதன் நிலைமையும் நீர்மையும் தெரியலாகும்.

எண்ணத்தின் தொகை, எண்ணும் வகை, எண்ணுகின்றவனுடைய தகை என்னும் இந்நிலைகளைத் தழுவியே பலன்கள் விளைகின்றன. விளைவுக்குரிய மூலம் வீறுடையதாயின் பயன்கள் சீருடன் செழித்து வரும். விழித்து முயன்றவர் வீடு காண்கின்றார்,

’அழுத பிள்ளை பால் குடிக்கும்; தட்டினால் கதவு திறக்கும்’ என்னும் பழமொழிகள் மனிதன் மடி மண்டியிராமல் யாண்டும் எவ்வழியும் கருதி முயலவேண்டும் என உறுதி நலங்களை உணர்த்தியுள்ளன. இனிய கருமங்கள் அரிய தருமங்களாகின்றன.

தன் உள்ளம் துள்ளி முயலாதொழியின் அந்த மனிதன் எள்ளி இகழப்படுகின்றான்; உள்ளம் ஓடிவரும் அளவே உயிரோட்டம் தெளிவாய் ஒளி பெற்று வருகின்றது.

’எண்ணியன எல்லாம் எளிது எய்தும்’ என்றது எண்ணத்தின் பயனும் நயனும் காண வந்தது. மனிதன் எதையும் அடையத் தக்கவன்; அவன் கருதிய உறுதி நலங்கள் யாவும் அவனுக்கு உரிமையாகின்றன; இகத்திலும், பரத்திலும் உள்ள எல்லாச் செல்வ நலங்களும் அவனை எதிர் நோக்கி நிற்கின்றன; தகுதியுடன் அவன் கருதிய அளவு கைவந்து கூடுகின்றன. ’சீவனது சிந்தனையில் சிவன் இருக்கின்றான்’ என்னும் இது மனிதனது மனநிலையையும், மகிமையையும்.உணர்த்தியுள்ளது.

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்
அந்தமில் இன்பத்(து) அழிவில் விடும்.

அடைய உரியவனாதலால் மனிதனுடைய நிலைமை எவ்வளவு தலைமையுடையது என்பது எளிது தெளிவாம்.

உள்ளம் தெளிந்து உறுதி நலம் கருதித் தருமம் தழுவிய பொழுது அரிய பேறுகள் எல்லாம் எளிதில் வந்து சேருகின்றன.

மனிதன் எல்லை காண முடியாத பெருமைகளையுடையவன்; தனது தகுதியை மறந்து தாழ்ந்து படுகின்றான்; உண்மையை ஓர்ந்து தெளியின் உயர்ந்து திகழ்கின்றான்.

Man is a stream whose source is hidden. - Over-soul

'ஊற்று மூலம் தெரியாத நீரோட்டம் போல் மனிதன் நிலவி நிற்கின்றான்’ என்னும் இது ஈண்டு உணரத்தக்கது.

உன் உள்ளத்தின் ஊற்றிலிருந்தே எல்லாம் பெருகி வருகின்றன. வெளியிலிருந்து ஒன்றும் வருவது இல்லை; அயலே மயலாய் எதையும் எதிர்பார்த்து ஏமாந்து நில்லாதே.

தோண்டிய அளவுக்கு நீர் வெளி வருகின்றது; நீ வேண்டிய அளவுக்குச் சீர் பெறுகின்றாய். உனது வேண்டுகோள் ஆண்டவனை நோக்கியதாதலால் அது யாண்டும் புனிதமும் தகுதியும் பொருந்தி நிற்க வேண்டும்.

பக்குவம் அடைந்து தன்னைத் தக்கவன் ஆக்கிக் கொண்ட பொழுது மிக்க மதிப்பையும் மேன்மையான பலன்களையும் மனிதன் மேவி விளங்குகின்றான். யாவும் அவன் உள்ளே அமைந்திருத்தலால் அந்த இனிய கருவூலத்தைப் புனிதமாகப் போற்றி வர நேர்கின்றான்,

ஞான நோக்குடன் உள்ளம் கருதாமல் கள்ளம் படிந்துள்ளவன் வெள்ளம் பெருகி வருகின்ற நல்ல ஊற்றுக் கண்ணை மாற்றி அடைத்தவனைப் போல் ஊனம் அடைந்து ஈனம் படுகின்றான்.

எண்ணாமல் மண்ணாய் இழிந்து மடிகின்றாய்! உணர்வு நாட்டம் குன்றி வீணே இழிந்து நிற்பவன் விரைந்து அழிந்து போகின்றானாதலால் அவனது நிலைமையை நினைந்து இங்ஙனம் இரங்கி வந்தது. அரிய பயனை இழந்து வறிதே.அழிவது பெரிதும் பரிதாபமாயது.

எண்ணி முயல்பவன் பொன்னாய் உயர்கின்றான்; எண்ணாது அயர்பவன் மண்ணாய் மடிகின்றான். மனம் மடிந்து மாளாமல் மதியுயர்ந்து வாழுக. உயர்ச்சி எல்லாம் முயற்சியில் உள்ளன.

’ஊக்கி முயன்றால் உரிமை உனை நோக்கி அடையும்’ என்றது எண்ணத்தால் விளையும் பாக்கியங்களை உணர்த்தி யருனியது. ஆக்கங்கள் யாவும் உன்.அகத்தே உள்ளன; மகத்தான அந்த உரிமைகளை மருவி இருமையினும் பெருமை பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-19, 9:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே