நல்லனாய்ப் பீடுபெற நிற்றியேல் வானும் நிலனும் பெற்றாய் பயன் - நியமம், தருமதீபிகை 398

நேரிசை வெண்பா

கேடுபிறர்க்(கு) எண்ணல் கெடுகுறியாம் கேண்மையுடன்
நாடுமருள் கொண்டெவர்க்கும் நல்லனாய்ப் - பீடுபெற
நிற்றியேல் வானும் நிலனும் நினக்குரித்தாய்ப்
பற்றினாய் பெற்றாய் பயன். 398

- நியமம், தருமதீபிகை, கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: பிறர்க்குக் கேடு எண்ணுவது தனக்கே கெடு குறியாம்; அங்ஙனம் எண்ணாமல் யாண்டும் கருணையுடன் யார்க்கும் நலம் புரிந்தால் அவன் வையகமும் வானகமும் கையகமாகக் கண்டு கழி பேரின்பம் பெறுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் நல்ல எண்ணங்களைப் பேணுக என்கின்றது.

தான் சுகமாய் வாழ வேண்டும் என்றே எந்த மனிதனும் என்றும் எண்ணி வருகின்றான்; அந்த வரவில் அயல் வேறு நேரின் துயர் ஏறுமாதலால் அது நிகழாதவாறு நடந்து கொள்வதே எவர்க்கும் இதமாம்; உள்ளம் கருதுவன உயிரின் அனுபவங்களாய் வருகின்றன. நல்ல கருத்து நலம் பல தருகின்றது; தீயது தீமைகளை விளைத்து விடுகின்றது.

’கேடு பிறர்க்கு எண்ணல் கெடு குறி’ என்றது வினையின் விளைவை நினைந்து கொள்ள வந்தது. தீய செயல்களுக்கும் கொடிய மொழிகளுக்கும் கெட்ட எண்ணம் மூல காரணமாயுள்ளது. கேடான நினைவுகள் பல தீமைகளைக் கூடமாக விளைத்து விடுகின்றன. தீய தொற்று நோய்கள் போல் கெட்ட எண்ணங்கள் சமுதாயத்தில் பரவிப் படுதுயரங்களை விளைத்தலால் அவை பாவங்கள் என வந்தன.

தன்னுடைய கெட்ட எண்ணம் அயலானுக்குக் கேடு புரிதலால் அது பாதகம் ஆகின்றது; ஆகவே அந்த எண்ணத்தைக் கொண்டவன் பாவியாய்க் கெடுகின்றான்.

தீயைத் தொட்டவனையும், நஞ்சைக் குடித்தவனையும் அவை கொல்லும்; அவ்வண்ணமே நெஞ்சில் கெட்ட எண்ணம் கொண்டவனை அது கெடுத்து ஒழிக்கும்.

பிறர்க்குக் கேடு எண்ணுகின்றவன் தனக்கே கொடிய கேட்டைச் செய்து கொள்கின்றான்: இதனை ஒரு சிறிதும் உணராமல் இருப்பது பெரிய மடமையாய்ப் பெரும்பழி ஆகின்றது.

இன்னிசை வெண்பா

பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை
பிறர்க்கின்னா தென்றுபே ரிட்டுத் தனக்கின்னா
வித்து விளைத்து வினைவிளைப்பக் காண்டலிற்
பித்து முளவோ பிற. 83 – அறநெறிச்சாரம்

பிறர்க்கு இடர் செய்கின்றவன் பித்தனிலும் பித்தன்; பேதையினும் பேதை என்று இது குறித்திருக்கிறது. அறிவு பாழாய்த் தனக்கே துன்பத்தை விளைத்துக் கொள்ளுகின்றமையால் மூடன், பித்தன் எனக் கேடன் இழிக்கப் பட்டான்.

ஒரு வித்தில் இருந்து பல விளைதல் போல் ஒரு கெட்ட எண்ணத்திலிருந்து பல கேடுகள் விளைந்து வருகின்றன. அவையனைத்தையும் அவன் அனுபவித்தே தீர வேண்டும்.

தனக்கே அல்லல் என்றுணர்ந்து பொல்லாத எண்ணத்தை ஒருவன் ஒழித்து விடின் அப்பொழுதே அவன் நல்லவன் ஆகின்றான், நலம் பல காண்கின்றான்.

உள்ளத்தில் தயையுடையனாய் எல்லார்க்கும் இதம் கருதி வருபவன் தரும சீலனாய்ப் பெருமை பெற்று வருகின்றான்.

மறுமையும் இம்மையும் அவனுக்கு உரிமையான உறுதி உணர’ வானும் நிலனும் நினக்கு உரித்தாய்ப் பற்றினாய்’ என்றது. மனம் புனிதமாய் நல்ல எண்ணங்களை எண்ணி வரவே புண்ணியங்கள் பொலிந்து வருகின்றன. அவ்வரவுகள் இருமையும் இன்பங்களாய் அப்புண்ணியவானுக்கு உரிமை புரிகின்றன. பண்ணிய பலன்கள் கண் எதிரே எழுகின்றன.

ஒருவன் புண்ணிய மூர்த்தியாய் உயர்ந்து சிறந்த இன்ப நலங்களை அனுபவிப்பதும், பாவியாய் இழிந்து படு துயரங்களை அடைவதும் அவனுடைய எண்ணங்களாலேயாம்.

இவ் வுண்மையை உணர்ந்து ஒழுகுபவன் நன்மை அடைகின்றான். என்றும் சுகமாயிருக்க விரும்புகின்றவன் யாண்டும் எப்பக்கமும் துக்கத் தொடர்புகளைத் தீண்டலாகாது.

நல்ல எண்ணங்களை நாளும் பழகி வருபவன் எல்லா இன்ப நலங்களையும் எளிதே எய்தி இருமையும் இன்பம் உறுகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-19, 9:58 pm)
பார்வை : 35

மேலே