பிக்பாஸ் - மதுவுக்கு மன அழுத்தம் கொடுத்தவர்களைக் கண்டிக்காத கமல்

மரமண்டை மதுன்னு நேற்றுத் தலைப்பு வச்சதுக்கு இன்னைக்கு வச்சிருந்தா சரியா இருந்திருக்கும். மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடுன்னு நிறையப் பேர் எழுதியிருந்தாங்க... ஆனா தன்னோட உயிருக்கு கேடு விளைவிக்க மது முயற்சித்தது ரொம்ப வருத்தமான விஷயம்... எதிலும் போராடித்தான் பார்க்க வேண்டுமேயொழிய கோழைத்தனமான முடிவென்பது ஏற்க முடியாதது. எத்தனை இன்னல் வந்தால் என்ன எங்கோ ஒரு ஓரத்தில் நமக்கான வாழ்வு காத்திருக்கும் என்பதை உணராதவர்கள் எடுக்கும் முடிவே கோழைத்தனமான தற்கொலை முடிவு... மதுவின் வீரமெல்லாம் இந்த தற்கொலை முயற்சியில் தற்கொலை செய்து கொண்டு விட்டது.வனிதாவின் சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டிய பலரில் முதல்வராய் மது... இனியேனும் சேரன் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அடுத்த பலி அவராகவும் இருக்கக் கூடும். வனிதாவைப் போல் ஒரு பெண் வையகத்தில் இருக்கக் கூடாது... வன்மம் எப்போதேனும் துளிர்த்தால் பரவாயில்லை... வன்மத்தை உடலெங்கும் பரவ வைத்திருந்தால் அது தன்னையே ஒரு நாள் கொல்லும்... வனிதா அப்படியான நிகழ்வை ஒருநாள் சந்திக்க வேண்டி வரும்.இந்த வாரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இரவே மது மீதான் வன்முறை நிகழ்த்தப்பட்டு அன்றிரவே மதுவின் தற்கொலை முயற்சி... மது வெளியேற்றம் என எல்லாமே அரங்கேறியிருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களில் வெளியே போறேனென போடப்பட்ட சீன்களெல்லாம் அப்பட்டமான திரைக்கதை என்றார்கள். இது அப்படித் தெரியவில்லை... கவின், சாண்டியின் கேவலமான செய்கைகளே மதுவின் மன அழுத்தத்திற்குக் காரணம்... எவ்வளவு நாள்தான் உள்ளே அழுத்தி வைத்திருக்க முடியும்... அதுவும் அடைக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள்... அவரின் செய்கை ஏற்கமுடியாததுதான் என்றாலும் அச்செய்கைக்குப் பின்னும் சேரன், கஸ்தூரி தவிர யாருமே மனிதாபிமானத்துடன் நடக்கவில்லை என்பது மதுவின் பேச்சில் தெரிந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்... அப்படியென்ன வன்மம் இவர்களுக்குள்...கவினும் சாண்டியும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற போதிலும் ஆண்டவரின் சலுகை எப்போதும் அவர்களுக்கு உண்டு.மது வெளியேறிய செய்தி அறிவிக்கப்பட்ட பின் மேடைக்கு வந்த கமல், மதுவை அழைத்துப் பேசினார்... 'தட்டில் வைத்து உனக்குக் கொடுத்த வெற்றியை இப்படித் தட்டிவிட்டுட்டு வந்து நிக்கிறியே'ன்னு வருத்தப்பட்டார். மதுவோ தான் செய்தது சரி என்பதில் உறுதியாய் நின்றார். கமலின் பேச்சுக்களை மறுத்துப் பேசுவதிலேயே கவனமாய் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் உண்மையில் வருத்தப்படுகிறேன்... இம்மாதிரியான முடிவுகளை எடுப்பது முட்டாள்தனம்... ஆனா நீங்க செய்ததை நியாயப்படுத்த நினைத்து என்னுடன் விவாதிக்கிறீர்கள்... இதை விவாதிக்க வேண்டிய நிலையில் நானில்லை... உங்க குடும்பத்தைவிட கொண்ட கொள்கை எந்த விதத்தில் பெரிதென நினைக்கிறீர்கள் என்று சொல்லவும் நான் அப்படித்தான் எனக்கு எது நியாயமோ அதன் பக்கமே நிற்பேன் எனக்கு குடும்பம் பெரிதல்ல என்றதும் இதெல்லாம் திருந்தாத ஜென்மம்... என்று நினைத்த கமல் நண்பர்களுடன் பேசுங்கள் என்றார்.நான் சேரன் சார், கஸ்தூரி தவிர யாருடனும் பேச... ஏன் பார்க்கக்கூட விரும்பவில்லை என்றார் மது அதிரடியாய்... அத்தனை வலிகளைச் சுமந்திருக்கிறார்... அவரின் இந்தப் பேச்சு தவறெனச் சொல்ல முடியாது. சேரன் அப்படியே கமல் பேசியதையே பேசினார். இது மிகப்பெரிய முட்டாள்தனம் என்றார். சேரன் எப்பவும் கிரேட்...இந்த பசங்களுக்குத்தான் அவர் மீது கரியைப் பூச வேண்டுமென்ற ஆசை அதிகம்... அவரைப் பொறுத்தவரை எப்பவும் அவராகவே இருக்கிறார். சில நேரங்களில் சூழல் அவரை மாற்றுகிறது... இது இயற்கை.கஸ்தூரி என்னமோ பேசினார்... மீராவுக்குப் பிறகு இவர் பேசுவது எரிச்சலைத்தான் தருகிறது. என்ன பேச வேண்டுமோ அதை ரத்தினச் சுருக்கமாக எடுத்து வைக்க முடியாமல் தமிழக தற்போதைய அரசியல் தலைவர்களைப் போல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறார். கமலுக்கே போரடிக்க, சரி மற்றவர்கள் மதுவுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்க, எல்லாரும் இஞ்சி தின்ன குரங்காட்டம் உட்கார்ந்திருந்தார்கள். வனிதாவிடம் கமலே சொல்லுங்க வனிதா என்றார்.சார் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி என்று என்னமோ பெரிய பதிலைச் சொல்லிவிட்டதைப் போலவும் தன்னை அல்லக்கைகள் எல்லாம் அக்கா ஈஸ் கிரேட்டுன்னு புகழ்வாங்கன்னு நினைச்சி புளகாங்கிதம் அடைந்து சிரித்தவரை, உங்களுக்குக் கொடுத்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்க... அவங்க விரக்தியில் பேசுறாங்க.. நீங்க அக்காவாப் பேசியிருக்கலாம் என்று முடித்துக் கொண்டார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு இணங்க மது பேசியதற்கு மாறாக பிரச்சினைகளை மறந்து நல்லாயிருங்க மதுன்னு சொல்லியிருந்தா வனிதா எப்பவும் சொல்லும் டூ பி ஹானஸ்ட்க்கு மரியாதை இருந்திருக்கும். வேறு யாரும் நல்லாயிரு மதுன்னு சொல்லியிருக்க மாட்டாங்க என்றாலும் சேரனாக இருந்தால் கண்டிப்பாகச் சொல்லியிருப்பார்.மது சென்ற பின் வெள்ளி நிகழ்வுகளைப் பார்க்கச் சொல்லிட்டு படுக்கப் பொயிட்டார் கமல்.பூம்பூம் ரோபோடாவோட விடிஞ்சிச்சி... மது இல்லை... மக்கள் எப்பவும் போல் மகிழ்வாய்... முந்தைய இரவின் வருத்தம் சிறிதும் இல்லாதது இவர்கள் மனிதர்களா என்று சிந்திக்க வைத்தது. மக்களின் பிரதிபலிப்பு என்பதெல்லாம் சுத்தப் பொய்... இப்படிக் கேடுகெட்ட செயலை எதிரி கூட செய்யமாட்டான். அப்புறம் சாக்லெட் டாஸ்க்... இதிலும் சாண்டி சேரன் அன் கோவுக்கு பெப்பே கொடுத்து ஆட்டையை நிறுத்துன்னு சொன்ன அக்கா அன் கோவுக்கே வெற்றின்னு ஜால்ரா அடித்தார்.அப்புறம் சாக்லெட் கிடைத்த போது சேரன் ஷெரின், வனிதா, அபிராமிக்கு சாக்லெட் ஊட்டினார்.. மகள் லாஸைக் கண்டு கொள்ளவில்லை... மகளுக்கு மாப்பிள்ளை கவின் ஊட்டியிருப்பான் என்று நினைத்திருப்பார்.ஷெரின் அபிக்குள் தர்ஷன் பற்றிய பேச்சு.... அப்போது ஷெரினின் முகம் சிவந்ததுடன் சிரிப்பில் காதல் ஒலித்தது. எனக்குள் இல்லை என்று சொன்னாலும் இருப்பதாய்த்தான் தெரிகிறது. இவர்களின் காதல் வெளிப்படும் பட்சத்தில் முகனுடன் மீண்டும் காதலைத் தொடரலாம் என்பது அபியின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.அடுத்த நாள் விடியல் 'கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு' என விடிந்தது.எல்லாரும் சாக்லெட் சாப்பிட்டார்கள்... ஹாலோ ஆப் டாஸ்க் வெற்றியாளரான அபிக்கு சாக்லெட் வந்தது.கமல் வாத்தியாராய் சேரில் அமர்ந்திருந்தார்... கையில் கம்புதான் இல்லை.'பெரிய மனுசியாப் பேசி அனுப்புவேன்னு பார்த்தா நீ என்னடான்னா பிரச்சினையை டிபன் பாக்ஸ்ல போட்டுக் கொடுத்து வீட்டுல போயி சாப்பிட்டுக்கன்னு கொடுக்கிறே... நீ எல்லாம் ஜென்மத்துக்கும் திருந்தப் போறதில்லை...' என்பதாய் சொல்லி வனிதா கொடுத்த விளக்கத்துக்கு காது கொடுக்காமல் 'அதென்ன கமல் சாரை கதவைத் திறந்து விடச் சொல்றேன்னு சொல்றே... உள்ள போயி வத்தி வையின்னு நானா உன்னை ஒப்பந்தம் போட்டு அனுப்பினேன்... நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்கணும்.. நீயோ மற்றவர்களோ அல்ல' என்பதாய் ஒரு கொட்டு வைத்தார். வனியின் முகம் காய்ந்து போன பூரி போலானது.அப்புறம் சேரன் நீங்க மேனேஜரா அருமையா நடிச்சீங்க... அங்க இயக்குநர் டச் தெரிஞ்சதுன்னு பாராட்ட, கவின் மூஞ்சி மழையில நாசமாப் போன தார்ரோடு மாதிரி ஆயிருச்சு. இதை எப்பவும் நீங்கதான் சார் சொல்றீங்க.. இங்க நான் நடிக்கவே இல்லைன்னு சொல்லி ஜெயிலுக்கு அனுப்பவே குறியா இருக்கானுங்கன்னு சொல்ல, உங்களைப் பாராட்டுற அதேவேளையில் பாட்டுப் பாடும்போது நான் ஒரு இயக்குநர்ன்னு சொல்லி வருந்துனீங்க... அது தப்புத்தானே... சரவணன் இதே விஷயத்தைப் பேசினதைத் தவறெனச் சுட்டிக்காட்ட மன்னிப்புக் கேட்டார்தானே என்றதும் சேரனும் வருத்தத்துடன் மன்னிப்புக் கேட்டார். கவின் அவர் மன்னிப்புக் கேட்பதும் நடிப்பு என்பதாய் தலையாட்டினான்... அவனைப் பொறுத்தவரை சேரன் வேண்டாத மருமகள்.வனிதா வரும் போது விருந்தாளி என்பதாய் நினைத்து மகிழ்ந்தீர்கள் ஆனால் அங்கேய் தங்கிவிட்டாரே... இது வரமா அல்லது சாபமா எனக்கேட்டதும் சேரன், கஸ்தூரி மட்டும் பேசவில்லை மற்றவர்கள் எல்லாமே வலிக்காமல் கல்லெறிந்தார்கள்... பிரிட்டானியாவைவிட 50-50 பிஸ்கெட்டே சாலச் சிறந்தது என்றார்கள். அக்கா வத்தி வச்சாலும் இப்பத்தான் விளையாட்டு சூடு பிடிக்குதுன்னு அக்காவுக்கு தீபம் ஏற்றி சாம்பிராணி போட்டார்கள். அக்காவின் லீலைகள் தெரிந்தே இருந்ததால் பம்மித்தான் பேசினார்கள். அக்காவின் பார்வையில் இருங்கடா வச்சிக்கிறேங்கிற கொடூரம் தெரிந்தது.ஆண்... பெண்... ஏன்..? வந்துச்சு எனக் கேட்க, வனிதாவே ஆரம்பப் புள்ளி என்பதை அவர் வாயால் சொல்ல வைத்தார். தான் செய்தது சரிதான் என அக்கா வாதிட, பார்வையாளர்கள் கத்தினார்கள். முடிந்த பிரச்சினையை எடுக்க வேண்டியதில்லை... அதுபோக எல்லாரும் அவர் அவர் விளையாட்டை அவர் அவரே விளையாட வேண்டும்... இங்கு ஆண் பெண் குழுவாக வேண்டியதில்லை... மற்றவர்களை விளையாட விடுங்கள்... நீங்களே ராவணனாக... பத்துத்தலை ராவணனாக நிற்கவேண்டாம் எனக் குட்டினார்.அபியை ஜெயிலுக்கு அனுப்பிய விவகாரம் வந்தபோது மற்றவர்கள் தலைவனாய் இருக்கும் போது சாண்டி வடிவேலாய் இருந்தீர்கள்.... நீங்கள் தலைவரான போது அதைவிட நல்லா ஜாலியாப் போகுன்னு பார்த்தா ரகுவரன் ஆயிட்டீங்க... தலைவன் என்பவன் எல்லாருக்கும் தலைவனே... ஐந்து பேருக்கும் மட்டுமல்ல... என்று சாண்டியைக் குட்டினார்.கஸ்தூரியுடனான மோதல் பற்றி கவினுடன் பேசும் போது அதென்ன கஸ்தூரி மீது அவ்வளவு கோபம்... வந்த மறுநாளே கேமரா முன்னாடி நின்னு எரிச்சலா இருக்கு அவங்க பேசுறதுன்னு சொன்னீங்க... அதெப்படிங்க... உங்களுக்குள் வெளியில் ஏதும் பகை இருக்கோ என்று கேட்க, கவின் வழக்கம் போல் லாவணி பாடினான்... பக்கத்தில் லாஸ் வேறு இருக்க, பய நான் செய்தது சரியென அடித்துப் பேசினான். அது தப்பு எனக் கமல் குட்டினார்.அபிராமியை அழாமல் இருக்க வேண்டும் என்றவர் ஷெரினிடம் பேசும் போது யார் என்ன சொன்னாலும் கேட்டுப்பேன் சார்... தலைக்கு ஏத்தமாட்டேன்... ராத்திரி படுக்கும் போது எல்லாத்தையும் வெளியிலயே விட்டுட்டு என்னோட மனசுக்கு எது சரியின்னு படுதோ அதை மட்டும் தலையணை ஆக்கிப்பேன்னு ஷெரின் சொன்னதும் சபாஷ் எனக் கைதட்டினார்.கஸ்தூரி ஏதோ பேசிச்சு... டுவிட்டர் கஸ்தூரி டுபாக்கூர் கஸ்தூரி ஆயிருச்சு என்றாலும் வளவள கொழகொழ பேச்சுத்தான் பார்க்கும் நம்மையே கடுப்பாக்குது... அந்த வீட்டுக்குள்ள இருக்கவனுங்களைக் மனித உரிமை பற்றியெல்லாம் பேச வைக்கமால் என்ன பண்ணும்..?மீண்டும் வனிதா பேச வந்த போது மக்கள் கத்திப் பேசவிடவில்லை.... என்னடா ஓவராக் கத்துறீங்கன்னு மனசுக்குள் நினைச்சிக்கிட்டாலும் சார் ஏன் சார் கத்துறாங்கன்னு வன்மச் சிரிப்போட கேட்டார் வனிதா.கமலைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களையும் பற்றிப் பேசியது சிறப்பு என்றாலும் மதுவை இவ்வளவு தூரம் கொண்டு நிறுத்திய ஐவர் குழுவை... குறிப்பாக சாண்டி, கவின், தர்ஷனை கண்டிக்காதது ஏற்ப்புடையதல்ல... கமலைப் பொறுத்தவரை சாண்டி, கவின், லாஸ்லியா மற்றும் தர்ஷனிடத்தில் எப்பவும் சாப்ட் கார்னர் இருக்கத்தான் செய்கிறது. தலைவனாய் சாண்டி ஒன்றுமே செய்யவில்லை... ஒருவரைக் குழுவாய் இருந்து கொண்டு கேலி, கிண்டல் செய்து மன அழுத்தம் கொடுப்பது என்பது கேவலமான செயல்... அதை இன்னும் கொஞ்சம் தீர விசாரித்துக் கண்டித்திருக்க வேண்டும்... அதேபோல் கஸ்தூரி விசயத்திலும் அவர்களின் செய்கையைக் கண்டித்திருக்க வேண்டும்... ஆனால் கமல் இந்த விஷயத்தில் நடிகனாய் மட்டுமே இருந்தது வருத்தமே. இதைக் கண்டிக்காத பட்சத்தில் அடுத்த வாரம் வேறொருவரை இந்தக் குழு மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும்... அது சேரனாகவோ கஸ்தூரியாகவோ இருக்கக் கூடும். அப்பவும் கமல் சாண்டி, கவினுக்கு மழுப்பலான குட்டுத்தான் கொடுப்பார். எல்லாரும் ஒன்றென ஆண்டவர்களுக்குத் தெரிவதில்லை... அது அத்தியாயினும் கமலாயினும்...வெளியேற்றம் உண்டெனச் சொல்லிப் போயிருக்கிறார். ஒருவேளை அபிராமி ரகசிய அறைக்கு அனுப்பப்படலாம்.முடிவாய் கேட்பார் பேச்சுக் கேட்டால் நமக்குத்தான் ஆபத்து என்பதை மது உணராமலே சென்றதுதான் ஹைலைட்... உள்ளிருப்போராச்சும் உணர்வார்களா..?பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (18-Aug-19, 5:33 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 38

மேலே