உள்ளம் அடங்கின் உலகமவன் பாலடங்கும் – அமைதி, தருமதீபிகை 402

நேரிசை வெண்பா

உள்ளம் அடங்கின் உலகமவன் பாலடங்கும்;
கள்ளம் அடங்கிக் கதியடங்கும்; - வெள்ளமென
இன்ப நலங்கள் இனிது பெருகுமவன்
இன்ப உலகம் இவண். 402

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனம் அடங்கிய சாந்த சீலனிடம் உலகம் அடங்கி நிற்கும்; கள்ளம், கரவுகள் எல்லாம் ஒழிந்து நல்ல கதி விளங்கும்; இன்ப நலங்கள் யாவும் அவனிடம் எளிது வந்து பெருகும்; அவன் ஒரு இன்ப உலகமாய் இங்கு இனிது திகழுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அமைதியின் இயல்பை முன்னம் அறிந்தோம்; அதனுடைய பயனையும் வியன் விளைவுகளையும் இதில் அறிய வந்துள்ளோம்.

விடய துகர்வுகளையே நாடி வெளிமுகமாய் ஓடி எவ்வழியும் களி மிகுத்திருப்பதே மனித இயல்பாய் மருவியுள்ளது. உள் முகமாய்த் தன்னை நோக்கிக் காண்பது மிகவும்.அருமையாகின்றது. அந்த அரிய காட்சி அமையின் அவன் பெரிய முனிவனாய்ப் பெருமகிமை அடைகின்றான்.

செயற்கரிய செய்வார் பெரியர்." (குறள், 26)

மனித இனத்துள் மேலான மகிமையாளரை இது சாதுரியமாய்க் குறித்துள்ளது. இங்கே பெரியர் என்றது யாரை? அரிய செயல் யாது? மனத்தை அடக்கி அகமுகமாய்த் திரும்பி ஆன்ம தரிசனம் செய்வதே அரிய செயல். சிந்தையை அடக்கி அமைதியுறுவது பெரிதும் அரிதாதலால் அது ’செயற்கு அரியது’ என வந்தது.

கந்துக1 மதக்கரியை வசமா நடத்தலாங்
கரடிவெம் புலிவாயையுங்
கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல்கொளலாஞ்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி னும்புகுதலாஞ்
சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே ‘சும்மா இருக்கின்ற
திறமரிது’ சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 8 தேசோ மயானந்தம், தாயுமானவர்

’செயற்கரிய செயல்’ என வள்ளுவர் குறிப்பாய்க் குறித்ததைத் தெளிவாக விளக்க ஒரு அழகான விரிவுரையாய் இது வெளி வந்துள்ளது. கட்செவி - பாம்பு.

உலகில் எதையும் செய்து விடலாம்; தன் உள்ளத்தை அடக்குவது மிகவும் அரிது என்றது பெரிதும் கருதி உணர வுரியது.

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

மனமொ ருத்தன் வசப்படு மேலவன்
பினைவ ருத்தும் பிறப்பை அடைந்திடான்
மனமொ ருத்தன் வசப்படா தோடுமேல்
நனிபி றப்பிடை நாளும் சுழலுமே. 10

ஆயின் மிக்கோர் அரிய செயலெலாம்
நேய மிக்க மனத்தை நிறுத்தல்காண்
வாயு நிற்க மனமும் உடனிற்கும்
தோய நிற்குறின் நிற்கும் துரும்புமே. 16

ஓடு மாவை நிறுத்துறின் உள்ளுறக்
கோடும் வாய்க்கலி னத்தினைக் கொள்ளுவார்
நீடு மாமன நிற்க நிறுத்துறில்
ஓடும் வாயுவை உள்ளுற ஈர்ப்பரால். 17

அடுத்த நாடிகள் ஆங்கொரு மூன்றினும்
விடுத்து வாங்கியும் மேவ நிறுத்தியும்
தடுத்தும் வாயுவைத் தன்வசம் ஆக்கில்வாய்
மடுத்தி டாது மனமும் வசப்படும். 18 பதினெட்டாவது கதி, சாதகாங்க கதி, பிரபுலிங்க லீலை

மனத்தை அடக்கி ஆளுவது அரிது; அதனை அடக்கியவன் பிறவி நீங்கிப் பெரும்பதம் அடைவான் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். மனம் அடங்குதற்குரிய சாதன முறைகள் இதில் குறிக்கப் பட்டுள்ளன. மூக்கின் வழியே இயங்கி வருகின்ற மூச்சு சீவ ஓட்டமாயுள்ளது. அதில் நாட்டத்தைச் செலுத்தி வரும் அளவு மனத்தின் ஓட்டத்தை நிறுத்தி உய்தி காண்கின்றனர்.

’உள்ளம் அடங்கின் உலகம் அவன் பால் அடங்கும்’. ஒரு நிலையின்றி எப்பொழுதும் அலைந்து கொண்டே வருகின்ற மனம் ஒருவனுக்கு வசமாய் அடங்கி யிருக்குமாயின் அவனை உலகம் உவந்து தொழ நேர்கின்றது.

உலக மக்கள் எல்லாரையும் தனக்கு அடிமைகள் ஆக்கி யாண்டும் தனித் தலைமையில் நீண்டு நிற்கின்ற மனத்தைத் தனக்கு இனிய அடிமையாக்கி ஒழுகுகின்றவன் அரிய அதிசய நிலையினனாதலால் அவனை எவரும் துதி செய்து தொழுகின்றனர். உள்ளம் உரிமையுற உலகம் வழிபடுகின்றது.

தன் மனத்தை அணுவளவு ஒருவன் அடக்கி ஒழுகுவானாயின் அவன் உலகத்தை மலை அளவு அடக்கியாளும் வல்லமையை அடைகின்றான். மனம் சிறிது அடங்கியவுடனே மனிதன் பெரிய மகானாய் அரிய நிலையில் உயர்கின்றான்.

மனத்தின் வழியே இழிந்து போகின்றவன் சிறியவனாய் இகழ்ச்சியை அடைகின்றான், அங்ஙனம் இழியாமல் அதனைத் தன் வசமாக்கி நிற்பவன் பெரியவனாய் உயர் மதிப்புறுகின்றான்.

நேரிசை வெண்பா

மனத்துக்(கு) அடியனேல் மாநிலத்துக் கெல்லாம்
கனத்த அடியனாய்க் காணும் - மனத்தினைத்
தன்வசமாய்க் கண்டுநின்ற தக்கோன் உலகமெலாம்
பின்வசமாய்க் காண்பன் பெரிது.

உள்ளம் அடங்கிய பொழுது உளவாகும் உயர்வும், அடங்காத பொழுது விளையும் இழிவும் இதனால் அறியலாகும். அடியவனாய் இழிதலும், ஆண்டவனாய் உயர்தலும் அக நிலையிலன்றி புறத்தில் யாண்டும் இல்லை என்பதை ஈண்டு ஓர்ந்து கொள்ள வேண்டும்.

தன் மனம் தனக்கு உரிமையாய் அமையுமாயின் அவன் அளவிடலரிய பெருமைகளை எளிதே பெறுகின்றான்.

’கள்ளம் அடங்கிக் கதி அடங்கும்’. உள்ளம் இனிமையாய் அடங்கிய பொழுது கள்ளம் கபடுகள் முதலிய இழிநிலைகள் யாவும் ஒழிந்து போகின்றன; உயர் நலங்கள் எல்லாம் ஒருங்கே விளைந்து வருகின்றன; இந்த அதிசய வரவை அடைவதே பிறந்த பயனைப் பெற்றபடியாம்.

மனம் இனிதாய் வசமாகவே மதி தெளிகின்றது. புனிதமான அந்த ஞானஒளி மோனமாய் ஈசனைக் காண்கின்றது அக்காட்சி பேரின்ப நிலையமாய்ப் பெருகி நிறைகின்றது.

வெளி முகமாய்ப் புலன்களின் வழியே ஓடும் பொழுது பொய்யான உலக மையல்களைக் காண்கின்றது; அக முகமாய் மனம் அடங்கி நின்றபோது மெய்யான தெய்வ இன்பத்தை ஆன்மா அனுபவிக்கின்றது.

'படிப்பு அற்று, கேள்வி அற்று, பற்றற்று, சிந்தைத் துடிப்பு அற்றார்க்கு அன்றோ சுகம்' என்றது உண்மையான சுகம் உதயமாகும் இடத்தை உணர்த்தி நின்றது.

நேரிசை வெண்பா

கற்றதனால் தொல்லைவினைக் கட்டறுமோ? நல்லகுலம்
பெற்றதனால் போமோ பிறவிநோய்? - உற்றகடல்
நஞ்சுகந்து கொண்டருணை நாதரடித் தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி. - குகை நமசிவாயர்

ஓராம லேஒருகால் உன்னாமல் உள்ஒளியைப்
பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் - வாராதோ
பத்துத் திசையும் பரந்தெழுந்(து) ஆனந்தவெள்ளம்
தத்திக் கரைபுரண்டு தான். 58

எங்கும் சிவமே இரண்டற்று நிற்கி’ல்’நெஞ்சே!
தங்கும் சுக,நீ சலியாதே – அங்கிங்கென்(று)
எண்ணாதே பாழில் இறந்து பிறந்துழலப்
பண்ணாதே யானுன் பரம். 66 உடல் பொய்யுறவு, தாயுமானவர்

உள்ளம் புனிதமாய் ஒடுங்கின் பிறவி நீங்கும்; பேரின்ப வெள்ளம் பொங்கி வரும் என மேலே வந்துள்ள அனுபவ மொழிகள் தெளிவுறுத்தியுள்ளன. தெய்வம் தோய்ந்த உரைகள் மெய்யான உறுதி நலங்களை உணர்த்தி உய்வு புரிந்தருள்கின்றன.

கண்ணை மூடி ஒருகணமேனும் நாளும் உள் முகமாய் உன்னை நினை, இனிய நினைவுகளையே பேணி மன அமைதியுடன் மருவி வாழுக. அவ்வாழ்வு ஆனந்த நிலையமாய் அதிசயங்களை அருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-19, 5:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே