சார்ந்தார்க்கு இனிதான சார்பாகிக் திகழ்வான் - கருணை, தருமதீபிகை 412

நேரிசை வெண்பா

சார்ந்தார்க்(கு) இனிதான சார்பாகிச் சாராத
ஆர்ந்த உலகிற்(கு) அருள்நலமாய் - நேர்ந்த
குடிக்குக் குலதனமாய்க் கூர்ந்து திகழ்வான்
படிக்குள் வளர்ந்த பலன். 412

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னிடம் அன்பாய்ச் சேர்ந்தவர்க்கு இனிய ஆதரவாய், பிற உயிர்களிடம் பெருங்கருணை புரிந்து, தன் குடும்பத்தை இனிது பேணி வருபவன் வையத்துள் வந்த தெய்வ நீர்மையன் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தன்னை ஆதரவாக நம்பி அடுத்த உறவினர், நண்பினர் முதலிய அன்புரிமையாளரை சார்ந்தார் என்றது. சார்பு - துணை, உதவி; கிளைகளாய் அடுத்தவரை ஆதரித்தருளுவது ஆண்மையின் முதல் உரிமையான கேண்மை ஆகின்றது.

மனிதன் பலவகைக் கடமைகளையுடையவன். வாழ்க்கையில் தனக்கு நேர்ந்துள்ள உரிமைகளை முறையாகச் செய்தபோதுதான் அவன் கரும தருமனாய் இனிய செவ்வியன் ஆகின்றான்.

தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலிய ஒக்கல்களை உரிமையுடன் பேணி வருபவன் உயர்ந்த ஆண்மையாளனாய்ச் சிறந்து திகழ்கின்றான். அங்ஙனம் பேணாதவன் பேதையாய் இழிந்து படுகின்றான். உரிமை இழந்தபோது பெருமை ஒழிந்து போகின்றது.

தனக்குரிய கருமங்களை மறவாமல் மனவுறுதியுடன் செய்து வருபவனைக் கரும வீரன் என்றுலகம் புகழ்ந்து வருகின்றது. உரிய வினையாளன் அரிய மகிமையை அடைகின்றான்.

தன்னைச் சார்ந்தவரைத் தகுதியுடன் ஆதரித்து வருவதில் அன்புரிமை பெருகி எழுகின்றது. இந்த அன்பு நிலையில் குறுகி நின்று. விடாமல் எல்லா உயிர்களிடத்தும் கண்ணோடி உள்ளம் உருகிவரின் அங்கே புகழும் புண்ணியங்களும் பொங்கி வருகின்றன.

சார்பு பற்றிய பிரியம் ’அன்பு’ என அமைந்து நிற்கின்றது. இந்தப் பண்பு மனிதனை மாண்புடையன் ஆக்கும்: ஆயினும், மேலும் வளர்ந்து சென்றால் மகிமைகள் பல விளைந்து பெருகும்.

சார்ந்தவர் அளவில் நில்லாமல் எல்லா உயிர்களிடத்தும் அருள் புரிந்து வருபவன் பெரிய ஆன்ம ஊதியத்தை அடைந்து மேன்மை மிகப் பெறுகின்றான்; அயலார்க்கு இயல்பாக இரங்கி அருள்பவனே உயர்வான நிலையில் யாண்டும் ஓங்கி ஒளிர்கின்றான்.

’சாராத ஆர்ந்த உலகிற்கு அருள்’. என்றது தொடர்புடைய மனைவி மக்களிடமேயன்றி யாதொரு தொடர்பும் இல்லாத சீவ கோடிகள் யாவரிடத்தும் உள்ளம் உருகி அருள் புரியும் உரிமையைப் பொருள் தெரிய உணர்த்தி யருளியது. ஆர்தல் – நிறைதல்; பறவை, விலங்கு, ஊர்வன, நீர் வாழ்வன முதலாக எண்ணரிய உயிரினங்கள் மண்ணுலகில் யாண்டும் நிறைந்துள்ளன. அந்தப் பிராணிகளை எல்லாம் தன் உயிர் எனவும், உறவினங்கள் எனவும் உரிமையுடன் எண்ணிக் கண்ணோடி ஒழுகுவது புண்ணிய அருளாய்ப் பொலிந்து வருகின்றது.

எவ்வுயிரும் என்உயிர்போல் எண்ணி இரங்கவும்நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!

எனத் தாயுமானவர் இறைவனை நோக்கி இவ்வாறு உருகி உரைத்திருக்கிறார். பிறவுயிர்களுக்கு இரங்கியருளும் கருணைப் பண்பு ஒருவனுக்கு அமையுமாயின் அவன் பிறவி நீங்கி உயர்கதி அடைவானாதலால் அந்தப் பண்பாட்டைத் தனக்குத் தந்தருளும்படி பரமனிடம் முறையிட்டு நின்றார்,

Teach me to feel another's woe, To hide the fault I see. – Pope

’குற்றத்தைக் காணாமல் பிறருடைய துயரங்களை உணர்ந்து இரங்கும்படி எனக்கு அருளுக’ என போப் ஆண்டவனை நோக்கி இப்படி வேண்டியிருக்கிறார்,

பிறவுயிர்கள் மேல் இரங்கி உருகும் இரக்கம் எல்லார்க்கும் எளிதில் அமையாது; தரும நலம் கனிந்த புனித மனிதர்களிடமே அது இனிது அமைகின்றது.

ஆன்ம உருக்கம் அதிசய மேன்மைகளை அருளுகின்றது. தன் உள்ளம் உருகிய அளவு ஒருவன் தருமாத்துமாவாய் ஒளி மிகப் பெறுகின்றான்; பிறவுயிர்களின் துயர்களைக் கண்டபோது எவனுடைய உள்ளம் உருகி யருளுகின்றதோ அவன் பிறவித் துயரம் நீங்கிப் பேரின்ப நலனடைகின்றான்.

அன்பு செய்து அருள் புரிந்து உன் வாழ்வை இன்பம் ஆக்குக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-19, 5:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே