ஆசாரக் கோவை - அறிமுகம்
அறிமுகம்:
ஒழுக்கங்களின் தொகுதி ’ஆசாரக் கோவை’ ஆகும். 'ஆசாரங்களினது கோவை' என்றும், 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை' என்றும் பொருள் கூறலாம்.
'அச்சமே கீழ்களது ஆசாரம்' (குறள் 1075), 'ஆசாரம் என்பது கல்வி' (நான்மணிக்கடிகை 93) 'அறியாத் தேயத்து ஆசாரம் பழியார்' (முதுமொழி 3:8) என ஒழுக்கம் என்ற பொருளில் ஆசாரம் என்பது வழங்கப்படுகிறது.
இந் நூலிலும் 'ஆசார வித்து' (1), 'ஆசாரம் எப் பெற்றியானும் படும்' (96), 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என வரும் இடங்களில் இச்சொல் மேற்குறித்த பொருளில் வருகிறது. மேலும், ஒழுக்கம் (2, 21), நெறி (16, 27), முறை (11), வழி (29, 30) என்னும் சொற்களாலும் ஆசாரம் என்பதை இந் நூலாசிரியர் குறித்துள்ளார்.
'ஆசார வித்து' (1) என்று தொடங்கி, 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில் தாம் கூறப்புகுந்த ஆசாரங்களை ஒரு நெறிப்பட ஆசிரியர் கோவை செய்துள்ளார். பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்ததுடன், நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.
அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் பல உண்டு. வைகறைத் துயில் எழுதல், காலைக் கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல செயல்களிலும் ஒழுகும் நெறிகள் சொல்லப்படுகின்றன. மேற்கொள்ளத் தகுந்தவை இவை, விலக்கத் தகுந்தவை இவை எனச் சில ஆசாரங்களை விதித்தும், சிலவற்றை விலக்கியும் சொல்லும் முறை கவனிக்கத் தக்கது.
இந் நூலின் ஆசிரியரது முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். இவர் வாழ்ந்த ஊர் கயத்தூர். இந்த ஊரைத் 'திருவாயில் ஆயதிறல் வண் கயத்தூர்' என்று பாயிரப் பாடல் சிறப்பிக்கின்றது. பெருவாய் என்பது இவரது தந்தையார்பெயர் போலும்! முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். இவ் ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கருத்து:
கவின் சாரலன் • 28-Mar-2014 3:57 pm
ஆசாரம்--அன்றாட வாழ்வில் அனுசரிக்க வேண்டிய
ஒழுக்கங்கள் எனலாம். அந்தணர் வழக்கில் ஆசார அனுஷ்டானம்
என்பர். தகவல் செறிந்த அழகிய இலக்கியக் கட்டுரை,
தமிழ் விக்கிப்பீடியா போல் நீங்கள் தமிழ் வீ கே பீடியா!
வாழ்த்துக்கள் டாக்டர்.
----அன்புடன்,கவின் சாரலன்