அல்லல் உலகில் அமைதி உறுமாயின் தொலையாத இன்பங்கள் எய்தும் - அமைதி, தருமதீபிகை 406

நேரிசை வெண்பா

அல்லல் உலகில் அமைதி உறுமாயின்
நல்ல அமுதம்,கை நண்ணியதாம் - தொல்லைமிகு
துன்பங்கள் எல்லாம் தொலையும்; தொலையாத
இன்பங்கள் எய்தும் இனிது. 406

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அல்லல் நிறைந்த இவ்வுலகில் அமைதி அமையுமாயின் அது நல்ல அமுதம் கையில் எய்தியது போலாம்; அதனை யுடையவர் துன்பங்கள் எல்லாம் நீங்கி இன்பங்கள் யாவும்.எய்தி மகிழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது உள்ளச் சாந்தி தெள்ளமுதம் என்கின்றது.

அவலக் கவலைகளே எங்கும் நிறைந்திருக்கின்றன. பசி, பிணி, பகை முதலியன யாண்டும் நீண்டுள்ளமையால் மனித சமுதாயம் எங்கணும் துடிப்புகளும், துயரங்களும், வெறுப்புகளும் தொடர்ந்து படர்ந்து அடர்ந்து வளர்ந்துள்ளன. பொல்லாத புலைக் கொடுமைகளே நிலைத்து அலைத்து வருதலால் அல்லல் உலகம் என்று இது சொல்ல நேர்ந்தது. மக்களுடைய புன்மை மாதாவுக்குப் பழி புரிந்தது. வெய்யரைத் தாங்கியுள்ளமையால் வையம் வையப்பட்டது. இனிய நீர்மைகள் மறையவே இன்னல்களாயின.

தன்னலம் கருதித் தன்பாடு பார்ப்பதே மனித இயல்பாய் மன்னியுள்ளமையால் துயரும், பகையும், பொறாமையும் யாண்டும் பின்னிப் பிணைந்து பெருகி வருகின்றன. ஒருவரை ஒருவர் வஞ்சிக்கத் துணிந்து நெஞ்சத்தைப் பாழாக்கி நஞ்சங்களை வளர்த்து நெடுந் துயரங்களுக்கே ஆளாகி நிற்கின்றனர்.

செல்வம் நிறைந்திருந்தாலும் உள்ளத்தில் அமைதியின்மையால் மனித உலகம் கொடுமையும் மடமையும் படிந்து இனிமையும் இதமும் இழந்து எவ்வழியும் கடுமையாயுள்ளது.

Discontent and unhappiness everywhere abound. Not one person in ten gives the impression of serenity and joyousness. - Living creatively

’அவலமும் துயரமும் எங்கும் நிறைந்திருக்கின்றன. அமைதியும் இன்பமும் எவரிடமும் காணோம்' என கிர்பை பேஜ் என்னும் அமெரிக்க அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

பெரிய செல்வ வளங்கள் பெருகியிருந்தும் நெஞ்சத்தில் அமைதியின்மையால் இனிமைப் பண்பை இழந்து மேல் நாட்டாரும் கீழான நிலையிலுள்ளனர் என்றமையால் சித்த சாந்தத்தின் சீவிய அமுதத் தன்மையை உய்த்துணர்த்து கொள்ளலாம்.

;அமைதி உறுமாயின்’ என்றது அது அமைவதரிது என்பது தெரிய வந்தது. புனிதமான நினைவுகளையே நாளும் பழகித் தனியமர்ந்து தெய்வ நீர்மையோடு இனிது மருவினரே அமைதியாளராய் அமைய நேர்கின்றார்,

உலக அலமரல்கள் உள்ளத்தின் அமைதியைக் கெடுத்து விடும். வெளியே நிகழும் வெறியாட்டங்கள் சாந்த சத்துருக்கள்; அவற்றைச் சாராத அளவு ஞானசீலம் கனிந்து மோனநலம் வளர்ந்து வருகின்றது. மலரில் மணம் மருவியுள்ளது போல் அமைதியுள் ஆன்ம ஞானம்.அமைந்துள்ளது. அதன் பான்மையும் மேன்மையும் பரம தத்துவங்களாய்க் கனிந்திருத்தலால் முத்தர்கள் அதனை முயங்கி மகிழ்கின்றார்.

சாந்த சீலன் தனியிடத்தில் அமர்ந்திருந்து கடவுளோடு கலந்து திளைக்கின்றான். அவனுடைய உணர்வும் உள்ளமும் தெய்வ மணம் கமழ்ந்து திவ்விய மகிமைகள் சுரந்து நிற்கின்றன.

உலக மயக்கில் ஓடி உழலுவோர் தெய்வக்காட்சியை இழந்து விடுதலால் வெய்ய நிலையில் இழிந்து படுகின்றார். ஆனந்த உருவனான பரமன் மோனர்களிடம் குடிபுகுந்துள்ளமையான் மோனன் என்னும் பெயரினை அப்பெருமான் பெருமையாக அடைந்தான்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
நாட்டமே நாட்டத்துள் நிறைந்த
வானமே எனக்கு வந்துவந் தோங்கும்
மார்க்கமே மருளர்தாம் அறியா
மோனமே முதலே முத்திநல் வித்தே
முடிவிலா இன்பமே செய்யுந்
தானமே தவமே நின்னைநான் நினைந்தேன்
தமியனேன் தனைமறப் பதற்கே. 6 சிவன் செயல், தாயுமானவர்

கடவுளை மோனமே எனத் தாயுமானவர் இதில் அழைத்கிருக்கிறார். ஞான சீலர் கடவுளை நாடுகின்றார், கடவுள் மோன யோகிகளை நாடி வருகின்றது. மையல் நிலை ஒழிந்து உள்ளம் அமைதியுறவே அது தெய்வ நிலையமாய்ச் சிறந்து திகழ்கின்றது.

தானந்தம் இலாத தனிப்பொருளை
மோனந் தருகின்றது முந்திஎனா
ஞானந்திகழ் யோகியர் நாடியதை
ஆனந்தம தாக அடைந்தனரே.

என்னும் இது இங்கே அறியவுரியது. இதய அமைதி தெய்வீகம் சுரந்து எவ்வகையும் திவ்விய இன்ப நிலையம் ஆகின்றது; ஆகவே அது அரிய தவ யோகமாய்ப் பெருமை மிகப் பெற்றது.

’நல்ல அமுதம்கை நண்ணியது ஆம்’ சாந்த சீலம் ஒருவனுக்கமையுமாயின் அவன் அதிசயமான ஒரு திவ்விய அமுதம் பெற்றவனாய்த் தெய்வீக நிலையை எய்துகின்றான். பிறவித் துயரங்களை நீக்கிப் பேரின்பம் தரும் நீர்மையதாதலால் சாந்தம்.அமிர்தம் என வந்தது. ’சாவா மருந்து சீவ சஞ்சீவி’ என அமைதி மேவியுள்ளது. அவ்வமைதியை மேவி உய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Aug-19, 5:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே