கூர்துயரம் குறியாமல் பேரருளே கொண்டு புரியும் குணமுடையார் - கருணை, தருமதீபிகை 416

நேரிசை வெண்பா

ஓரறிவே யாகி உறையும் கொடிசெடிக்கும்
கூர்துயரம் யாதும் குறியாமல் - பேரருளே
கொண்டு புரியும் குணமுடையார் பேரின்பம்
கண்டு மகிழ்வர் கலந்து. 416

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஓர் அறிவுடைய கொடி செடிகளுக்கும் யாதொரு துயரமும் நேராமல் கருணையுடன் கருதி ஒழுகும் இயல்பினர் பேரின்ப நிலையை நேரே அடைந்து மகிழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர். உயர்ந்த கருணை நீர்மையை இப்பாடல் உணர்த்துகின்றது.

உயிர் இனங்கள் யாண்டும் உயர் நலங்களையே விரும்புகின்றன. துயரங்களை எவ்வழியும் வெறுத்து அஞ்சுகின்றன. சீவர்களின் இயல்பு இவ்வாறு அமைந்திருத்தலால் இடர் செய்வது பாவம் என வந்தது. புண்ணியம் என்பது தண்ணளியுடையது.

பிறர்க்கு இரங்கி இதம் செய்கின்றவன் புண்ணியவானாய் இன்ப வுலகத்தை அடைகின்றான் அகிதம் எண்ணுகின்றவன் பாவியாய்த் துன்ப நிலையைத் தொடர்கின்றான். அருளுடைமையில் இனிமை கனிகின்றது; அஃது இல்லாத இடத்தில் கொடுமை விளைகின்றது. சிறந்த அருள் நலமுடையவன் பிறந்த பயனை விரைந்து பெறுகின்றான்; அல்லாதவன் இழிந்த நிலைகளில் அழுந்தி உழல்கின்றான்.

மனிதர், விலங்கு, பறவைகளிடமே அன்றி எறும்பு, புழு முதலிய சிறிய பிராணிகளிடமும் அளி புரிந்து வருபவன் ஒளி மிகுந்து வருகின்றான். நல்ல அறிவுடைய பிறவிக்கு அடையாளம் எல்லா உயிர்களிடத்தும் இரங்கி அருள் புரிதலேயாம்.

உலகப் பிறவிகளில் மனிதன் உயர்ந்தவன்; ஆறறிவு உடைமையால் இச்சீரடைய நேர்ந்தான். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி அறிவுகளோடு மன உணர்வும் கூடியிருத்தலால் மக்கள் ஆறறிவுடையவர் என மாண்புற்று நின்றார்,

மேலே இப்படிப் படியேறி உயர்ந்துள்ள மனிதன் கீழே ஓரறிவு முதலாய்த் தாழ்ந்துள்ள இனங்களிடம் கண்ணோடி அருள்வது கடமை ஆயது.

புல் பூண்டுகளிடமும் கருணை செய்து ஒழுக வேண்டும் என்பது ஓரறிவு என்றதனால் உணர வந்தது. தீண்டுதலை மாத்திரம் தெரியுமாதலால் மரம், செடிகள் இந்த இனத்தைச் சேர்ந்தன. தொட்டால் சிணுங்கி என்று ஒரு செடியும் உள்ளது. பரிசம் ஒன்றே அறியும் பரிசுடைமையால் முதல் வரிசையில் நின்றது.

571. ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

572. புல்லும் மரனும் ஓர் அறிவினவே;
573. நந்தும் முரளும் ஈர் அறிவினவே;
574. சிதலும் எறும்பும் மூ அறிவினவே;
575. நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே;
576. மாவும் மாக்களும் ஐஅறிவினவே;
577. மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே; மரபியல், பொருளதிகாரம், தொல்காப்பியம்,

ஓரறிவு முதல் ஆறறிவு வரையும் உள்ள உயிரினங்களை இதில் கூர்ந்து நோக்கி நிலைமைகளை ஓர்ந்து கொள்கின்றோம்.

மன உணர்வின் மகிமையினால் மனிதன் உயர்நிலையை அடைந்துள்ளான். நல்லதும் தீயதும் நாடி அறிய வல்லவனாதலால் யாண்டும் தீமையை ஒழித்து நன்மையே செய்ய உரியவனாயினான். உரிமை புரிய உயர்வு வருகின்றது.

‘கொடி செடிக்கும் துயரம் குறியாமல்’ என்றது கனிந்த கருணையின் காட்சி காட்டியது.

மரத்தில் ஒட்டியிருக்கும் போது இலை தழைகளோடு கிளைகள் செழித்திருக்கின்றன. அவற்றை வெட்டிப் பிரித்துவிடின் வாடி வதங்கி மடிந்து போகின்றன. சக மூலங்களிடம் இங்ஙனம் சோகங்கள் உள்ளமையால் அவற்றிற்கு இடர் செய்வதும் பாவமாயது. புனிதமான அரிய தவ நிலையில் உள்ளவர் பசிய இலைகளையும் புசியாமல் உதிர் சருகுகளை உண்பர். எவ்வுயிர்க்கும் யாதொரு தீதும் கருதாக் கருணையாளரைக் குறித்துச் சொல்லும்பொழுது அவர் ’பசும்புல் நோக மிதியார்’ என்பது உலக வழக்கமாயுள்ளது.

'எச்சிலென்று பூவை இகழ்ந்தோர்க்(கு) உனைப்போற்றப்
பச்சிலையும் கிள்ளப் படுமோ பராபரமே”

என்றதில் தாயுமானவரது கருணையுள்ளத்தைக் காண்கின்றோம். அருள் கனிந்த நெஞ்சம் எந்த உருவில் இடர் நேரினும் சிந்தை உருகி விடுகின்றது. யாண்டும் கண்ணோடித் தண்ணளி பொங்கி வருகின்றது.

இனிய மாங்கனியை அறுத்துப் பக்குவமாய் இலையில் வைத்து ஓர் அன்பர் கொண்டு வந்து கொடுத்த போது புத்தர் அதனைக் கண்டு சித்தம் கரைந்தார். 'அழகிய நல்ல பழ உருவம் சிதைந்து போயதே’ அந்த விழுமிய வடிவினை இனி என்று காண்பேன்?’ என்று உள்ளம் உருகிச் சொல்லி அதனை உண்ணாது போயினார்.

விநாயகர் சந்நிதியில் தேங்காய்கள் சிதற எறிவதைப் பார்த்து இாமலிங்க அடிகள் ஒருமுறை பதறியிருக்கிறார்.

நேரிசை வெண்பா

கண்மூன்(று) உடையானைக் கண்மூன்றான் சேய்முன்னே
உண்மூன்றும் காணா(து) உடைக்கின்றார் - விண்மூன்றும்
கண்டாலும் உள்ளே கருணை இலராயின்
கொண்டார் அவமே குடி. – இாமலிங்க அடிகள்

கண்ணோட்டமுடைய தண்ணளியாளரது இயல், செயல் யாவும் புண்ணிய மணமே யாண்டும் பொலிந்து வீசுகின்றது.

ஓரறிவுயிர்க்கும் ஊறு செய்யாமையே ஆறறிவு படைத்த அரிய பிறவிக்கு உரிய பயனாம்; உற்ற பயனையிழந்து விடின் பெற்ற பெருமை பிறழ்ந்து குற்றம் மிகுந்து படும்.

தாழ்ந்தாரிடம் இரங்கி அருள்பவன் உயர்ந்த பெரும் பதவியை அடைந்து கொள்கிறான். உருகிய சீர்மையோடு பிறர்க்குச் சிறிது இதம் செய்யினும் அது பெருகிய நீர்மையாய்ப் பேரின்பம் சுரந்தருள்கின்றது.

நல்ல அறிவுக்குப் பயனுள்ளதை உணர்ந்து உறுதி தெளிந்து கொள்ளலேயாம்; அயலார்க்கு எது செய்யினும் அது தன் உயிர்க்கே உரிமையாய் வருதலால் விவேகிகள் யார்க்கும் இடர் எண்ணாமல் யாண்டும் இதமே செய்ய நேர்கின்றார்,

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பிறரிடை இன்னா இயற்றிடின் தமக்குப்
பிழைப்பற எய்துமென் பதனை
அறிகுநர் அறிஞர் ஆதலால் உயிர்கள்
அனைத்தையும் தம்உயிர் போல
நெறியினில் கருதல் இனியவாம் ஐந்து
புலனையும் நெறியலா வழியில்
பொறியினில் செலுத்தா(து) அடக்கல்நன்(கு) உணர்ந்தோர்
புலமையோர் ஒழுக்கெனப் புகல்வார். - காசிகாண்டம்

எவ்வழியும் இனியது செய்பவரே செவ்விய அறிவினர்; அவரே வெவ்வினைகள் நீங்கித் திவ்விய நலன்களை அடைகின்றனர்.

பேரருளே கொண்டு புரியும் குணமுடையார்
பேரின்பம் கண்டுமகிழ் வார்.

கருணையாளரே கதி பெற உரியவர் என்பதை விதிமுறையே இது விளக்கியருளியது. தன் உள்ளத்தில் அருள் சுரந்து வருகின்றவன் பேரின்ப வெள்ளத்தில் மிதந்து வருகின்றான்.

எந்த உயிரையும் தன் சொந்த உயிராகப் பாவித்து எங்கும் இனியனாய் ஒழுகுவதே கருணையாகின்றது. அந்த சீவகாருணியம் புகழ் புண்ணியங்களாய்ப் பெருகி இருமையிலும் அரிய இன்ப நலங்களை அருளி வருகின்றன.

கடவுளைக் கருணைக்கடல் என அன்பர்கள் போற்றி வருவது அதனுடைய ஆனந்த நிலையின் ஆழம் கருதியே.

உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
பருகற்(கு) இனிய பரங்கருணைத் தடங்கடலை. – திருவாசகம்

எனப் பரமனை இங்ஙனம் கருதியுள்ளனர். ’மாறிலாத மாக்கருணை வெள்ளமே' என உருகியுள்ளமை உணரவுரியது.

அருள் நீர்மை பரம்பொருளான அருளமுதக் கடலில் கலந்து ஆனந்தம் அடைகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Aug-19, 5:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 126

சிறந்த கட்டுரைகள்

மேலே