பாரோட்டம் கண்டு கதியை விரைவாகக் கொண்டு தெளிக குவிந்து - அமைதி, தருமதீபிகை 407

நேரிசை வெண்பா

நீரோட்டத்(து) உட்பட்ட நீள்துரும்பு போலுலகப்
போராட்டத்(து) உட்பட்டுப் போகின்றாய் - பாரோட்டம்
கண்டு திரும்பிக் கதியை விரைவாகக்
கொண்டு தெளிக குவிந்து. 407

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

விரைந்து ஓடுகின்ற நீரோட்டத்துள் அகப்பட்ட துரும்பு போல் உலகப் போராட்டத்துள் அகப்பட்டுப் பொறியழிந்து போகின்றாய்; அவ்வாறு போய்த் தொலையாமல் திரும்பி எதிரேறி உன் நிலைமையை உணர்ந்து தலைமையைத் தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக நிலையில் மனித சமுதாயம் அறிவு மிகவுடையது என்று பெருமை பெற்றுள்ளது. இருந்தும் பரிதாப நிலையில் வீணாக இழிந்து உழலுகின்றது. அதன் போக்கும் நோக்கும் ஆக்கக் கேடுகளாய் வீக்கமுற்று அவநிலையில் நிற்கின்றன.

உண்மை நிலையை உணர்ந்து கொள்வதே நன்மையான அறிவாம்; அங்ஙனம் உணராதது புன்மையாய்ப் புலையுறுகின்றது.

ஒருவனுடைய வாழ்வு குறிக்கோளுடையதாயின் அது நெறியே சென்று கருதிய பலன்களைக் கைவரப் பெறுகின்றது. குறியில்லாதது குருட்டு வாழ்க்கையாய் இருளடைந்து ஒழிகின்றது. குறியான கருத்தின் அளவு விருத்தி விளைகின்றது.

உணர்வுடைய மனிதப் பிறப்பை உற்றவன் உறுதியாகக் கருதி ஒழுக வேண்டியது தனது இறுதி நிலையும் உறுதி நலனுமேயாம். முடிவு நேருமுன் முடிவு கண்டு கொண்டவன் பிறவித் துயரின் விடிவு காண்கின்றான். அவ்வாறு காணாதவன் எவ்வகையிலும் யாதொரு நலனுமின்றி வெவ்விய நிலையில் வீணே கழிகின்றான். அறிவு விழி இழிவாய் அவமே அழிகின்றது.

தன்னை நோக்கி உணரும் அளவே மனிதன் உன்னத நிலையை அடைகின்றான், நோக்கம் குன்றின் ஆக்கம் பொன்றுகின்றது.

ஒரு நாள் அறுபது நாழிகைகளையுடையது. நாளுமிவை நளினமாய்க் கழிந்து போகின்றன. இங்ஙனம் போகும் பொழுதுள் ஒரு கணமேனும் தன்னைத் திரும்பிப் பாராதவன் பின்பு சாகும் பொழுது என்ன பலனைப் பார்ப்பான்? இதனை உன்னி உணர வேண்டும். சீவ பார்வை தேவ பார்வை ஆகின்றது.

தனது உயிர்நிலையை ஒருசிறிதும் ஓர்ந்து உணராமல் வெளி முகமாய் மனிதன் யாண்டும்.அலைந்து திரிவது நீண்ட மாயாவினோதமாய் மூண்டு நெடிய கொடுமையாய் நிற்கின்றது.

உலக ஓட்டம் கலக நீட்டமாய்க் கலித்து நிற்றலால் கதியுணரும் காட்சியாளர் அதனைக் கண்டு கவன்று என்றும் வருந்தி யாண்டும் கண்ணோடி நிற்கின்றார்.

நீரோட்டத்(து) உள்பட்ட நீள்துரும்பு போலுலகப்
போராட்டத்(து) உட்பட்டுப் போகின்றாய்!

என்றது மனிதனுடைய வாழ்க்கை நிலையை நுணுகி நோக்க வந்தது. போன போக்கிலேயே ஓர் ஓட்டமாய்ப் போதல் கருதிப் பார் ஓட்டத்தை நீரோட்டத்தோடு ஒப்ப வைத்தது.

பெரிய நதியில் வெள்ளம் பெருகி ஒடுகின்றது. அந்த நீர்ப் பெருக்கின் இடையே ஒரு துரும்பு விழுந்தால் நீர் ஓட்டத்தின் வழியே விரைந்து போகுமே அன்றி அயலே திரும்பி மீளாது. மனித வாழ்வும் அவ்வாறே உலகப் போக்கில் போகின்றமையால் அது இங்கே உவமையாய் நேர்ந்தது.

உலகமாகிய ஆற்றிலே கால வேகமாகிய நீரோட்டத்திலே மனிதத் துரும்புகள் படுகின்ற பாட்டை இது காட்டுகின்றது.

நீர் ஓட்டத்தில் பட்டது கடலை அடைகின்றது; பார் ஓட்டத்தில் பட்டவரும் துயரக் கடலில் வீழ்ந்து பின்பு பிறவிக் கடலிலேயே ஆழ்ந்து படுகின்றார். அதை உணர்ந்து தேறின் பயனடைய விரைந்து நேர்கின்றார். உணராவழி ஒழிந்தே போகின்றார்.

நம் கதி என்ன? நாம் என்ன செய்ய வந்தோம்? நாளும் ஆயுள் கழிந்து போகின்றதே, காலம் கரைந்து போவது காலன் விரைந்து மேல் வருவதாமே, இறந்து படுமுன் பிறந்த பயனை அடைந்து கொள்ள வேண்டுமே; இது பொழுது அடையாவிடின் பின்பு யாதும் கிடையாதே' என இன்னவாறான சிந்தனைகள் உயிர்க்குறுதி நலங்களை உதவியருளுகின்றன.

’பார் ஓட்டம் கண்டு திரும்பிக் கதி தெளிக’ தன்னை மறந்து வைய மய்யலிலே களித்துத் திரிகின்ற மனிதன் சிறிது விழித்து நோக்கித் தனக்கு வேண்டியதை உணர்ந்து கொள்ளும்படி இது வேண்டி நின்றது.

தேகம் ஆகிய ஆலயத்துள் அமர்ந்துள்ள ஆன்ம தேவதையை அமைதியாய்த் தரிசித்தவன் அதிசயமான பேரின்ப வாழ்வைப் பெறுகின்றான். ஞான நோக்குடன் அங்ஙனம் காணாமல் ஊன நோக்கமாய் உலக ஆசையில் வெறி கொண்டு அலைந்தவன் முடிவில் ஈனமே கண்டு இழிந்து கவல்கின்றான்.

ஆன்ம நாட்டத்தில் சாந்த சீலம் ததும்பியுள்ளது; அங்கே தண்ணமுதம் பொழிகின்றது. அந்த நாட்டத்தை இழந்து உலக ஓட்டத்தைத் தொடர்ந்த போது அது வெறிகொண்ட பேயாட்டமாய்ப் பெருகிப் பெருங்கேட்டுக்கே ஏதுவாகின்றது.

விதேக தேசத்து அதிபதியான சனக மன்னன் ஒரு நாள் தனது அழகிய அரண்மனையின் மேல் மாளிகையில் தனியே அமர்ந்திருந்தான். இராச வீதியில் சனத்திரள் விரைந்து அலைந்து திரிகின்ற அலமரலைப் பார்த்தான். இந்தப் பாடுகள் படுகின்றனரே! முடிவில் இவர்கள் கதி என்ன? என்று கருதி மறுகினான். உலக நிலையை எண்ணி உள்ளம் உருகினான். அந்த ஞான சீலன் அன்று பரிந்து மொழிந்தன யாரும் என்றும் நினைந்து சிந்திக்கத் தக்கன. அயலே சில பாடல்கள் வருகின்றன.

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)

பறக்கின்ற பறவைகளின் சிறகென்ன அனவரதம்
பதைத்து லாவி
இறக்கின்ற உலகநடை நோக்கிவாய் விட்டிரங்கி
இயம்ப லுற்றான்;
அறக்கன்றி அவத்திலுழன்(று) அலமருமிவ் வுலகிடையான்
அந்தோ அந்தோ!
நிற்கின்ற மயக்கத்தால் கல்லிடைகற் போலுருண்டு
நெரிந்தேன் அந்தோ! 1

எல்லையிலா அண்டத்தில் யானாளும் புவிநோக்கில்
இறையும் இல்லை;
அல்லலுறும் இதுபெரிதாய் ஆதரித்து நிற்பதுவும்
அந்தோ! அந்தோ!
புல்லிமையற்(று) இனிதாகி உதாரமாய்ச் செயப்படாப்
பொருள்ஈ(து) என்னத்
தொல்லுலகில் ஒருபொருளும் காணேனித் தொடர்ச்சிநிலை
என்னே! என்னே! 2

மண்ணாடும் மன்னவரும் அவர்தனமும் மாண்டனநுண்
மணலை ஒக்கும்:
விண்ணாடும் இந்திரரும் அவர்வாழ்வும் போயினவிண்
மீனை ஒக்கும்;
எண்ணாடும் பிரமரும்அண் டமும்பூதங் களுமிறந்த
எல்லை இல்லை;
கண்ணாடும் அவைஎங்கே? நின்வாழ்க்கை நிலைஎன்னே
கவலும் நெஞ்சே! 3

பாலகனாய் அஞ்ஞானத் தழுந்துவன்நற் காளையாயப்
பாவை மாரால்
சாலவருந் துவன்;விருத்தன் தானாகிக் குடும்பத்தில்
தளர்த்து சாவன்;
ஏலயிவன் எக்காலத்(து) என்செய்வான் மாயக்கூத்(து)
இருந்த வாறே
ஞாலமெலாம் ஆடரங்காய்ப் பொறிமேள மாய்மனப்பேய்
நடிக்கு மன்றே. 4

வெம்மாய வாழ்வன்றோ துயர்க்கெல்லாம் பிறப்பிடமாய்
விளம்பு கின்றது;
அம்மாஇங் கிதனிடையே அழுந்துமவர்க்(கு) இன்பமுள(து)
ஆவ(து) எங்ஙன்?
மைம்மாயை என்னுமரம் பணையிலைபூ காய்பழத்தால்
வரம்பற்(று) ஓங்க
இம்மால்செய் மனம்வேராம்; இம்மனம்தான் சங்கற்பம்
என்ப தாகும், 5

சங்கற்ப நாசத்தால் எளிதாக மனநாசம்
தானே எய்தும்;
அங்குற்ற மனமிறக்கின் சநநமர ணங்களெனும்
மரமும் மாயும்:
இங்கிப்பால் எனைத்திருடும் கள்ளனைக்கண் டேன்;கண்டேன்
இவன்பேர் நெஞ்சம்
பொங்குற்ற நெஞ்சத்தால் நெடுநாள்நொந் தேன்இன்று
பொன்று விப்பேன். 6

பேதிக்கும் மனமென்னும் பெரும்பகையை முழுவலியால்
பிளங்து வென்றேன்;
வாதித்த துயரெல்லாம் மாற்றினேன் உபசாந்த
வாழ்வு பெற்றேன்;
சாதித்த விவேகமே உனைவணங்கி னேனென்று
சனகர் கோமான்
சேதித்த மனஅலைவெல் லாம்ஒழித்துத் தானேசித்
திரம்போல் நின்றான். 7 ஞான வாசிட்டம்

தத்துவ உணர்ச்சிகள் ததும்பி வந்துள்ள இந்தப் பாசுரங்களை உள்ளம் கனிந்து உற்று நோக்குபவர் உறுதி நலங்களை ஓர்ந்து கொள்ளுவர். சனகனுடைய அனுபவ நிலைகள் ஆன்ம அமுதங்களாய் வெளி வந்துள்ளன. மொழிகளைப் படித்த அளவில் விலகி விடாமல் படிந்துள்ள பண்புகளை உரிமையுடன் உணர்ந்து கொள்ள வேண்டும். பெரிய உள்ளத்திலிருந்து விளைந்திருக்கின்ற அரிய சிந்தனைகள் ஆருயிர்களுக்குப் பேரொளிகளாய் ஆறுதலருளுகின்றன. கருணையால் உருகி வந்தன கருதி உணரவுரியன.

பறக்கின்ற பறவைகளின் சிறகுகள் போல் அனவரதம் பதைத்து உழலுகின்றது என உலக நடையை அவன் கருதியுள்ள காட்சி கருத்துடையார் எவர்க்கும் கண்ணைத் திறந்து காட்டியுள்ளது. வாழ்க்கைப் போராட்டத்தில் பேராசை வெறியராய்ச் சீவர்கள் படுகின்ற பாடுகளை இப்படிப் பாவனை செய்திருக்கிறார்.

லபோ, திபோ என்று அடித்துக் கொண்டு உழந்து திரிகிறார்களே முடிவை உணர்ந்து கொள்ள வில்லையே! என முடி மன்னன் வருந்தியுள்ளமை வாக்கு மூலத்தால் அறிந்து கொள்ள வந்தது. வயிற்றை வளர்க்க விரும்பி உயிரை இழந்து போதலால் அந்த வாழ்க்கைப் போராட்டம் அதிக பயங்கர மாயது.

The struggle for livelihood or success is so terrific that higher values are strangled. - Silence

பொருளைத் தொகுத்து உடலை ஓம்புதற்காக மனிதன் படுகிற பாடு உயிரின் உயர்ந்த குறிக்கோள்களை இழந்து விடும் கேடாய்க் கிளர்ந்து நிற்கின்றது” என்னும் இது இங்கே அறிய உரியது. நிலையான நிலையை நினையாது போவது புலையாகின்றது.

வயிற்றை மட்டும் வளர்த்து வாழ்நாளைப் பாழாக்குவது கொடிய பரிதாபமேயாம். அமைதியுடன் சிறிதேனும் தன்னை நினைந்து பாராமல் அவ நிலையில் அவாவி அலைதல் அழி கேடாதலால் அவ்வழி விலகி நின்று விழி திறந்துய்ய வேண்டும்.

அரிய திருவுடைய பெரிய அரசனாயிருந்தும் உலக நிலையில் ஒரு சுகமுமில்லை என்று தெளிந்து சனகன் அடைந்துள்ள அமைதியை விழைந்து காணின் மேலான கதி நிலையை எவரும் உணர்ந்து கொள்ளலாம். உபசாந்த வாழ்வு பெற்றேன் என்னுமந்த மன்னன் வார்த்தை இன்னமிர்தம் அனையது.

மிகுந்த ஆசையால் பறந்து திரியாதே; அமைதியாய் ஆன்ம சிந்தனை செய்து உனது வாழ்வை இனிது நடத்துக; உறுதியுண்மையைக் கருதி ஒழுகுவது பெரிதும் நலமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Aug-19, 8:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே