என்ன கண்டீர்
****************
நானென்றும் நீயென்றும் நம்மில் பேதம்
நாசங்கள் விளைவிக்கும் நாற்ற வேதம்
தேனென்றும் தினையென்றும் தேடா துண்ணத்
திரிகின்ற தாலிந்த தீரா மோகம்
தானென்னும் அகங்காரத் தாலே ஆளும்
தர்க்கத்தில் யுத்தங்கள் தானே மூளும்
வானெட்டும் விமானங்கள் வாகை சூடும்
வகையான ஆர்ப்பாட்ட மேகம் சூழும்
*
அன்றாடங் காய்ச்சிக்கு ஆப்பாய் மாறும்
அநியாய விலைவாசி ஆட்டம் போடும்
கன்றாவிக் கோலத்தைக் காட்டும் போரால்
கண்ணோரம் வழிந்தோடக் கண்ணீ ராறே
முன்னேறி முன்செல்ல மோதித் தள்ளும்
முன்னேற்ற மெல்லாமும் முடக்கிப் போடும்
தன்மானம் பெரிதென்ற தத்தம் கர்வம்
உலகமிலா தாக்கி மாய்க்கும்!
*
மண்ணுக்காய் போர்செய்து மாயு மிந்த
மனிதர்தம் மமதையாலே மாக்க ளாகிப்
புண்செய்யும் பொல்லாத போக்கு மிங்குப்
பூமீது தீவாசம் பூசும் வண்ணம்
விண்ணேவும் எரிகணைகள் வீழ வைத்து
விசக்காற்றைப் பரப்பிவைத்தல் வீர மாமோ
எண்ணிப்பா ரென்றாலும் எண்ணி தோரே
ஏற்படுத்தும் யுத்தத்தால் என்ன கண்டீர்?
**