அம்மா
ஒனக்கு பாட்டெழுத 
    ஒலகத்தையே நான் படிச்சே(ன்) ... 
ஒரு வார்த்தை கிடைக்கலையே...
     ஒனக்கீடா எனையில்லையே ...!
ஓடி வந்து ஒருத்தன் சொன்னா(ன்) ...
அம்மான்னா "சாமி"ன்னு ...!?
மனசுக்கது ஒப்பலையே ...
கருவறையில எடங்கொடுக்க
அந்த சாமிக்குத்தான் மனசில்லையே...
ஓ(ஞ்) சாமியாவே என்ன வச்சு 
    பாத்து மாசம் சொமந்து வந்த...!
ஒத்த வேள தவறாம 
    ரத்தத்துல பூச செஞ்ச...!
தொப்புள் கொடி ஏத்தி வச்சு  
     திருவிழாவா பெத்தெடுத்த...! 
இன்னொருத்தன் ஓடி வந்தா(ன்)...
    அம்மான்னா "அன்பு"ன்னா(ன்)...
அன்புக்கு கஷ்ட(ந்) தந்தா 
     அரவணைச்சு ஏத்துக்குமா...?
ஓ உசுரையே எட்டி ஒதைச்சு
     ஒரு பிண்டமா பெறந்து கெடந்தேன்...! 
வெறுத்து நீ போயிருப்பன்னு
    விம்மி விம்மி அழுது ஓஞ்சேன்...
கொஞ்சமு(ம்) அலட்டிக்காம 
    மார்போரம் அரவணைச்ச...!
மிச்ச வச்ச ரத்தத்தையும் 
    தாய்ப்பாலா(ய்) கொடுத்துப்புட்ட...!
ஒனக்கு நா(ன்) பாட்டெழுத 
     ஒத்த வார்த்த கெடைக்கலையே...
தேடி தேடி ஓஞ்சி போயி
      மரத்தோர(ம்) ஒதுங்கி நின்னே...
கார்மேக(ம்) கூடிருச்சு...
"சீவராசி" மொத்தமுமா மழையிலதான் நனஞ்சிருச்சு...
ஒன்னு ரெண்டு சாரல் மட்டும் 
    மழைக்கு ஒதுங்கலான்னு... மரத்தடிக்கு வந்துருச்சு...!  
நனைஞ்சு வந்த சாரல் கிட்ட 
     யாரு?ன்னு நா(ன்) கேட்டே(ன்)...!
"சீவராசு" அம்மா'ன்னுச்சு ...!
எப்புடி?ன்னு  நா(ன்) கேட்டே(ன்)...! 
ஒத்த செல்லா பெத்தெடுத்தே(ன்) ...
    கோடி கோடி வருஷ(ம்)  ஆச்சு ...
இப்ப கூட வேணுன்னா  
     அரவணைக்க வந்துடுவே(ன்)...
வேணான்னு தூக்கி எறிஞ்சா
     கடல் எல்லையில... காத்து கெடப்பேன்...! 
மழை பேஞ்சு ஓஞ்சு போச்சு  ...
அம்மா ஒன்ன  பாட ... 
வார்த்தையும்தான்  கெடச்சு போச்சு...
அம்மா நீ எந்தன் மழைத்துளி...!!!

