வாழ்வும் சதுரங்கமும் பகுதி 3 - யானை

வாழ்வும் சதுரங்கமும் பகுதி -3

யானை

நேரிய பார்வை
நிமிர்ந்த நன்னடை
குறுக்குப்பாதையை ஒருபோதும்
விரும்பாதவன்
அதனால் தான்
அவனை எதிர்ப்பதில்
பலருக்கு தயக்கம்
அதுவே அவன் பலம்

தன்னுடைய பலம் அறிந்தும்
நிதானமாக பொறுமை காத்து
தெளிவாக தன் முடிவுகளை
எடுக்கிறான்
சில சமயம் சூழ்நிலை காரணமாக
வீழ்கிறான்

அவனுடைய வீழ்ச்சி என்றுமே
மற்றவர்களுக்கு
பெரிய இழப்பை ஏற்படுத்தும்
ஏனென்றால் அவன் நேர்மையால்
பலராலும் ஈர்க்கப்பட்டவன்

நட்புக்காக சாதியையும் மதத்தையும்
தூக்கி எறிந்த நண்பனைப்போல
தன் பிள்ளைக்காக எதையும் செய்யும்
தந்தையைப்போல
உறவுக்காக தன் உடைமைகளை
இழந்தும் புன்னகையுடன் வாழும் மனிதனைப்போல தான்
இந்த யானைகள்
அவர்களின் இழப்பு ஏற்க முடியாவொன்று

இந்த யானைகள்
நிகழ்கால வாழ்வில்
அதிகம் தேவைப்படுபவை
அதிகம் தேடப்படுபவை
ஏனென்றால் இவர்கள்
மந்திரியைப்போல அல்ல

பொதுவாழ்வில் சமூகத்தில்
பலராலும் பேசப்படுபவர்கள்
இவர்களுக்கும்
மதமுண்டு சாதியுண்டு
கொள்கையுண்டு
இருந்தாலும் வேறுபடுகிறார்கள்

ஒரே கோட்டில் பயணிக்கிறார்கள்
சமூக மாற்றத்தை உணர்கிறார்கள்
மந்திரியை போலன்று
தன்னைப்போல சக யானையை
காக்க முற்படுகிறார்கள்

இருந்தும் சில
சமயம் மந்திரிகளின்
சூழ்ச்சியாள் வீழ்கிறான் அவன்

பிள்ளையின் ஆசையை அறிந்தும்
நிறைவேற்ற இயலா சூழலில்
தவிக்கும் தந்தையைப்போல

உதவ மனமிருந்தும்
உதவ இயலா
சூழலில் தவிக்கும்
நண்பனைப்போல தான்
இந்த யானைகள்

அவர்கள் மேல்
ஒருபோதும் கோபம் கொள்ளாதே
காரணம் இச்சமூகம்
அதிக அளவில் மந்திரிகளால்
நிறைந்திருக்கிறது
காலம் காலமாக

உங்களை சுற்றியும்
இந்த யானைகள்
இருக்கிறார்கள்
நல்ல தாய் தந்தையாக
நல்ல உறவாக நட்பாக
நல்ல காதலன் காதலியாக
அவர்களை ஒருபோதும்
இழந்து விடாதீர்கள்

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (27-Aug-19, 9:43 am)
சேர்த்தது : இனியன்
பார்வை : 146

மேலே