பிக்பாஸ் சேரன் - லாஸ்லியா - கவின்

இந்தவாரம் புறம் தள்ளுதல் இல்லை என்பதால் ஆண்டவர் ஞாயிற்றுக்கிழமை என்ன பண்ணப் போறாரோன்னு யோசனையாக இருந்தது. சனிக்கிழமை வேற மரண மொக்கையா இருந்ததால் இன்றும் மொக்கைதான் தொடரும் என்பதாகவேபட்டது.



இந்த வீட்டுக்குள்ள ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்துறாங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க... ஆனா நம்ம பெண்கள் எல்லாம் பதக்கங்களை வாங்கிக் குவிக்கிறாங்க... அவங்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது என சின்னதாய் ஒரு பிரசங்கம் முடிச்சிட்டு கமல் அகம் டிவி வழியே அகத்துக்குள் புகுந்தார்.



எட்டுப் பேரும் வரிசையா இருந்தாங்க... சில வாரமாக கர்ணனும் கவசகுண்டலமுமாக இருந்த கவின் லாஸ்லியாவின் நெருங்கமான அமர்தலுக்குள் சாண்டி வரப்பாய் அமர்ந்திருந்தார்.



இந்த வாரம் யாரு தப்புச் செஞ்சாலும் 'ஐ மேட் எ மிஸ்டேக்'குன்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அது ஏன்..? அப்படியென்னய்யா தப்புப் பண்னுனீங்க... அப்ப யாருமே சரியா விளையாடலையா... அதெதுக்குச் சொல்றீங்கன்னு டுவிட்டர் கமலாய் பேசினார்... அது யாருக்கெல்லாம் புரிந்ததோ தெரியலை.



அப்படியே 'காலர் ஆப் த வீக்' போன் காலுக்குப் போனார்.



கேள்வி லாஸ்லியாவுக்கு...



சேரன் உங்கள் மீது பாசமாக இருக்கிறார்... நீங்களும் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.... இருந்தாலும் உங்களிடம் கவின் சேரனின் பாசத்தை டிராமா என்று சொல்லும் போது நீங்க ஏன் பேசாமல் இருந்தீர்கள்..? எனச் சரியான கேள்வியை முன் வைத்தார் ஈரோட்டில் இருந்து பேசிய பெண்.



லாஸ்லியா ஆடிப் போனாரோ இல்லையோ கவின் ஆடிப் போயிட்டார்... என்னைக்கோ பேசியதை இன்னைக்குத் தூக்கி வருவாங்கன்னு இருவரும் எதிர்பார்க்கலை... மொக்கைத்தனமான கேள்விகள் என சில வாரத்துக்கு முன் எழுதியிருந்தேன்... நேற்று கேட்கப்பட்டது மொரட்டுத்தனமான கேள்வி.



அன்னைக்கு மனநிலையில் கவின் சொன்னது உண்மையாக இருக்குமோ எனத் தோன்றியது அதனால் எதுவும் பேசவில்லை... அதன்பின் சேரப்பாவிடம் பேசி எல்லாத்தையும் சரி பண்ணியாச்சு.. இப்ப நாங்க அப்பா மகள்தான் உங்களுக்குக் காட்டப்படும் ஒரு மணி நேரத்தில் எங்களின் பாசத்தை பொரியலாகத்தான் காட்டமுடியும்... முழு பதார்த்தத்தையும் காட்ட முடியாதுல்ல என்பதாய்ப் பேசி முடித்திருக்கலாம்.



ஆனால் நாங்க இப்ப கவினின் ஆள்... அவரிடம் மடக்கிப் பேசும் வித்தையைக் கற்றிருக்கிறோம் அல்லவா... அதானால் மூணு வாரத்துக்கு முன்னாடி நிகழ்ந்த பிரச்சினைக்கு முந்தாநாள் ராத்திரி சிக்கன் சாப்பிட்டதில் ஆரம்பித்தார். அதாவது குழப்பமான மனநிலையில் எது சரி..? எது தவறு..? எது உண்மை...? எது போலி...? எது அன்பு...? எது வீம்பு...? என தனக்கு இன்னும் புரியவில்லை... நிறைய விஷயங்களை மண்டைக்குள்ள போட்டு குழப்பிக்கிட்டு இருக்கேன்... இதெல்லாம் பேசாமல் தீராது... எப்பவும் எனக்காக காத்திருப்பேன்னு சொல்வார் ஆனா சிக்கன் வந்தா உடனே சாப்பிட்டிருவார். டாஸ்க்கின் போது எனக்கு உதவுவார்ன்னு பார்த்தா திட்டுவார் என்றெல்லாம் ஏதேதோ பேசி கண்ணைக் கசக்கி சரோஜாதேவியை மிஞ்சினார்.



யாரிடம் உண்மையான பாசம் இருக்கு, சேரனிடமா அல்லது லாஸ்லியாவிடமா..? என்பதுதான் முக்கியமாய் யோசிக்கப்பட வேண்டிய விஷயம். சேரனைப் பொறுத்தவரை பாசத்தில் துளி கூட வேசமில்லை... ஆனால் லாஸ்லியாவுக்கு இப்போது சேரனைவிட தானே முக்கியம் என்பதாய் கவின் ஆக்கி வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட கக்கூஸ் போகும் நேரம் தவிர்த்து எல்லா நேரமும் கவின்தான் அரணாய் நிற்கிறார்... இது லாஸ்லியாவுக்கான பாதுகாப்பு அல்ல... கவினுக்கான பாதுகாப்புக்காக என்பதை லாஸ்லியா உணரவில்லை. சேரனிடம் லாஸ்லியா முன்பு போல் இருக்கும் பட்சத்தில் கவினுடனான உறவு பெவிக்கால் போட்டு ஒட்டப்பட்டிருந்தாலும் விரிவு ஏற்படும் என்பதை அவர் நன்றாகவே அறிந்திருப்பதாலே இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சி. தனக்கான துணை என வரும் போது லாஸ்லியா தன்னையே முன்னிறுத்த வேண்டும் என்ற காய் நகர்த்தலில் கவின் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்.



சேரனைப் பொறுத்தவரை உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனிதராய் இருக்கிறார். லாஸ்லியா இந்த வீட்டுக்குள் இருக்கும் வரைதான் மகள்... வெளியில் போனதும் கவினையே தூக்கி வீசினாலும் வீசக்கூடும் என்ற நிலையில் சேரனெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்.



சாப்பாட்டு விஷயத்தைக் கையில் எடுத்ததைத்தான் சேரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருமுறை சாண்டி அவர் காத்திருக்கார் என்று சொன்னபோது இருக்கட்டும் என்பதாய் கவினுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தவர்தான் லாஸ்லியா. சில வேளைகளில் குளித்து மேக்கப் போட்டுக் கொண்டு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் எல்லா நாளும் காத்திருக்க, சமீபத்திய லாஸ்லியாவின் நடவடிக்கை இடம் கொடுத்திருக்காதுதான்.



வனிதா சொன்னதைப் போல் அப்பா என்ற இடத்தைக் கொடுத்திருக்கும் நிலையில் அவருக்கு முன்னே நாளெல்லாம் சிகப்புக் கேட்டுக்கிட்டே கவினுடன் காதல் லாவணி பாடுவதென்பது அவருக்குக் கொடுக்கும் மரியாதை இல்லைதான் என்றாலும் அப்பா என்பது வேறு... அப்பா ஸ்தானம் என்பது வேறு... சேரனுக்கு லாஸ்லியா கொடுத்திருப்பது அப்பா ஸ்தானம்தான்... அதை எப்போது வேண்டுமானாலும் அவர் தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பார். பெத்த அப்பனையே யார் நீன்னு கேக்க வைக்கும் காதல் சில நாள் உறவில் அப்பாவாய்த் தெரிகிறாய் என்று சொன்னவரைத் தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும்..?



இதற்குள் உடைந்து பாசத்தில் உருகி நிற்பதெல்லாம் தேவையில்லாது... இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி... இதில் வெற்றியை நோக்கித்தான் நகரணுமே ஒழிய பாசத்தில் படுத்துக் கொண்டு பகல் கனவு காணக்கூடாது. வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்த சேரன் லாஸ்லியாவை சக போட்டியாளராய்ப் பார்த்து உறவுக்குள் இருந்து விலகி நிற்பது தொடர்ந்து வெற்றியை நோக்கிப் போராட உந்துதலாக இருக்கும்... அதைச் சேரன்தான் செய்ய வேண்டும்.



முன்பொரு பதிவில் சொன்னது போல் உடைந்த மண் பானை ஒட்டாது என்பதை சேரன் உணர வேண்டும். சேரனுடன் பேச நேரமே இல்லாதது போல் லாஸ்லியா பேசியதெல்லாம் என்ன வகையில் சேர்த்தி என்று புரியவில்லை... விளக்கணைத்த பின்னும் மணிக்கணக்கில் கவினுடன் பேச முடியும் போது பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி தன் கேள்விகளைக் கேட்க முடியாதா என்ன.. கேக்குறவன் கேனையன்னா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்வாங்களாம்.



பார்வையாளர்களின் கேள்விகள்... போட்டியாளர்களின் பதில்கள்... பழைய சேரனாய்த் திரும்பி வருவீங்களா..? ஷெரின் எப்ப உங்க விளையாட்டை விளையாடுவீங்க...? தர்ஷன் உங்க நண்பர்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை எப்போ கேட்பீங்க..? கவின் எல்லாப் பெண்களிடமும் வெளியே போய் பேசுவோம்ன்னு சொல்றீங்க... அப்படி என்ன பேசுவீங்க...? லாஸ்லியா நீங்க வந்த நோக்கம் நிறைவடைந்ததா..? கவின் கேம் நல்லா விளையாடுறீங்க... எப்ப சாண்டிக்கு சொல்லிக் கொடுப்பீங்க..? சாண்டி நீங்க மற்றவர்களைக் கலாய்க்கிறீங்க... அதை அவங்க ஏத்துக்கணும்ன்னு நினைக்கிறீங்க... ஆன உங்க பிரண்ட்சை யாராச்சும் கலாய்ச்சா உன்னை டார்கெட் பண்றாங்கன்னு சொல்றீங்க... அது ஏன்..? முகன் தமிழ்நாட்டுலயே தங்குவீங்களா..? லாஸ்லியா காதலைப் பற்றி வேறென்ன உங்களிடம் கேட்பது..? வனிதாக்கா தர்ஷன் ஈசி டார்க்கெட்டுன்னு முடிவு பண்ணிட்டீங்க... அடுத்த டார்கெட் யாரு..? கொசுவையே அடிச்சி விரட்டுன நீங்க யானைகளை ஒன்றும் செய்யாதது ஏன்..? என்பதாய்க் கேள்விகள்... ஒரளவுக்கு நல்ல பதில்கள்.



வனிதா மட்டுமே ஈசின்னா என்னன்னு விளக்குங்க என்றார். உடனே கமல் இப்ப கேள்வி கேட்ட நீங்கதான் டார்க்கெட் என அடித்தாரே பார்க்கலாம். செம. அப்புறம் லாஸ்லியாவிடம் இது பாண்டி கிடையாது... இது போட்டி... சேரப்பா.. தர்ஷன் அண்ணன், கவின் தம்பி.... என்னோட தம்பின்னு சொன்னேன்... அப்படின்னு கைகளைப் பற்றிக்கப் பார்க்காதீங்க... உங்களுக்கு கையைப் பிடிச்சிக்கணும்ன்னா என்னைப் பாலோப் பண்ணுங்க... உங்க கையை நீங்களே பற்றிக்கங்க என ஆறுதல் சொன்னார். சேரனிடம் இது மட்டுமே வாழ்க்கையில்லை... மகளுக்கு பொறந்த வீட்டை விட புகுந்த வீடு பெரிது... புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கான சுதந்திரத்தை கொடுத்துடுங்க என்றார்.



அப்புறம் காடு, பாசம், வாழ்க்கை, நட்பு, போட்டி என சில வார்த்தைகளை வைத்துக் கதை சொல்லச் சொன்னார். எல்லாரும் சொல்ல சேரன் மட்டும் இதுல உண்மை, பொய்ங்கிற வார்த்தை இல்லை சார்... அது இருந்தாச் சொல்லலாம்.... இப்ப அந்த மனநிலையும் இல்லை என்றார். உடனே கமல் கதை சொல்வதை விரும்புபவர் இப்பச் சொல்ல விரும்பவில்லை. எல்லாரும் கதை சொல்ல பயிற்சி செய்யும் போது அவர் தனியே இருந்தார்... வனிதா மட்டுமே அவருடன் பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னார். வனிதா சுற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பவர் என்றாலும் அந்த நேரத்தில் அவரின் பேச்சு உண்மையிலேயே சரியானதாகவே இருந்தது.



சேரனிடம் உண்மை பொய் இணைத்துச் சொல்லுங்களேன் என்ற போதும் மறுக்க, சரி வெளியில் வந்து என்னிடம் சொல்லுங்க என்றதும் தேவர்மகன்-2 சொல்லுறேன் சார் என்றார். பாசத்துக்கு இவ்வளவு இடம் கொடுத்தல் மோசமானது மிஸ்டர் சேரன்... நீங்க கதை சொல்லியிருக்கணும்... அதைத் தவறவிட்டுட்டீங்க.



இந்த வாரம் வெளியேற்றம் இல்லை எனக் குறும்படம் போட்டுக் காட்டி கமல் வெளியேற, சேரன், லாஸ்லியா, கவினுக்குள் புயல் அடிக்க ஆரம்பித்தது. கஜாவில் வேரோடு சாய்ந்த தென்னை போலானார் சேரன். லாஸ்லியாவைப் பொறுத்தவரை சேரனைவிட கவினே முக்கியம் என்ற நிலையில்தான் இருக்கிறார் என்பதால் கவின் ஆறுதல் சொல்லவில்லையே என்ற வருத்தமே மனசுக்குள் அதிகமாய். கவின் கிடைத்த வாய்ப்பில் மிக அழகாக காய் நகர்த்தி விளையாட ஆரம்பித்தார்.



எல்லாரிடமும் விலகி இருப்பது போல் ஒரு நடிப்பை அழகாக அரங்கேற்ற ஆரம்பித்தார். போன வாரம் கமல் சொன்னவுடன் இனிப் பாருங்க என் விளையாட்டை எனச் சீனைப் போட்டுவிட்டு லாஸ்லியாவை எப்படிப் படிய வைப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். இந்த வாரம் கமல் வேறு நட்புக்காக விட்டுக் கொடுப்பதாய் சொல்லும் அந்தப் பொய்யான வார்த்தைகளுக்கு மாலை போட்டு மரியாதையும் செய்துவிட்டார். இப்போது அடுத்த நாடகத்துக்குத் தயாராயிட்டார்.



சேரன் இடையில் வருகிறார்... அப்பா மகள் நடிப்பெல்லாம் எதற்கு... அவளுக்கு விட்டுக் கொடுத்துட்டுப் போவாரா இவர்... என சேரனை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டுகிறார்... கவினுக்கு இப்போதைய பிரச்சினை சேரனே. எங்கே அப்பா மகள்ன்னு ஆரம்பிச்சிருவாங்களோன்னு பயம் மனசுக்குள்... இந்த வாரம் சேரனை நாமினேசனில் கொண்டு வர முயற்சி எடுக்க ஆரம்பித்து விட்டார். ஷெரினிடம் பேசும் போது மெல்லத் தர்ஷனையும் இழுத்ததெல்லாம் சேரனைக் கெட்டவர் என்று முன்னிறுத்தவே... லாஸ்லியாவிடம் பேசாதிருப்பது அவரை சேரனிடம் பேச விடாமல் செய்யவே... எல்லாமே முன்முடிவுகளுடன் நகர்த்தப்படும் காய்கள்தான். கவின் ரகுவரனுக்கெல்லாம் அப்பன் என்பதை இனி வரும் வாரங்கள் சொல்லும்.



சேரன் மனசு வலிக்கிதுன்னு உட்கார்ந்து யோசிப்பதும் வனிதா மற்றும் தர்ஷனுடன் பேசுவது தேவையில்லாதது. அவரின் மகள்கள் அப்பாவை கவினெல்லாம் கேலி பண்ணுவதையும் கேவலமாகப் பேசுவதையும் வெளியில் பார்த்து அழக்கூடும்... அதுவே உண்மையான பாசம்... இவரோ தனது பாசம் உண்மையில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒருத்திக்காய் அழுவதெல்லாம் தேவையில்லாதது. உணர்ச்சிகளுக்கு இவ்வளவு தூரம் அடிமையாகக் காரணமென்ன... உறிச்சிப் போட்ட பாம்புச் சட்டையை மீண்டும் அணிய முடியாது... லாஸ்லியா உறிச்சிப் போட்ட பாம்புச் சட்டைதான் தான் என்பதை உணர்தல் நலம். கவின், சேரனில் ஒருவர் வெளியேறும் வரை இப்பிரச்சினை தொடரத்தான் செய்யும். சேரன் வெளியேறினால் பிக்பாஸ் காதல் பாஸாவார்... கவின் வெளியேறினால் மீண்டும் அப்பா - மகள் அவ்வளவு முக்கியத்துவம் பெறாது... விளையாட்டு விளையாட்டாய் நகரும்.



வனிதாவுக்குள் ஒரு வேகம்... யாரு வெளிய போகனும்ன்னா என்னையச் சொல்றாங்க... அப்புறம் சாப்பாடு நாந்தான் செய்யணுங்கிறாங்க... வக்கிறேன் ஆப்புன்னு தினம் ரெண்டு பேருன்னு சட்டம் போட்டுட்டாங்க... ஆஹா... இது சூப்பரு... செல்லப் பிள்ளையா சுத்துற லாஸ்லியாவுக்கெல்லாம் செம ஆப்பு.... வனிதாக்கா எப்பவாச்சும் இப்படியெல்லாம் செஞ்சு கலக்கிடுறாங்க.



லாஸ்லியா இப்போது வனிதாவுக்கு சாமரம் வீச ஆரம்பிக்கிறார்... இது எதற்கான ஆரம்பம் என்று தெரியவில்லை...



சாண்டி, தர்ஷன் சொல்லியும் சேரனிடம் மன்னிப்புக் கேட்கத் தோன்றவில்லை லாஸ்லியாவுக்கு... அவரின் கவலையெல்லாம் கவின் முகத்தைத் தூக்கி வைத்திருப்பதுதான்... அதற்காக வெயிலில் கிடக்கிறார்.



அப்படியே லாஸ்லியா மன்னிப்புக் கேட்டாலும் அதற்கு பதிலளித்துவிட்டு சேரன் தன் வேலையைப் பார்ப்பது நலம் பயக்கும்... மகளேன்னு கட்டிக்கிட்டா சேரன் எப்போதும் திருந்தப் போவதில்லை என்று மக்கள் மனசுக்குள் தோன்றும் என்பதே உண்மை.



நீங்க பண்றதையெல்லாம் பார்த்து மக்கள் சிரிக்கிறாங்கன்னு நினைக்காதீங்க... நீங்க சிரிச்சா இவங்க அழுவாங்க.... நீங்க அழுதா இவங்க சிரிப்பாங்கங்கிறதை மனசில் வச்சிக்கங்க என்றார் கமல். அதுதான் உண்மை.



நேற்றைய நிகழ்ச்சியில் சேரனுக்குச் சேதாரம் அதிகம்... இந்த வார நாமினேசனில் சேரனும் ஷெரினும் கூடவே கவினும் வரலாம்... சேரன் வெளியேறவே வாய்ப்பு அதிகமிருக்கும்... இத்துடன் வெளியேறுதல் அவருக்கும் நலம்... பாச, நேச உறவுகளுக்கும் நலம்.



பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (2-Sep-19, 1:08 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 265

சிறந்த கட்டுரைகள்

மேலே