காஞ்சனாவின் தவிப்பு

காஞ்சனாவின் தவிப்பு

இன்று எப்படியும் சேகரிடம் பேசி விடவேண்டும் என்றூ நினைப்பாள் காஞ்சனா. இது போல் தினமும் நினைத்து நினைத்து பாழும் வெட்கம் வந்து அவளை தடுத்து விடுகிறது. அவளும்தான் என்ன செய்வாள்? மனதில் சலனங்கள் இல்லாதவரை பெண்ணும் ஆணும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காஞ்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பது இயல்புதானே. இது பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே மாதிரிதான். அப்படி பார்க்கும்போதுதான் அவளின் மனதில் சேகர் வந்து நிற்கின்றான்.சேகர் அவளை பொருத்தவரை கம்பீரமானவன், நிதானமானவன், அவளின் மனதில் நிறைந்திருப்பவன் (நாம் அவனைப்பற்றி ஏதேனும் கருத்து சொன்னால் காஞ்சனா கோபித்து கொள்வாள்) அவள் கீழ்த்தளத்தில் உள்ள அலுவலகத்தில் பணி புரிபவள், இவன் தினந்தோறும் அவள் இருக்குமிடத்தை தாண்டி மூன்றாவது தளத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் அவன் என்ன மனதில் நினைத்துக்கொண்டுள்ளான் எஎபது இவளுக்கு புரிபடவில்லை.
காஞ்சனாவும் ஓரளவு அழகிதான், வர்ணிக்க தெரியாததால் காண்போரை வசீகரிக்கும் அழகு என்று சொல்ல்லாம். ஓரளவு வசதியான குடும்பம். அவளுக்கு ஒரு தம்பி, தங்கை உண்டு. தந்தை மத்திய அலுவலகத்தில் நல்ல உத்தியோகம், சொந்த வீடு, இத்யாதி..இத்யாதி..இனி கதைக்குள் நுழைவோம்.
சேகர் அம்மாவிடம் “அம்மா மதியானம் தினமும் தயிர் சோறு வச்சு கொல்லாதே” செல்லமாய் கோபித்துக்கொண்டான். வெயில்ல போறவனுக்கு அதுதாண்டா உடம்புக்கு நல்லது. அம்மா நான் போறது மட்டும்தான் வெயில்ல. மத்தபடி நல்லா பேன் காத்துக்கடியில்தான் உட்கார்ந்திருக்கிறேன். அப்பா இவர்கள் ஊடலை கண்டும் காணாது போல் பேப்பர் படித்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒன்பது மணிக்கு மேல் ஆபிசுக்கு கிளம்பினால் போதும், அலுவலக கார் வரும் இவனுக்கு அப்படியில்லை, சரியாக எட்டரைக்கு வண்டியை கிளப்பினால் தான் டிராபிக் சிக்கல்களிடமிருந்து தப்பி அலுவலகம் வரும்போது நேரம் சரியாக இருக்கும்.
வண்டி அலுவலகத்துக்குள் நுழையும்போதே நண்பன் செல்வம் பிடித்துக்கொண்டான்.டேய் சேகர் இன்னைக்கு ஸ்ரீதேவி தியேட்டர்ல நம்ம ஆளு படம் போட்டிருக்கான் வர்றியா? சாரி பிரதர் சாயங்காலம் வீட்டுல கொஞ்சம் வேலையிருக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூப்பிடு, எங்க வேணா வர்றேன், மத்த நாள்ல என்னை பார்க்காதே.
“குட் மார்னிங்க்”மேல்தளம் ஏறுமுன் காஞ்சனா இருக்கும் அலுவலகத்தில் பணி புரியும் அக்கவுண்டன்ட் சோமுவுக்கு ஒரு வணக்கம் சொன்னவன் படியில் காலை வைத்து மேலே ஏற முயற்சிக்கையில் சோமு “சார் உங்க கவிதை நேத்து பத்திரிக்கையில வந்திருந்தது. நல்லா இருந்துச்சு. என்றார். ரொம்ப நன்றி சார் ஏதோ நேறம் கிடைக்கும்போது எழுதறேன் என்னுடைய அதிர்ஷ்டம் பத்திரிக்கையில வருது என்னை விட திறமைச்சலிகளுடையது வெளி வர முடியாம தவிக்கிறாங்க, தன்னடக்கத்துடன் சொன்னான். இவர்களின் உரையாடலை காஞ்சனா சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்தாலும் நடப்பவைகளை பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும்தான் இருந்தாள். அவனுடன் எப்படியாவது பேச்சு கொடுக்க வேண்டும் என்று பர பரத்த மனதை அடக்க படாத பாடுபட்டாள்.
இவள் இப்படி அல்லாடிக்கொண்டிருக்கும் வேளையில் அதிர்ஷ்டம் அவளை சுமார் பத்தரை மணி அளவில் தேடி வந்த்து. அவள் டேபிளுக்கே வந்து கையில் ஒரு பேப்பருடன் ‘மேடம்’ என்று தயங்கி நின்று கொண்டிருந்தான் சேகர். ஒரு நிமிடம் அவனைப்பார்த்து மனம் பரபரப்படைந்தாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மிகவும் கஷ்டப்பட்டு எஸ்..என்ன வேணும்? உங்களுக்கு குரலை கூடுமானவரையில் மென்மையாக வைத்துக்கொண்டாள். இந்த அக்ரிமெண்ட்ஸ்ல உங்க எம்.டி.கையெழுத்து விட்டு போச்சு. அதை தயவு செய்து இன்னைக்குள்ள வாங்கி கொடுத்திட்டீங்கன்னா நான் சாயங்காலம் கூரியர்ல அனுப்பறதுக்கு செளகர்யமா இருக்கும். தாராளமா வாங்கி உங்க ஆபிசுக்கே அனுப்பறேன், கவலைப்படாதீங்க, என்றவள் மெதுவாக நேத்து உங்க கவிதைய பத்திரிக்கையில படிச்சேன், நல்லா இருந்துச்சு. சேகர் முகம் பிரகாசமானது, ரொம்ப தாங்க்ஸ் மேடம், உங்களுக்கு கவிதைகள்னா ரொம்ப பிடிக்குமா? எனக்கு கவிதைகளை விட கதைகள்தான் அதிகமா பிடிக்கும். இருந்தாலும் கவிதைகளையும் இரசிப்பேன். “வெரி குட்” அப்படீன்னா நாம் ஒரு பட்டிமன்றமே நட்த்தலாம், கவிதையா? கதையா? இல்லையா மேடம்.
ப்ளீஸ் என்னை மேடம் மேடம் அப்படீன்னு கூப்பிட்டு மரியாதை கொடுக்காதீங்க. என் பெயர் காஞ்சனா, பேர் சொல்லியே கூப்பிடுங்க. ஓகே என் பெயே சேகர், மறு படி உங்களை சந்திக்கிறேன். இந்த அக்ரிமெண்டை மறக்காம சீக்க்கிரம் கையெழுத்து வாங்கி அனுப்பிச்சுடுங்க, நினைவு படுத்தி விட்டு விடை பெற்றான். காஞ்சனா தன் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டாள். தான்தானா? அவனுடன் பேசிவிட்டோமா/ அன்று வீடு செல்லும் வரை அவள் மனதில் அந்த நினைவுதான் ஆக்ரமித்திருந்தது.
காஞ்சனாவின் வீட்டில் அதே பத்தரை மணி அளவில் காஞ்சானாவின் அம்மாவுக்கு அவர்களின் சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து போன் வந்தது. பேசியது அவளது ஒன்று விட்ட நாத்தனார். நம்ம கமலாவுக்கு ஒரு ஜாதகம் வந்தது. அது சரியா பொருந்தலை. அப்புறம் காஞ்சனா ஜாதகத்தை வச்சு பார்த்த்துல நல்லா பொருந்திருக்கு. அவங்களும் சென்னையிலே மயிலாப்பூரிலதான் இருக்காங்கலாம். ரொம்ப நல்ல மாதிரியாம். என்னோட ஓர்ப்படிதான் சொன்னாள். நான் அந்த ஜாதகத்தை என் பையனை வச்சு இப்ப மெயில்ல அனுப்பி வைக்கிரேன். அங்க உங்க வீட்டுக்காரர்கிட்டே சொல்லி மெயில்ல இருந்து பிரிண்ட் எடுத்துக்கச்சொல். சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டு தன் கணவனை போனில் கூப்பிட்டு மெயிலில் வரும் ஜாதகத்தை பிரிண்ட் எடுத்து வரும் போதே ஜோசியக்காரரிடம் பொருத்தம் பார்த்து வரச்சொன்னாள்.
மாலை காஞ்சனா வீட்டிற்குள் நுழைந்து அவள் அப்பா வரும்வரை அவள் மனது சேகருடன் பேசியதையே நினைத்துக்கொண்டிருந்தது. இரவு எட்டு மணிக்கு அவள் அப்பா வந்தவுடன் அம்மாவிடம் சென்று ஏதோ பேசுவதையும் அம்மாவின் முகம் மகிழ்ச்சியடைவதையும் பார்த்தாள். என்ன விஷயம் என்று அவளுக்குள் ஒரு வினா எழுப்பியது ! அதற்குள் அம்மா போன் அருகில் சென்று காலையில் பேசிய இவள் ஒன்று விட்ட நாத்தனாருக்கு போன் செய்து ஜாதகம் பார்த்துட்டோம், ஒன்பது பொருத்தம் இருக்கு, அவங்க கிட்டே சொல்லிடு.. பெண்ணை எப்ப பார்க்க வருவாங்க அப்படீன்னு.. ஆனா ‘வீட்டுல’ வேண்டாம், ஏதாவது கோயில்ல வச்சு பார்த்துக்கலாம், நாளைக்கு பேசிட்டு சொல்லச்சொல்லு, போனை வைத்தாள்.
கேட்டுக்கொண்டிருந்த காஞ்சனாவின் மனதில் பெரிய வெப்ப பரவலே ஏற்பட்டது. சேகர் தன் மனதில் உள்ளே இருக்கும் போது இப்படி ஒரு இடியா? கடவுளே அப்பாவிடமும், அம்மாவிடமும் எப்படி இதை சொல்வது? இரவு முழுவதும் அவள் தூக்கம் காணாமல் போயிற்று. காலையில் எப்படி எழுந்து தயாராகி வேலைக்கு வந்தாள் என்றே அவளுக்கு தெரியவில்லை. இந்த துக்கமான நேரத்தில் சேகர் என்றுமில்லாமல் அவள் அருகில் வந்து “குமார்னிங்க்” சொல்லிவிட்டு சென்றான்.
ஒரு வாரம் ஓடி விட்டது. வீட்டில் இவள் விசயமாக எந்த பேச்சும் எழவில்லை. காஞ்சனாவிற்கு நிம்மதியாக இருந்தது. ஒரு நாள் அம்மா கிளம்பும்போது மதியத்துக்கு மேல லீவு போட்டுட்டு வந்துடு, சாயங்காலம் எல்லாரும் ‘கபாலீசுவர்ர் கோயிலுக்கு போகணும்’, ஏம்மா திடீருன்னு கபாலீசுவரர் கோயிலுக்கு போகணும்ங்கறே? பக்கத்துல உள்ள கோயிலுக்கு போனா பத்தாதா/ நான் வேண்டிகிட்டு இருக்கேன், குடும்பத்தோட வர்ரோமுன்னு, அதனால வாய் பேசாம லீவு போட்டுட்டு வந்து சேரு. அம்மா அவள் வாயை அடக்கினாள். இவளுக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. என்ன ஒரு வாழ்க்கை, அம்மா சொன்னால் கேட்கணுமா? முணுமுணுத்துக்கொண்டே வேலைக்கு வந்தாள்.
அவள் சேகரை எதிர்பார்த்தாள். இப்பொழுதெல்லாம் அவன் காஞ்சனாவிடம் வந்து ஓரிரண்டு வார்த்தைகள் பேசாமல் போவதில்லை. ஆனால் அன்று அவன் வரவேயில்லை. அவளுக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அதன் பின் ஒரு வாரம் ஓடி விட்டது. ஆனால் ஒரு வாரமாக சேகர் அவளை பாக்காமலே மேலே போக ஆரம்பித்தான். அவளுக்கு மனது சோகமாயிற்று. அவனை பார்க்க முடியாமல் தவித்தாள். வீட்டிலும் அவளைத்தவிர்த்து எல்லோரும் சந்தோசமாக இருப்பதாக பட்டது.
இவள் வேலைக்கு கிளம்பும்போது அம்மா “காஞ்சனா நாளைக்கு ஒரு நாள் லீவு போட்டுடு” மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கை நனைக்க வராங்க. இதைக்கேட்டவளுக்கு தலை சுற்றியது. மாப்பிள்லையா? என்னம்ம சொல்றே? மாப்பிள்ளைக்கு உன்னை பிடிச்சுப்போச்சாம். மேற்கொண்டு எல்லாம் பேசி முடிச்சுட்டோம். நாளைக்கு எல்லோரும் வராங்க, நீயும் கண்டிப்பா இருக்க. என்ன நான் சொல்றது புரியுதா? யாரைக்கேட்டு முடிவு பண்ணுனே? நான்தான் கல்யாணம் பண்ண போறவ? என் கிட்டே ஒரு வார்த்தை கேட்டியா? முதல்ல மாப்பிள்ளையாவது கண்ணுல காண்பிச்சியா? அவள் கோபத்தை அம்மா சட்டை பண்ணவேயில்லை. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், இப்ப நீ கிளம்பு, நாளைக்கு மறக்காம லீவு போட்டுட்டு வா. அவள் மனது ஏதேதோ நினைத்தது. ஆனால் பயம் ஒன்றே அவள் மனதில் நிறைந்திருந்தது. கடவுளே என் மன நிலை யாருக்கும் புரியவில்லை, புரிய வேண்டியவனுக்கே புரியமாட்டேனெங்கிறது. மற்றவர்களை எப்படி குறை சொல்வது, மனதுக்குள் புலம்பினாள்.
மறு நாள் சொந்தங்கள் சூழ வீட்டுக்குள் கலகலப்பாயிருக்க இவள் மட்டும் வெளியே வராமல் உள்ளேயே இருந்தாள். எல்லோரும் அவளை வெளியே வரச்சொல்ல அவள் கோபத்துடன் மறுத்துவிட்டாள்.
எல்லோரும் சாப்பிட உட்காரும் போது மாப்பிள்ளை அவளை அழைப்பதாக அழைத்தபோது அப்பாவும், அம்மாவும் அவளை கையைப்பிடித்து வெளியே அழைத்து வந்தனர். வந்தவள் ஒரு வித வெறுப்புடன் எதிரில் நிற்கும் மாப்பிள்ளைக்கு வணக்கம் சொல்ல தலையை தூக்கியவள் அதிர்ச்சியில் திகைத்துப்போய் நின்றுவிட்டாள். எதிரே நின்றவன் சேகர்.
காஞ்சனா விழுந்து விழுந்து உபசரிப்பதை கண்டு அவள் வீட்டார் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஏன் என்ற உண்மை தெரிந்தவர்கள் வாசகர்கள்தானே !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Sep-19, 10:52 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 164

மேலே