செவப்பி - அத்தியாயம் 1

"வாங்க.. வாங்க.. வணக்கம்..."

"உங்க முகத்துல சில்லுனு காத்து படுதா.. அப்படியே ஒரு பச்ச மண்ணு வாசம் உங்க மூக்கு தொலைக்குதா.. அப்ப நீங்க பொய்கை ஆற்றங்கரையோரம் நிக்கறீங்கன்னு அர்த்தம்.."

"சுத்திமுத்தியும் பாருங்க.."

"எவ்வளவு மரம்...! எவ்வளவு வனம்...! எவ்வளவு பறவைங்க...! எப்படி சிரிச்சுகிட்டு கெடக்கு பாருங்க இந்த பூமி..!"

"அட.. அந்த வானத்தைப் பாருங்க.. எவ்வளவு பொலிவா இருக்குனு"

"அடடே! என்ன இது சத்தம்? கொய்யா முய்யா கொய்யா முய்யானு.."

"ஓ அப்படியே சேதி கேட்டுட்டே... பத்மாவதியம்மா வீட்டுக்கு வந்துட்டோமா..!"

"வாங்க.. உள்ளே ஏதோ சிரிப்பு சத்தம் கேக்குது.. என்னனு பாப்போம்

"ஹேப்பி பர்த்டே டூ யூ.."
"ஹேப்பி பர்த்டே டூ யூ.."
"ஹேப்பி பர்த்டே டூ தர்ஷி குட்டி.."
"ஹேப்பி பர்த்டே டூ யூ.."

கேக்க வெட்டி முதல்ல பாட்டிக்கு ஊட்டிவிட்டா நாலு வயசு வாலு தர்ஷனி...

பாட்டி மேல அவ்வளவு உசுரு

அப்புறமாத்தான் அப்பா அம்மா பக்கமாவே வந்தா..

"தர்ஷு"

"இங்க பாரு இப்படி சிரி", என்று மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள் அவளது சித்தி ரூபா..

அம்மா ஷோபாவும், அப்பா முகேஷும் இந்த சந்தோஷ நிகழ்ச்சியினை ரசித்துக் கொண்டிருந்தனர்.

கேக்கின் முன்னாடி அக்கம் பக்கத்து வீட்டின் நாலைந்து வாண்டுகள் நாக்கில் எச்சில் ஊற இடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

சில பல சொந்தங்களால் வீடு நிறைந்து கிடந்தது. கிருஷ்ணய்யாவின் மறைவுக்குப் பின் பத்மாவதியம்மா தான் வீட்டை தாங்கு தாங்கென தாங்குகிறாள்.

ரெண்டு பொண்ணு ஒரு பையன்..

பெரிய பொண்ணு ஷோபா கல்யாணம் ஆயிடுச்சு.. சின்னப்பொண்ணு ரூபா காலேஜ் தேர்டு இயர்..

நடுவுல பையன் ரகு... சென்னையில வேலைக்கு போயிட்டு இருக்கான்.. இப்ப பர்த்டேக்காக ஊருக்கு வந்திருக்கான்.. ஆனா இப்ப வீட்ல இல்ல...

எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தாலும், பத்மாவதியம்மா சிரித்தபடி இருந்தாலும், அவர் மனதிற்குள் ஒரு மெல்லிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

'ரகுபதி எங்க போனான்?'

பிறந்தநாள் கேக்கும் வெட்டியாச்சு.. வெயிட் பண்ணுங்க வரேன்னு சாயந்திரமா கிளம்பி போனவன் தான் இன்னும் காணோம்..

'தர்ஷினியும் எவ்வளவு நேரம்தான் மாமவுக்காக வெயிட் பண்ணுவா?'

ரகு காலேஜ் முடிச்சிட்டு சென்னையில ஒரு நல்ல கம்பெனியில வேல பார்க்கறான். நாலு நாள் லீவுல ஊருக்கு வந்திருக்கான்..ரகுபதி ஷோபாவுக்கு தம்பி.. ரூபாவுக்கு அண்ணன்.. ஊரிலேயே நல்ல பேரு. இப்ப எங்க போயிட்டான்?

வேகமாக ஓடிவந்த தர்ஷினி பத்மாவதியம்மா முகத்துல கிரீம அப்பவும்தான் நினைவை விட்டு நிகழ்காலத்துக்கு வந்தாள்.

"யே தர்ஷூ!என்ன இது?" எனச் செல்லமாக கோவிக்க

"என்ன பாட்டி கிரீம் தானே!", என்று சொன்ன தர்ஷினி அவங்க முகத்தில இருந்த க்ரீமை தன் நாக்காலேயே எடுக்க குடும்பமே இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

இப்போது பொடிசுகள் கேக் முடித்துவிட்டு அடுத்த ரவுண்ட் என்ன கிடைக்கும் என்று காத்திருந்தார்கள்.

அப்படியே வீட்டை விட்டு மெதுவாக வெளியே வந்தாள் பத்மாவதியம்மா..

கண்கள் ரகுபதியை வெகுதூரம் வரை பார்த்து தேடின.. கண்ணில் தட்டுப்படவில்லை..

அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த லட்சுமியை லேசாக தடவிக் கொடுத்தாள்.. அந்த பசுவும் இவருக்கு முதுகு கொடுத்தபடி அவரது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தது.

பொடிசுகள் அடுத்த ரவுண்ட் தின்பண்டங்களை முடித்துவிட்டு டாட்டா சொன்னபடி கிளம்பிய வேளை, தூரத்தில் ஒரு உருவம் வருவது பத்மாவதியம்மாவின் கண்ணில் பட்டது.

'ம் அவன் தானு நினைக்கிறேன்' என யோசித்தபடி உற்றுப்பார்க்க, ரகுபதி தான் வருகிறான் என்பது உறுதியானது. ஆனால் ஒரு துள்ளலுடன் உற்சாகத்துடனும் எப்போதும் காணப்படும் நடையாக அது படவில்லை. துவண்டு போய்.. வருந்தி.. கஷ்டப்பட்டு நடந்து வருவதைப் போல இருந்தது.

அருகில் வந்ததும் அவனது கண்ணில் துளிர்த்திருந்த கண்ணீர் துளிதான் பத்மாவதியம்மாவுக்கு கண்ணில் பட்டது

"டேய் ரகு.. எங்கடா போன இவ்வளவு நேரம்? இது என்ன கண்ணுல தண்ணி... ஏதாவது தூசி கீசி விழுந்துடுச்சா?"

"ம் ஒன்னுமில்லமா", எனச் சொன்னவறே ரகுபதி வீட்டில் நுழைய, வீடு இவனது நிலை கண்டு அவனைச் சூழ்ந்து கொண்டது.

ரகு.. அவமானப்பட்டவனாய் கூனிக்குறுகி காணப்பட்டான். யாரோ அடித்திருந்தது போலவும் இருந்தது.

ஷோபாவும் ரூபாவும் சேர்ந்தே கேட்டனர்...

"என்ன ரகு.. என்னாச்சு? யாராவது அடிச்சிட்டாங்களா?"

"மச்சான் என்னாச்சு? அவர்களுடன் சேர்ந்து கொண்டான் ஷோபாவின் கணவன் முகேஷ்...

அவன் யாருக்குமே பதில் சொல்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"மாமா.. மாமா..", என்று ஓடிவந்து தர்ஷினி கொடுத்த கேக்கை வாங்கி கொஞ்சமாய் வாயில் வைத்து கொண்டவன், அதற்கு மேல் எதுவும் சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்ததை கவனித்த பத்மாவதியம்மா அருகில் வர, அவன் எழுந்து அவனது ரூமுக்குச் சென்றான்.

ரகுபதியின் வருகைக்குப்பின் வீடானது கொண்டாட்ட களை இழந்து வேறு களைக்கு மாறி விட்டதாய் தோன்றியது.

பின்னாடியே சென்ற பத்மாவதியம்மா அவன் தோளில் கையை வைத்தாள்.

"டேய் யாருடா உன் மேல கைய வச்சா? எவ்வளவு தைரியமானவன் நீ.. எவனுக்குடா இவ்வளவு தைரியம் இந்த ஊர்ல?

"விடுமா.. நான் எதுவும் சொல்ல விரும்பல.."

"டேய் உனக்கே இது நியாயமா படுதா... யாரு அடிச்சானு மட்டும் சொல்லு.. நாங்க யாரும் போயி, என்ன ஏதுனு விசாரிக்க மாட்டோம்"

"இல்லமா.. நான் சொன்னாலும் நீ என்னனு கேட்கப் போக மாட்ட"

"என்னடா பெரிய பீடிகையா போடற..?"

"விடுமா... நான் சொல்லாம இருந்தா தான் நல்லது.. சொன்னேனா ரொம்ப உடஞ்சு போயிடுவ"

"ம்கூம்.. அப்படியெல்லாம் விட முடியாது. எந்த தப்பு தண்டாவுக்கும் போகாத ஆளு நீ.. உன் மேல கை வைக்க எவனுக்கு மனசு வந்துச்சு.. எறும்புக்கு அடிபட்டுடக் கூடாதுன்னு நடக்கும் போது கூட கீழே பார்த்து பார்த்து எட்டு வைப்ப.. உன்னப் போய் எதுக்கு அடிச்சானுக.. புத்தி கித்தி மழுங்கிடுச்சா?"

"அம்மா.. எங்கிட்ட இப்படியே பேசிப் பேசி, கேட்டு கேட்டு பேரச் சொல்ல வச்சிடாத.. வேணாம்... என்னக் கொஞ்சம் தனியா விட முடியுமா ஒரு பத்து நிமிஷம். கொஞ்சம் தெளிவாயிட்டு முகம் கழுவிட்டு நானே ஹாலுக்கு வரேன் ப்ளீஸ்.."

"போடா.. நீ பேரை சொன்னாத்தான் நான் இந்த இடத்தை விட்டே கிளம்புவேன்"

"அப்ப நான் பேரை சொல்லித்தான் ஆகணும்"

"ஆமா.."

"அம்மா வேணாம்"

"டே சொல்லுடா.. யாருன்னு சொல்லுடா"

"அப்ப சொல்லணும்"

"ஆமா.."

"சரி சொல்றேன்"

"சொல்லு"

"செவப்பி"

பேரைக் கேட்டதும் மயங்கி விழுந்தாள் பத்மாவதியம்மா..

(தொடரும்)
===============================================================

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (11-Sep-19, 9:45 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 192

மேலே