கூட்டல் குறி சிலுவையானது எய்ட்ஸ் தினக் கவிதை
குறியீடு, படிமங்கள் நிறைந்த கவிதை)
கூட்டல் குறியே!
நீ பெருக்கல் குறி யாகத்தான்
இருந்தாய்!
நாங்கள் தப்பின் குறியாக
ஆக்கினோம்!
கூட்டல் குறி
சிலுவையானது!
*****
தேவதூதர்களை
அறைவதற்கல்ல!
உடற்பசிதீர
யாசிக்கும் யாசகர்களை
விருந்து(வி)பச்சாரம்
செய்யும் வேஷர்களை
தாசிகளை
அறையச் சிலுவையாகிறது!
உண்மையில் நீதான்
பரத்தை மகன்(ள்)!
காமம் உன் விளம்பரம்!
விபச்சாரம் உன் வியாபாரம்!
சிவப்பு விளக்கு உன் தீபம்!
உடலுறவு உனை தரிசிக்க
நடத்தும் தொழுகை!
ரத்தம் உன் போர்த் தளவாடம்!
நரம்புகள் நீ பதுங்கும்
பாதாளம்!
வெள்ளை அணுக்கள்
உனக்குத் தாய்ப்பால்!
நீ நோயல்ல;
நோய் யானைகளின்
மணியோசை!
போதை உன் புறவழிப் பாதை!
அந்த இரண்டும் பிறப்பின்
வாய்கள் எமக்கு!
ஜடதேசத்தில் ஊடுருவும்
கணவாய்கள் உனக்கு!
'கலவி' அது தாய்மைக்கான
பழைய ஏற்பாடு என்றிருந்தது.
தூய்மை கெட்ட மாந்தரால்
நோய்மை யம் கொள்ள
வகுத்த புதிய ஏற்பாடு ஆனது!
படுக்கை உன்னால்
பாதிப் படையானது!
கட்டிலைத் தொடர்ந்த
தொட்டில் கல்லறை ஆனது!
நோய் வந்தால் படுக்கையில்
வீழ்வதுண்டு!
படுக்கையில் புரண்டதால்
நோயில் வீழ்வது உன்னால் தான்!
நீ காமுகர்களின் மோக விடுதூது!
லிங்க நாவுகளும் பிண்டச் செவிகளும்
பரிமாறிக் கொள்ளும் மரணச்செய்தி!
செவி வழிச்செய்தி அல்ல!
குறிவழிச்செய்தி!
நோய்களின் புறப்பாடிற்கான
தந்திக் குறியீடு!
மோகக் கலை கண்ட
கோவலர்களையும்
மாதவிகளையும்
எரிக்கும் மேகலைத்தீ!
அயல் மகரந்தச் சேர்க்கையின்
மயான அறைகூவல்!
காமத்துப் பாலில் கலந்த் விஷம்!
மன்மதன் உன் கட்சித் தலைவன்!
பிரம்மனுடன் தான் கூட்டணி எப்போதும்!
உன்னால் இப்போது எம
தர்மனுடன் கூட்டணி!
HIVயே பச்சை இலையில்
இச்சை விருந்துண்டோரே
எச்சில் இலையாவது
உன்னால் தான்!
*****
கூட்டல் குறியே!
நீ பெருக்கல் குறியாகத்தான்
இருந்தாய்!
நாங்கள் தப்பின் குறியாக்கினோம்!
கூட்டல் குறி சிலுவையானது!