பிறந்து பெறுவது பேணார் கடுங்காலன் பின்னே ஒளித்தழல் கின்றான் - மறதி, தருமதீபிகை 488

நேரிசை வெண்பா

இறந்து படுவமென எண்ணி விரைந்து
பிறந்து பெறுவது பேணார் - மறந்து
களித்துழல் கின்றார் கடுங்காலன் பின்னே
ஒளித்தழல் கின்றான் உருத்து. 488

- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இறந்து போவோம் என்பதை எதிரறிந்து பிறந்த பயனை விரைந்து பெறாமல் மாந்தர் மறந்து களிக்கின்றார், எமனோ அவர் உயிரை வாங்க ஒளிந்து நிற்கின்றான்; அந்தோ! அந்நிலையை உணரவில்லையே என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பின்னே நேர உள்ளதை முன்னே எதிரறிந்து வாழ்வது அரிய சதுரப்பாடாய்ப் பெருமை பெறுகின்றது. கருதியுணராதது மிருக வாழ்வாய் இழிவுறுகின்றது.

ஆழ்ந்த கருத்தும், அமைதியான கவனமும் எவ்வழியும் திருத்தமாக வாழ்வினை விருத்தி செய்து வருதலால் அவை திருந்திய பண்பாடுகளாய் இன்பம் செய்து வருகின்றன.

பிறந்தன யாவும் இறந்து படுகின்றன. அந்த இறப்பு இன்ன பொழுது நேரும் என்று யாரும் முன்னதாக எண்ணியறிய முடியாது. முடிந்து போவோம் என்பதை மட்டும் யாவரும் முடிந்த முடிபாய் உணர்ந்திருக்கின்றனர். உணர்ந்தும் உறுதி நலனை விரைந்து நாடாமல் மறந்து திரிகின்றனர்.

அரிய மனிதப் பிறவியால் அடையவுரிய உறுதி நிலையை ’பிறந்து பெறுவது’ என்றது. எதைப் பெற்றால் என்றும் துன்பமற்ற இன்ப நிலையை ஒருவன் பெற முடியுமோ அந்த முத்தித் திருவைப் பெறுவதே பிறவிப் பேறாம். அல்லாதன எல்லாம் அவலமாய்ப் பெருகிக் கவலைக்கே இடமாம்.

நேரிசை வெண்பா

உற்ற பிறப்பால் ஒருபிறப்பும் ஒட்டாமல்
பெற்ற பிறப்பே பெரும்பிறப்பாம் - மற்றப்
பிறப்பெல்லாம் செத்த பிறப்பாய்ப் பெருகி
இறப்படைய வுற்ற இழிந்து.

சிறந்த பிறவிக்கும், உயர்ந்த அறிவுக்கும் உரிய பயன் மறுபடியும் ஒரு பிறவி நேராமல் அரண் செய்து கொள்வதேயாம்: அங்ஙனம் கொள்ளவில்லையானால் இரண்டும் அல்லலுடையனவாய் எள்ளலடைகின்றன.

பிறவி துன்பம்; பிறவாமை இன்பம்; என எவ்வழியும் முடிவாகியிருத்தலால் பிறவி நீக்கமே திவ்விய அறிவின் செவ்விய நோக்கமாய்ச் செறிந்துள்ளது.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப(து) அறிவு. 358 மெய்யுணர்தல்

மனிதனுடைய புனித அறிவுக்கு இனிய பயனை இது உணர்த்தியுள்ளது. ’பிறவி நீங்கக் காண்பதே அறிவு’ என்றதனால் அங்ஙனம் காணாதது வீணாம் என்பது பெறப்பட்டது.

இழந்து போன பழந் தனத்தை எய்தி மகிழ்வது போல் மறந்து விட்ட ஆன்ம வுரிமையை நினைந்து அடைந்து கொள்வதே சிறந்த பிறவிப் பேறாம். அந்தத் திவ்விய நிலையைப் பெறாமல் வேறு எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும் அவை உண்மையான உறுதி நலங்களாகாது.

இந்திர பதவி முதலிய அந்தர போகங்கள் யாவும் நிலையில்லாதனவாதலால் நிலையான நித்திய முத்தியைப் பெறுவதே உத்தமப் பிறவியின் முடிந்த பேறாய் முடிவாகியுள்ளது.

பிறந்து வந்துள்ள எவரும் இறந்து படும் இயல்பினர்; அந்த இறப்பு நேருமுன் பிறப்பின் பயனை ஏதாவது ஓரளவில் பெற்றுக் கொள்பவர் சிறந்த பாக்கியசாலிகளாய் உயர்ந்து போகின்றனர்.

உரிய பயனையடையாமல் ஊனமாய் இழிந்து போவது பெரிய மதிகேடாய்ப் பிழை மிகப் படுகின்றது. ஆவதை அறியாமல் அவமே அவாவிச் சாவதே கண்டு தவித்து அழிகின்றார்.

களித்து உழல்கின்றார்; கடுங்காலன் பின்னே
ஒளித்து அழல்கின்றான் உருத்து.

என்றது உலக மக்களின் நிலையை உய்த்துணர வந்தது.

பொறி வெறிகளில் பொங்கிக் கண்ட போகங்களை எல்லாம் உண்டு செழித்து மனிதர் களித்துத் திரிகின்றார்; அவரை உண்டு கொள்ள அயலே கண்டு கொண்டு எமன் உருத்து நிற்கின்றான்.

பின்னே நிகழ்வதை எண்ணி அறியாமல் பிழை மலிந்து திரிவது பேதைமை ஆகின்றது. எப்படியும் இறந்து போய் விடுவோம்; அதற்குள் உயிர்க்குறுதியை நாடிக் கொள்ள வேண்டும் என்று உள்ளி ஒழுகுபவர் நல்ல தருமசீலராய் வருகின்றனர்.

இறப்பின் நினைவு அரிய பல நன்மைகளை அருளி வருதலால் அதனை யாண்டும் மேலோர் எடுத்துக் காட்டி இடித்து அறிவுறுத்தியுள்ளார். அழிவு நிலையை அறிவது அழியாத பேரின்ப நிலைக்கு வழி தெரிவதாம். உண்மையுணர்வு உய்தியில் ஊக்குகின்றது.

‘இறந்து போவோம்’ என்பதை மறந்திருப்பதினும் கொடிய கேடு வேறு யாதும் இல்லை என்று தசரதர் தமது இராச சபையில் ஒருமுறை பேசியிருக்கிறார். மன்னன் உரை மதி நலமானது.

ஞாயிறு, திங்கள், செல்வாய், புதன் என இவ்வாறு இனமாய்ச் சுற்றி வருவதை நாள் என்று நினையாதே; அது உன் உயிரை ஈரும் வாள் என வள்ளுவர் இங்ஙனம் உண்மையை உரிமையாய் உணர்த்தியிருக்கிறார், நிலையான பயனை விரைந்து பெறுக என்பதால் தினம் கழிவதை உயிர் கழிவதாக நினைக என்றது.

நேரிசை வெண்பா

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும். 28 யாக்கை நிலையாமை, நாலடியார்

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

2620 உடற்றும் பிணித்தீ உடம்பினுயிர் பெய்திட்(டு)
அடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக்
குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே
கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர். 22 விசயமா தேவியார் துறவு, முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. 1 - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை, பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அரவினம் அரக்கர் ஆளி
..அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா
..வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல்
..பேணியே ஒழுகும் நங்கட்(கு)
ஒருபொழு(து) இரங்க மாட்டாக்
..கூற்றின்யார் உய்தும் என்பார். 8 குண்டலகேசி

நேரிசை வெண்பா

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான். 17 பொது, பட்டினத்தார்

இறப்பு நிலையை எண்ணி யாண்டும் புண்ணிய நீரராய் யாவரும் ஒழுகிவர வேண்டும் என மேலோர் இவ்வண்ணம் கூறியுள்ளனர். நித்திய அநித்திய நிலைகளை நெடிது நோக்கி உத்தம நெறிகளில் ஒழுகியுள்ள தீர்க்கதரிசிகளுடைய வாக்குகள் அவர்களுடைய வாழ்க்கை வகைகளை விளக்கி மனித சமுதாயத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் உதவி அறிவும் தெளிவும் அருளி வருகின்றன.

இறந்து படுவோம் என்பது எல்லாருக்கும் தெரியும்; ஆயினும் மாய மயக்கத்தால் அதனை யாவரும் மறந்து விடுகின்றனர்.

“All men think all men mortal but themselves” (Young)

’எல்லா மனிதரும் இறந்து போவர் என்று யாவரும் அறிவர்;.ஆனால் தங்களை மாத்திரம் அவ்வாறு எவரும் எண்ணுவதில்லை’ என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. சீவ சுபாவங்கள் அதிசய விசித்திரங்களாயிருக்கின்றன.

சாவுண்டு என்பதை நன்கு தெரிந்திருந்தும் அது வருமுன் உய்யும் வழியை உறுதியாய்த் தேடிக் கொள்ளாமல் வைய மையலில் மயங்கித் திரிவதே மனித இயல்பாய் மருவியுளது.

இறப்பின் இயல்பை எதிரறிவான் இங்கே
பிறப்பின் பயனைப் பெறும்.

சாவு அடையுமுன்னே ஆவதை அடைந்த கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Oct-19, 3:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே