அரிதாய மானுடம் பெற்றதால் உய்தற்குரியன செய்து கொள் - உறுதி, தருமதீபிகை 498

நேரிசை வெண்பா

எய்தற்(கு) அரிதாய இம்மா னுடம்பெற்றும்
உய்தற்(கு) உரியனசெய்(து) உய்யாமல் - வெய்தாக
வாழ்நாளை வீண்கழித்து மாறாத வன்துயருள்
வீழ்கின்றார் அந்தோ விளிந்து. 498

- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரிய மானிடப் பிறவியை அடைந்தும் உயிர்க்குறுதி கருதி உய்யாமல் வாழ்நாளை வீண் கழித்து நெடிய துயருள் கொடிதாக மனிதர் விழுந்து மடிகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் அரியது பெற்றவன் உரியது பெறுக என்கின்றது.

பிறப்பாலடைய உரிய பயனை உறுதியாக அடைந்து கொள்ள வேண்டி பிறப்பின் அருமையையும் பெருமையையும் சிறப்பாகக் குறித்தது. பெற்றுள்ள கருவியையும் .பெறத்தக்க பேற்றையும் உய்த்துணர்ந்தவர் உயர்ந்த நிலையை விரைந்து பெறுகின்றனர். உண்மையுணர்வு உரிமையை அடைகிறது.

பறவை, விலங்கு முதலிய இழிந்த பிறவிகளையெல்லாம் கடந்துயர்ந்த இந்த மனிதப் பிறவியை அடைந்திருப்பது அரிய அதிசயமான பெரிய பேறாம். மனிதருள்ளும் நல்ல உருவும், பல்வகை நலன்களும் மருவி வருவது பெரிதும் வியப்பாம். குருடு, செவிடு, முடம், மூடம் முதலிய இழிநிலைகள் பலவும் தப்பி விழுமிய நிலையில் விளங்கி மிளிர்வது எழுமையும் தொடர்ந்த புண்ணியத்தின் பயனாய் நண்ணி எழுகின்றது. அரிய பல நலன்களை அவ்வாறு மருவி நிற்பினும் அழிவுநிலை என்றும் தழுவியுள்ளது. பிறவி இங்ஙனம் எவ்வழியும் பரிபவ நிலைகளில் பெருகியிருத்தலால் அதனால் அடையவுரிய பயனை விரைவில் அடைந்து கொள்ள வேண்டும் என மேலோர் அருள் புரிந்து பொருள் தெரிந்து கொள்ளும்படி போதித்துள்ளனர்.

கலிநிலைத் துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
.
விண்டு வேய்நரல் ஊன்விளை கானவர் இடனும்
கொண்டு கூர்ம்பனி குலைத்திடும் நிலைக்களக் குறும்பும்
உண்டு நீர்என உரையினும் அரியன ஒருவி
மண்டு தீம்புனல் வளம்கெழு நா(டு)எய்தல் அரிதே. 152

வில்லின் மாக்கொன்று வெள்நிணத் தடிவிளிம்(பு) அடுத்த
பல்லி னார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே. 153 – பெறுதற்கு அருமை

இன்ன தன்மையின் அருமையின் எய்திய பொழுதே
பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி
மின்னும் மொக்குளும் எனநனி வீயினும் வீயும்
பின்னை வெண்ணெயின் திரண்டபின் பிழைக்கவும் பெறுமே. 156.

வெண்ணெய் ஆயது வீங்குபு கூன்புற யாமை
வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறுமது வழுக்கா(து)
ஒண்மை வாள்மதி உருவொடு திருஎனத் தோன்றிக்
கண்ண னார்அழக் கவிழினும் கவிழும்மற்(று) அறி,நீ. 157

அழிதல் இன்றியங்(கு) அருநிதி இரவலர்க்(கு) ஆர்த்தி
முழுதும் பேர்பெறும் எல்லையுள் முரியினும் முரியும்
வழுஇல் பொய்கையுள் மலர்என வளர்ந்துமை ஆடிக்
கெழீஇ யினாரொடும் கிளைஅழக் கெடுதலும் கெடுமே. 158.

கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குளித்துக்
காதல் மக்களைக் கண்டுவந்(து) இனிதினில் கழிப்பப்
பேது செய்பிணிப் பெரும்புலி பாய்ந்திடப் பிணம்ஆம்
ஓத மாக்கடல் உடைகலத்(து) அவர்உற்ற(து) உறவே. 161

காமம் பைப்பயக் கழியத்தம் கடைப்பிடி சுருங்கி
ஊமர் போலத்தம் உரைஅவிந்(து) உறுப்பினில் உரையாத்
தூய்மை யில்குளம் தூம்புவிட்(டு) ஆம்பொருள் உணர்த்தி
ஈமம் ஏறுதல் ஒருதலை இகல்அமர் கடந்தோய். 162 நிலையாமை, முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

மானிட வாழ்வின் நிலைமையைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கூர்ந்து சிந்திக்கத் தக்கன. மனிதப் பிறவி கிடைத்தல் அரிது; கிடைத்தாலும் நல்ல இடத்தில் நல்ல நிலையில் வாய்த்தல் அரிது; அங்ஙனம் வாய்ப்பினும் அதன் அழிவுநிலை அளவிடலரியது; வெள்ளியும் பொன்னும் போல் சுக்கிலமும் சுரோணிதமும் கலந்து கருவடைந்த பொழுதே உருவுடைந்து ஒழியினும் ஒழியும்; பிறந்தவுடன் இறந்து படினும் படும்; ஓராண்டுள் மாண்டு போயினும் போகும்; பேரிடுமுன் அழியினும் அழியும்; அங்ஙனம் அழிந்து போகாமல் பிழைத்துப் பாலன் குமரனாய் வளர்ந்து பருவம் அடைந்து மங்கையர் போகங்களை மருவி நுகர்ந்து மகிழ்ந்து வரும் பொழுது அவர் மாண்டுபடினும் படுவர்; அவ்வாறு படாது நின்றாலும் மூப்படைந்து எவ்வாறாயினும் சுடுகாடு சேர்தல் திண்ணம்; அந்தச் சாவு நேரு முன் ஆவதையுணர்ந்து ஆன்ம ஊதியத்தை ஏதாவது ஓரளவு அடைந்து கொள்ளுக என்பதை இது விழைந்து கூறியுள்ளது. மனிதனுடைய அனுபவ உண்மைகள் மொழிகளில் மிளிர்கின்றன. அறிவு விழிகளால் கருதி நோக்கி உறுதி நலங்களை உரிமையாக மருவிக் கொள்ள வேண்டும். உள் நோக்கம் உயர்வு புரிகிறது.

எவ்வழியும் உன் நிலைமையைச் செவ்வையாகச் சிந்தனை செய்துய்யும் வழியை ஓர்ந்து கொள்ளுக என்றும், எய்திய பிறவிக்கு இனிய பயனை அடைவது திவ்விய மகிமையாகிறது என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Oct-19, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே