எவர்க்கும் இனியனாய் ஓர்மனிதன் ஒன்றி ஒழுகின் உயர்பரனாம் - இதம், தருமதீபிகை 501
நேரிசை வெண்பா
என்றும் எவர்க்கும் இனியனாய் ஓர்மனிதன்
ஒன்றி ஒழுகின் உயர்பரனாம் - நன்றி
புரியும் அளவே புனிதநிலை பொங்கித்
தெரியும் வெளியே திகழ்ந்து. 501
- இதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எவ்வுயிர்க்கும் எஞ்ஞான்றும் இனியனாய் ஒரு மனிதன் இதம் புரிந்து ஒழுகிவரின் அவன் உயர்ந்த பரனாய் ஒளி மிகுந்து திகழ்வான்; நன்மை புரியும் அளவே புனிதநிலை வெளியே தெளிவாய் விளங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், மனிதனது புனித நிலையை உணர்த்துகின்றது.
உயர்ந்த இன்ப நலங்களையே மனிதன் யாண்டும் இயல்பாய் விழைந்து வருகிறான். தான் விரும்பியதை விரும்பியபடியே பெரும்பாலும் அடைந்து கொள்ள முடியாமல் அவலமடைந்து நிற்கிறான். தவறான அந்நிலைக்கு மூல காரணம் தன்னிடமே உள்ளது என்பதை அவன் உணர்ந்து கொள்வதில்லை; உண்மையை ஊன்றி உணராமையால் எல்லா வழிகளிலும் புன்மையாய் இழிந்து அலைய நேர்கின்றான்.
தனக்கு இதத்தை நாடுகின்றவன் என்றும் இதம் உடையவனாய் எவ்வழியும் நன்கு ஒழுகி வர வேண்டும். இது நித்தியமான சத்திய நியதி. உத்தம நிலைகளுக்கெல்லாம் இதம் உள் மூலமாயுள்ளது.
இதய பரிபாகமான இனிய நீர்மையே இதம் என வந்தது. இதம் - இனிமை, நன்மை. இதத்திற்கு எதிர்மொழி அகிதம் என நேர்ந்தது. அகிதம் - கொடுமை, தீமை. இதம் உயிர்களை உயர்கதியில் உய்க்கின்றது. அகிதம் அதோ கதியில் ஆழ்த்துகின்றது.
முன்னது புண்ணிய போகங்களாய்ப் பொங்கி விளைகின்றது. . பின்னது பாவத்துயர்களாய்ப் பணைத்து வருகிறது. இதம் எவ்வுயிர்க்கும் இனிமையாய் வருதலால் அதனையுடையவர் யாண்டும் தரும சீலர்களாய்த் தழைத்து வருகின்றனர்.
'இதம் எனும் பொருளலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்' இராம லட்சுமணர் இங்ஙனம் குறிக்கப் பட்டுள்ளனர்.
இதத்தைத் தவிர வேறு யாதும் அறியாதவரென அந்த அரச குமாரர்களைக் குறித்து மதிமானான அனுமான் இவ்வாறு மதித்திருக்கிறான் , எவ்வழியும் நன்மை சுரந்திருப்பதே தருமாத்துமாக்களின் தன்மை என்னும் உண்மை ஈண்டு உணர வந்தது.
தனது இயலும் செயலும் இதமாய் இனிமை கனிந்த பொழுது அந்த மனிதன் அதிசய மகிமைகளை அடைந்து எங்கும் துதி செய்யப் பெறுகிறான்.
’மனிதன் இனியனாயொழுகின் உயர்பரன் ஆம்’. நரனுக்கும், பரனுக்கும் உள்ள வேற்றுமையை இது விளக்கியுளது. கருணையும், நீதியும் கடவுளின் இயல்புகள். அந்த நீர்மைகளை மருவிய அளவு மனிதனும் தெய்வத் தேசுகளை எய்தி நிலவுகின்றான்.
எல்லார்க்கும் நல்லது செய்வதே இதமாதலால் அதனையுடையவர் புண்ணியவான்களாய்ப் பொலிந்து கண்ணியங்கள் மலிந்து எண்ணிய போகங்களையெல்லாம் எளிதே பெறுகின்றனர். இறைவனுடைய அருள்நலங்கள் அவர்க்குத் தனியுரிமைகளாய் இனிதமைகின்றன.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
இதமகி தங்கள் என்ப(து)
..இகல்மன வாக்குக் காயத்(து)
இதமுயிர்க்(கு) உறுதி செய்தல்;
..அகிதம்மற் றதுசெய் யாமை,
இதமகி தங்கள் எல்லாம்
..இறைவனே ஏற்றுக் கொண்டிங்(கு)
இதமகி தத்தால் இன்பத்
..துன்பங்கள் ஈவன் அன்றே. 1
இறைவனிங்(கு) ஏற்ப(து) என்னை
..இதமகி தங்கள் என்னின்
நிறைபரன் உயிர்க்கு வைத்த
..நேசத்தின் நிலைமை யாகும்,
அறமலி இதம்செய் வோருக்(கு)
..அனுக்கிர கத்தைச் செய்வன்.
மறமலி அகிதம் செய்யின்
..நிக்கிர கத்தை வைப்பன். 2
நிக்கிர கங்கள் தானும்
..நேசத்தால் ஈசன் செய்வ(து)
அக்கிர மத்தால் குற்றம்
..அடித்துத்தீர்த்(து) அச்சம் பண்ணி
இக்கிர மத்தி னாலே
..ஈண்டறம் இயற்றி(டு) என்பன்
எக்கிர மத்தி னாலும்
..இறைசெயல் அருளே என்றும் 3
தந்தைதாய் பெற்ற தத்தம்
..புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடின்உ றுக்கி
..வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவர் எல்லாம்
..பார்த்திடின் பரிவே ஆகும்
இந்தநீர் முறைமை யன்றோ
..ஈசனார் முனிவும் என்றும் 4 சிவஞான சித்தியார்
இந்தப் பாசுரங்கள் இங்கே ஊன்றியுணர்ந்து சிந்திக்கத்தக்கன.
‘இதம் உயிர்க்குறுதி செய்தல்’ என இதத்திற்கு இலக்கணமும், பொருளும் இங்ஙனம் விளக்கியிருக்கிறது.
இதம் புரிபவர்க்கு இறைவன் இனியனாய் இன்பத்தை அருளுகிறான்; அஃது இல்லாதவர்க்குப் பொல்லாதவனாய் நின்று துன்பத்தைத் தருகிறான். எல்லாரும் நல்லவராய்த் திருந்தி வரவேண்டும் என்றே பரம்பொருள் விரும்பியுள்ளமையால் அல்வழியில் செல்பவரை அல்லலுறுத்தித் திருத்தியருளுகின்றான்.
தந்தை பிள்ளையை அடித்து அவனைத் தன் சொல்வழியே நல்வழிப்படுத்துதல் போல் இதத்தை மறந்த சீவர்களுக்கு அகிதத்தை அனுபவத்தில் காட்டி அச்சுறுத்தி இறைவன் அவரை இதமுடையவனாக்கி இன்பநிலையில் உய்க்கிறான் என்றமையால் இதத்திற்கும் பரத்திற்கும் உள்ள உறவுரிமையை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.
’நன்றி புரியும் அளவே புனித நிலை’ மனிதன் உன்னத நிலையை அடைவது இன்ன வகையால் அமையும் என்பதை இதனால் உணர்ந்து கொள்கிறோம். பிறர்க்கு உபகாரமான நல்ல செயல்களைச் செய்பவன் எல்லா வகையிலும் உயர்ந்து எவரும் போற்ற விளங்குகிறான்.
இனிய விதைகளை விதைத்தவன் இன்ப விளைவுகளை ஏராளமாக எய்துகின்றான். வித்தியதை விட விளைவு பல மடங்கு அதிகமாய் வருவது ஈண்டு உய்த்துணரவுரியது.
பிறர்க்குச் சிறிது உதவி செய்பவன் தனக்கே பெரிய நன்மையைச் செய்தவனாகின்றான். ’செய்தார்க்குச் செய்த பலன்’ என்பது பழமொழி. எதைச் செய்தாலும் அதன் பலனையவன் அனுபவிப்பானாதலால் இன்பம் வேண்டுபவன் யாண்டும் நன்றே செய்ய வேண்டும். நன்று செய்தவனுக்கு ஒன்று நூறாய் என்றும் இன்ப நலங்கள் பொங்கி வருகின்றன.
நேரிசை வெண்பா
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1 – மூதுரை
செய்த உதவி திரும்பிப் பலனாய் வரும் வகையை ஒளவையார் இவ்வாறு செவ்வையாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.
நவையான இழிநீரைத் தனது அடியில் வார்த்தவர்க்குச் சுவையான இளநீரைத் தன் தலையில் தாங்கித் தென்னை தந்து வருதலை அனுபவத்தில் கண்டு வருகிறோம். ஓரறிவுடைய மரத்திற்குச் செய்த உதவியும் இவ்வாறு மகிமையாய் வருதலால் ஆறறிவுடைய மனிதர்க்குச் செய்வது எவ்வாறு வரும் என்பதை எதிர் அறிந்து கொள்ளலாம்.
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
பருவம் நோக்கிவான் மழைபொழிந் திடுவதும், பகலோன்
இருள்து ரப்பதும், தண்புனல் நதிகள்மற்(று) எவையும்
பெருகு கிற்பதும் ஒப்பிலா நற்குணப் பெரியோர்
அருள்சு ரப்பதும் தமக்கொரு பொருள்குறித் தன்றே. - பிரபோத சந்திரோதயம்
பலனை எதிர்பாராமல் பிறர்க்கு இதம் செய்; அந்த இனிய செயல் அரிய பல மகிமைகனை உளவாக்கிப் பெரிய இன்ப நலங்களை விளைத்து யாண்டும் இனிமைகள் சுரந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். .