சுர்ஜித்

ஆழ்துளை கிணறா...? ஆள்கொலை கிணறா...?

ஊரே உனக்காக காத்திருந்தது...

பாரே உன் வருகைக்காக விழித்திருந்தது....

கள்ளம் அறியா உள்ளம் கொண்ட சிறுபிள்ளையே...

பள்ளம் தெரியாது விழுந்தாயா..?

தடுக்கி விழுந்தாலே தாவிப் பிடித்து காத்திடும் உன் அன்னை...
தூக்கி விடுவாள் எப்படியும் கரம் பிடித்து என்னை...
எனக் காத்திருந்தாயா ..?

சிட்டெறும்பு கடித்தாலே துடித்து உன் தாய் பதறுவாளே...

பட்டரும்பே உள்ளே எதெல்லாம் உன்னை கடித்து ருசிபார்த்ததோ அதை அறிந்தால் கதறுவாளே...

கண்ணில் மண் விழுந்தாலே தாங்காது அவள் மனம்...

கண்ணே முழுவதுமாய் மண்ணுக்குள் வீழ்ந்தாயே இனி நாளும் ரணம்...

பால்மனம் மாறா பச்சிளமே...

பாலின்றி நீரின்றி உணவின்றி எப்படி தவித்தாயோ...

அடிக்கு அடி முன்னேற்றம்..
பூமித்தாய் உன்னை இழுக்க ...

நொடிக்கு நொடி ஏமாற்றம் ...
உந்தன் தாய்மனம் வலுவிழக்க...

நசுங்கிய உன் உடல்...
மடங்கிய பிஞ்சு விரல்...
அழுதே அடங்கிய குரல்...
மலடியின் நெஞ்சிலும் பால் சுரக்க வைத்தது இரத்தமாக...

நித்தமும் முத்தமாய் கொடுத்து வளர்த்த உன் அன்னைக்கு...
உன் உடலைக் கூட மொத்தமாய் கொடுக்கத் தவறிய இந்த தொழில்நுட்பம்...

நினைக்க.. நினைக்க.. அணைக்க முடியாத ஆழ்மனதின் அனல் வெப்பம் ....

இருள் விடிவதற்குள் என்று ஒருநாள் ...

பகல் முடிவதற்குள் என்று மறுநாள் ....

கடைசியில் உயிர் மடிவதற்குள் வந்து விடுவாய் என நம்பியே ஏமார்ந்து போனோம்..

இயற்கையும் சதி செய்தது உன் வாழ்வோடு விளையாடி..

அந்தப் பாறையும் பங்கு கொண்டது உன்னை சூறையாடி...

அறியாது உன் அப்பா செய்த தவறுக்கு...

ஆயுள் தண்டனை கொடுத்தாய் அவருக்கு...

நீ சொந்தமாகி விட்டாய் மண்ணுக்கு ...

இனி சொந்தமென்று விளையாட யாருண்டு உன் அண்ணனுக்கு..?

அழகிய மகனே..!
அழுகிய நிலையில் உன் உடல் காணவா அவள் தன் குடல் சுருங்கி படுத்திருந்தாள்..?

விண்ணைத் தாண்டி செல்லும் நாட்டில்..

மண்ணை தோண்டி செல்ல முடியவில்லை..

நான்கு நாட்களாக நாட்டின் கீதமே நடுகாட்டுப்பட்டி....

தாள முடியாத சோகத்தில் தண்ணீராய் மழையும் தீர்த்தது கொட்டி..

நீ மண்ணுக்குள் புதைக்கப்பட்டாலும் ..

இரு துண்டாக உடல் சிதைக்கப்பட்டாலும்...

படிப்பினையாக எல்லோர் மனதிலும் விதைக்கப்பட்டாய்...

உன் மரணத்தில் மீண்டும் முளைத்தது.. மங்கிப் போன மனிதநேயம் மதங்களை மறந்து...
பாசம் பெருக்கெடுத்தது தேசங்களை கடந்து ...

பள்ளி செல்லா பாலகனே முற்றுப்புள்ளி வைத்தாயடா பிஞ்சுகளின் சாவுக்கு இன்றோடு ...

இனி தீபாவளி என்றாலே உன் தீபம் தான் எரியுமடா எங்கள் நெஞ்சோடு..

எழுதியவர் : Malli (29-Oct-19, 11:24 pm)
சேர்த்தது : மல்லி
பார்வை : 87

மேலே