அவையை அழகுபடுத்தும் கல்வி - நீதிநெறி விளக்கம் 4

நேரிசை வெண்பா

கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாண்பவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு 4

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

கல்வி கற்கின்றவர்க்குத் தாம் கற்ற கல்வியே கற்புடைய மனைவியராகவும், அம்மனைவியர்க்கு இனிய பாடலே அருமையான புதல்வனாகவும், அப்பாடலின் மொழிவளப்பமே நிறைந்த செல்வமாகவும் இருக்க மாட்சிமைப்பட்ட அறிஞர் அவையினை அழகுபடுத்தும் செல்வாக்கும் சிலரிடத்தில் உள்ளதாம்.

விளக்கம்:

இச்செய்யுளால், கல்வியோடு கூடிய ஒருவன் வாழ்க்கை, சிறந்த மனைவியோடு கூடி இல்லறம் நிகழ்த்தும் ஒருவனது வாழ்க்கைக்கு ஒப்பாகும் எனப்படுகிறது.

பெண்டிர், புதல்வன், செல்வம் என்பன ஒன்றுக்கொன்று தொடர்புடையன.

மகப்பெறாப் பெண்டிரோடு கூடுதலிற் பயனில்லையாதல் போல நூல் இயற்றற்கியலாத கல்விப் புலமையும் பயனில்லை.

செல்வத்தால் குழந்தைகளின் உடல் வளமும் உள்ள வளமும் சிறத்தலின் அத்தீங்கவிக்குச் சொல்வளமாகிய மல்லல் வெறுக்கை (மல்லல் = வளம், வெறுக்கை = செல்வம்) வேண்டுமென்றார்.

"மாண் அவை மண்ணுறுத்தல்" என்பது பிறர்க்கு அறிவுறுத்தலை உணர்த்திற்று.

செல்வமுடையாரினும் சிலர்க்கே ஒப்புரவுச் செல்வம் இருப்பது போலக் கற்றாரினும் சிலர்க்கே அவையை அணிசெய்யும் ஆற்றலுள்ளது.

ஈண்டுச் செல்வமும் என்பது செல்வாக்கை உணர்த்தும். இனி, சொல்வளம் என்பதற்கே சொல்வன்மை என்று பொருள் கூறுவாருமுளர்,

மண்ணுறுத்தல் - கழுவுதல். இஃது எதிரிருக்கும் அவையினரை அவர் அறியாமையாகிய மாசைத் தன் விரிவுரை நீரால் கழுவி அணி செய்தலைக் குறித்து நின்றது.

கருத்து:

பிறர்க்கு நூலியற்றற்கும் அறிவுறுத்தற்கும் ஆற்றல் பெறாமலும், பெற்றும் அவை செய்ய மாட்டாமலும் இருப்பின் கல்வியாற் பயனில்லை எனப்படுகிறது.

கல்வியும் உய்த்து உணர்வும், சொல்வன்மை கல்வி கற்ற ஒருவனால் கற்றவற்றை விளக்கிக் கூற இயலவில்லை என்றால் அந்தக் கல்வியால் பயன் இல்லை.

கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது.

(தீம்கவி - இனிய கவிதை, மல்லல் - வளம், வெறுக்கை - செல்வம், மண்ணுறுத்தும் - மகிழ்விக்கும்)

கவிதையைக் கற்புடைய பெண் ஈன்றெடுக்கும் மகனாகவும், கவிதைக்கு உரிய சொல்வளத்தைச் செல்வமாகவும் உருவகம் செய்துள்ளார். இவ்வாறு கல்விச் செல்வத்தைப் பயன்படுத்தி, சொல்வளம் மிக்க கவிதையை உருவாக்கி, அவையை (சபையை) அழகு செய்யும் திறமே சிறந்த கல்விச்செல்வம் என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.

இப்பாடலில் கல்விச் செல்வம் கொண்ட ஒருவனது வாழ்க்கையானது கற்புடைய மனைவியுடன் இல்லறம் நடத்துவதற்கு ஒப்பானது என்பதைக் குமரகுருபரர் தெளிவுபடுத்தியுள்ளார். கற்புடைய மனைவியுடனும் மக்களுடனும் வாழும் ஒருவனது வாழ்க்கை இன்பமாக இருப்பதுபோல், கல்விச் செல்வம் கொண்டவனின் வாழ்க்கையும் இன்பமாக இருக்கும் என்பது இப்பாடல் உணர்த்தும் உட்பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Nov-19, 9:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 136

மேலே