பேறாற்றலா பேராசையா

சேவல் கொக்கரிக்க
கருங்குயில் கானம் பாட
கண் விழித்தவன்
அலைபேசியின் நாராச ஒலியில்..

சலசல ஓசையோடு
தாவிப் பாயும் நதிதனில்
மீனாய் நீந்தியவன்
அரை வாளித் தண்ணீரில்..

வயலில் விளைந்த உணவுண்டு
வலிமை குன்றாது
அகவை 100 கண்டவன்
40 மாத்திரையோடு 40 வயதில்..

சட்டைப்பையில் 10 பைசாவோடு
சந்தோஷமாய் சகாக்களுடன்
சுற்றித் திரிந்தவன்
லட்ச ரூபாயோடு வேதனையில்..

உழைப்பின் களைப்பில்
மனதின் நிறைவில்
படுத்தவுடன் உறங்கியவன்
பஞ்சு மெத்தையில் போராட்டத்தில்..

இவை யாவும்
5000 காலத்துப் பழங்கதை அல்ல..
ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்னவன் வாழ்க்கை!

இந்த மாற்றம்..
இந்த அதிநவீன ஏமாற்றம்..
மனிதன் பேறாற்றலால் விளைந்ததா
இல்லை பேராசையால் முளைத்ததா?

உண்மை நெஞ்சை நெருடினால்
அது செயலாய் உருவெடுத்தால்
நாளைய சமூகம் களிப்பில்..
இல்லையேல் மீளவியலாத் தவிப்பில்..

எழுதியவர் : சுவாதி (22-Nov-19, 11:05 am)
சேர்த்தது : சுவாதி
பார்வை : 97

மேலே