விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையுந் தீதே - நீதிநெறி விளக்கம் 18
மூன்றாம், நான்காம் அடியில் மெல்லின எதுகை ‘ன்’ ‘ம்’ அமைந்த
நேரிசை வெண்பா
விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையுந் தீதே - புலப்பகையை
வெ’ன்’றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று
த’ம்’பாடு தம்மிற் கொளின். 18
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
ஐந்து புலன்களாகிய பகையையும் வென்று விட்டோம்; நல்லொழுக்கத்தில் தவறாமல் நின்றோமென்று தம்பெருமையை தமக்குள் கருதிக் கொள்வாராயின், செய்யத் தகாதவென்று விலக்கப் பட்ட செயல்களை செய்யாமற் காத்து, செய்யத் தக்கவையென்று வரையறுக்கப்பட்டவற்றையே செய்தற்கரிய நன்மையாகிய தன்மையுடையாரது நல்ல செயலும் பயனற்றதேயாகும்.
விளக்கம்:
ஓம்பி - பேணி, ஐம்புலன்கள் – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. இவை மனத்தை முத்தி வழியிற் போகவிடாது தடுத்தலின், புலப்பகை என்றார்.
கருத்து:
ஐம்புலன்களையும் வென்ற நல்லொழுக்கமுடையாரும் தற்புகழ்ச்சி கொள்ளல் தீது.