பெரியார் சிறியாரிடைப்பட்ட மீச்செலவு காணின் நனிதாழ்ப - நீதிநெறி விளக்கம் 17

நேரிசை வெண்பா

ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின்
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலிதன்றே தாழுந் துலைக்கு. 17

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

உயர்த்திப் பிடித்தால் தராசில் இலேசான பொருளுள்ள தட்டு மேல் மேலே எழுவதற்கு உயரும் பொழுதெல்லாம் பளுவான பொருளுள்ள தட்டன்றோ தாழ்ந்து போகும்;

அதுபோல, கல்வியிலும் செல்வத்திலும் அல்லது இவ்விரண்டிலும் மிகுந்து பெரியாராயிருப்பவர்கள் அவ்விரண்டிலுங் குறைந்து சிறியராயிருப்பவர்களிடத்தில் உண்டான வரம்பு கடந்த நடக்கையைக் கண்டால் அவர்களுக்கு மிகவும் தாழ்ந்து நடப்பார்கள்.

விளக்கம்:

ஆக்கம்- ஆக்குதல்; அது தன்னைச் சேர்த்துக் கொண்ட ஒருவனை மேன்மேலும் உயர்வாக்கும் என்னும் பொருளில் ஆகுபெயராய்க் கருவியையும் செல்வத்தையும் உணர்த்திற்று.

பட்ட - உண்டான. மீச்செலவு – அளவுக்கு மீறி நடக்கும் நடக்கை: செலவு - நடக்கை:

எழ, செல்ல என்னும் இரண்டிற்கும் வினைமுதல் இலேசான பொருளுள்ள தட்டு,

மெலியது வலிது என்பன இடத்துக்கேற்றபடி துலைத்தட்டுகளை உணர்த்தின.

முன்செய்யுள் தாழ்ந்தாரிடந் தாழ்தலைக் குறித்தது. இச்செய்யுள் தாழாதாரிடத்துந் தாழ்தலைக் குறித்தது,

கருத்து: தமக்குத் தாழ்ந்து நடவாதாரிடத்தும் தாம் தாழ்ந்து நடத்தலே தக்கது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-19, 8:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே