மனைக்காக்கம் மாண்ட மகளிர் – நான்மணிக்கடிகை 18

இன்னிசை வெண்பா

மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்காக்கஞ் செவ்விய னாதல் - சினச்செவ்வேல்
நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல்; கேட்டாக்கம்
கேளிர் ஒரீஇ விடல். 18

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

நல்லியல்பு நற்செயல்களில் மாட்சிமைப்பட்ட பெண்மக்களிருந்தால் மனை வாழ்க்கைக்கு உயர்வைத் தரும்;

வீரனொருவன் சினக்குறிப்புடைய சிவந்த படையினது பயிற்சியில் தேர்ச்சி உடையனாய் இருத்தல் போர்வினை முதலான ஆள் வினைகட்கு உயர்வாம்;

இவ்வரசன் நல்லவனென்று குடிமக்களாற் பாராட்டப்படுதல் குடிகள் செல்வம் கல்வி முதலியவற்றில் மேலோங்கி இன்பவாழ்தல் நாட்டுக்கு உயர்வாம்;

சுற்றத்தாரை நீக்கி விடுதல் கேட்டுக்குப் பெருக்கந் தரும்.

கருத்து:

நன்மகளிர் மனைவாழ்க்கையையும், படைப்பயிற்சியுடையான் போர்வினை வெற்றியையும், செங்கோலரசன் நாட்டினையும் உயர்வாக்குவார், உறவினரை யொதுக்குதல் கேட்டினைப் பெருக்கும்.

விளக்கவுரை:

வேலுக்குச் செம்மையானது, பகைவ ருடம்பிற் புகுந்து குருதிக்கறை படிதலா லாகுஞ் செந்நிறம்.

நாட்டாக்கம் – குடிகள் செல்வம் கல்வி முதலியவற்றில் மேலோங்கி இன்பவாழ்வில் வைகுதல். ‘சினச்செவ்வேல்' என்பதனை வேந்தனுக்கு அடையாக்குவாருமுளர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-19, 8:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே