தத்தம் தகுதி இறுவாய்த்து உயிர் – நான்மணிக்கடிகை 17

’ய்’ ஆசிடையிட்ட எதுகையும், வல்லின எதுகையும் அமைந்த
இருவிகற்ப நேரிசை வெண்பா

பொ'ய்'த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக
மூ’த்‘தல் இறுவாய்த் திளைநலந் - தூ’க்’கில்
மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்
தகுதி இறுவாய்த் துயிர். 17

-நான்மணிக்கடிகை

பொருளுரை:

ஆராய்ந்து பார்த்தால், நேசங்கள் பொய்யொழுக்கமாகிய இறுதியை யுடையன;

இளமையின் அழகு கண்ணுக்கு நேராக மூப்பாகிய இறுதியையுடையது;

செல்வாக்குகள் மிகையான செயல்களை இறுதியாக உடையன;

மக்கள் உயிர் தத்தமது வாழ்ந்த வாழ்க்கையின் தகுதியை யிறுதியாக உடையது.

கருத்து:

நண்பர் தமக்குள் பொய்யொழுக்கம் நேர்ந்ததாயின், அவர் நட்புக் கெடும்; மூப்புத் தோன்றியதும் இளமை நலங் கெடும்; மீறிய செயல்களைத் தொடங்கியதுஞ் செல்வங் கெடும்; வாழ்நாள் எல்லை கண்டதும் உயிர் சாகும்.

விளக்கவுரை: நட்புக்கொள்ளும் இடம் பலவாதல்பற்றிப் பன்மையாகக் கூறப்பட்டது. மிகுதி - மிகையான செயல்களையும், தகுதி - அளவாய வாழ்நாளையுங் குறிப்பாலுணர்த்தின.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-19, 8:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே