தென்புலத்தார் கோவினை வேலை கொளல் - நீதிநெறி விளக்கம் 22

இன்னிசை வெண்பா

பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார்
தமக்குப் பயன்வே றுடையார் - திறப்படூஉந்
தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார்
கோவினை வேலை கொளல். 22

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

உரியரல்லாத பிறர்க்குப் பயனாகும்படி தாம் வருந்திக் கற்ற கல்வியறிவைப் பணத்துக்காகக் கொடுக்கும் புலவர்கள் தங்களுக்கு வேறொரு பயனை உடையராவார்கள்;

அது, பலவகைப்பட்ட தீய செயல்களையும் செய்வதற்கு அஞ்சாத ஆற்றல் படைத்த தென்புலத்தார்க்குத் தலைவனான கூற்றுவனை தங்களை நரகத்திலிட்டு ஒறுக்கும்படி வேலை வாங்குதலாம். (அஃதாவது, அப்புலவர் நரகத்துக்குச் சென்று வருந்துவர் என்பது)

விளக்கம்:

நல்லறிவு, நல்லொழுக்கம் முதலியவற்றிற்குப் புறம்பானவர்களைக் குறித்து பிறர்க்கென்றார். விற்பார் என்றார் அங்ஙனம் செய்தவன் இழிவு நோக்கி, இது நல்ல தன்மையில் இல்லாத செல்வர்களை அவர்களிடம் பொருள் பெறுவதற்காகப் பாட்டுப் பாடும் புலவர்கள் போன்றோரைக் குறித்தது.

தம்மைப் படைத்துப் புலவராக்கி எப்போதும் புறம்புறந் திரிந்து பாதுகாக்கும் எல்லாம் வல்ல கடவுளைத் தாம் வருந்திக் கற்றதன் பயனாக வாயாரப் பாடாமல், அருகே அணுகுதற்குந் தகுதியற்ற பொல்லாச் செல்வந்தரைப் பரிந்து பாடுதல் ஒரு தீவினை;

அதுவுமன்றி. அவரை அளவுக்கு மேற் புகழ்ந்து பாடுதலோடு ஒப்பும் உயர்வும் அற்ற இறைவனோடு அவ்வொப்பும் உயர்வும் பொருந்த உரைத்துப் பணம் பறித்தல் மற்றுமொரு தீவினை.

ஆதலின் நமனால் ஒறுக்கப்படுவார் என்க. இதனைத் தகுதியில்லாத மாணாக்கர்க்கு அவர்கொடுக்கும் பணமொன்றே கருதித் தாங் கற்ற அறிவு நூல்களை அறிவுறுத்துவார்க்குங் கொள்வதுண்டு.

தென்புலத்தார் - இறந்த உயிர்கள்.

இவை தெற்கிடத்தில் இருக்கின்றன என்னும் வழக்குப் பற்றித் ‘தென்புலத்தார்’ என்றார்.

கருத்து:

பொருட்பற்றில்லாது தகுதியுள்ளாரை நாடிக் கல்வியைப் பரவச் செய்தல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-19, 1:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே