இந்திரக் கோட்டை-1
இந்திரபுரி அன்று ;
அந்த நெடுமலையின் கீழ், இரவில், ப்ளின்க்.. ப்ளின்க்.. வாட்கள் ஒன்றோடு ஓன்று மோதிக்கொண்டிருந்தன. இருவேறுபடை வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார்கள். எங்கும் அலறல்களும் பிணக் குவியலுமாய்க் கிடந்தது. பாகன் இல்லா யானைகளும், தலைவன் இல்லா குதிரைகளும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன.
அந்த நெடுமலையின் மேலே ஒரு உருவம் ஒரு சிலையைத் தாங்கி மேல் நோக்கி நடந்து கொண்டிருந்தது.
காவி அணிந்து சடைமுடியுடன் காணப்பட்ட அந்த அந்த உருவத்தின் கண்களில் மட்டும் அப்படி ஒரு தீட்சண்யம். ஒரு கையில் தீவட்டியும், மறுகையில் தோளில் சிலையை தாங்கிப்பிடித்தவாறு நடந்து கொண்டிருந்தது.
தீவட்டி வெளிச்சத்தில் அந்த சிலையில் அப்படி ஒரு பளபளப்பு.
அது தங்கச்சிலை..!! அந்த உருவம் திரும்பி கீழேப் பார்த்தது கீழே இந்திரபுரியின் குடிசைகள், மாளிகைகள் பலவும் எரிந்து கொண்டிருக்க சற்று பக்கத்தில் அரண்மனை எரிந்து கொண்டிருந்தது..
வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்த அந்த உருவம் “இறைவா” என்றது.
இந்திரபுரி இன்று:
சுற்றிலும் வயல்வெளிகள் பச்சை பசேலென கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்திருந்தது. தூரத்தில் ‘இந்திரமலை’ எதிர்க்காற்றை எல்லாம் தடுத்து ‘இந்திரபுரத்திற்க்கு’ அனுப்பிக்கொண்டிருந்ததால் குளு குளுவென சூழ்நிலை இருந்தது.
“இந்திரபுரம்லாம் இறங்கேய்.” என நடத்துனன் கத்த பேருந்தில் இருந்து ஒவ்வொருவராக இறங்கத்தொடங்கினர்.
யப்பா.. ரோடா இது, இந்த குலுக்கு குலுக்குது என்று அலுத்துக்கொண்டபடியே பையை முதுகுக்கு தூக்கி போட்டுக்கொண்டான் வெண்ணிலவன். 27 வயது. நவீன கால வாலிபனை போல சிகை வெட்டிருந்தான். மீசை தாடியை ட்ரிம் செய்திருந்தான். ‘ஜீன்ஸ் டீஷார்ட்டில்’
மீசை வைத்திருந்தால் பழைய நடிகர் ராம்கியைப் நினைவுபடுத்துவான்.
நடந்தபடியே சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தான். ஒரு ஒற்றையடி பாதை நீண்டுகொண்டே மலையடிவாரம் வரை போனது.
தூரத்தில் மாடுகளை ஒருவர் மேய்த்துக்கொண்டிருக்க,
‘ஹேய்.. ஹலோ’ என இவன் கைத்தட்டிக் கூப்பிட்டான்.
திரும்பிய அவரிடம் என்ன என்பது போல ஒரு முறைப்பு.
“இங்க வாங்க”
‘உனக்கு அவசியம்னா நீ இங்க வா’
வெண்ணிலவனுக்கு தன் தவறு புரிந்தது. அவரை நோக்கி நடந்தான்.
பார்த்தா படிச்சவராட்டம் இருக்கிங்க. நீங்க பேண்டு சட்டை போட்டுட்டுடதாலையும், நான் கைலிய கட்டிக்கிட்டு மாடு மேய்க்கிரதாலையும் மரியாதை கொடுக்ககூடாதா என்ன.?
“ஓ.. சாரிங்க”
“என்ன பூரிங்க.” சரி சொல்லுங்க என்ன விஷயம்.?
இந்திரபுரத்துக்கு போகுற பாதை இது தானே.?
ஆமா. இது தான்.
அங்க கேசவன்ன்னு ஒருத்தன் இருப்பானே.
யாரு பெருமாள் மகன் கேசவனா.?
ஆமா. அவனே தான். அவன் வீட்டுக்கு வழி சொல்ல முடியுமா.?
‘அவ்வளவு தானே, இந்த பாதைல நடந்து போனா வர்ற தெருவுல கடைசி வீடு தான் கேசவன் வீடு.’
“நன்றிங்க’. என்று விட்டு நடக்க ஆரமித்தான்.
கேசவன் வீட்டை நெருங்கும் சமயம். அவன் வீட்டின் முன் ஒரே கும்பல். கசகசவென்று பேசிக்கொண்டிருந்தது.
அங்கு நின்றிருந்த ஒரு பெரியவரிடம். ‘அய்யா, இது கேசவன் வீடு தானே.? இங்க என்ன இவ்வளவு கூட்டம் ஏதாவது விசேஷமா.’
அவனை ஏற இறங்க பார்த்தவர். “அதுசரி நீங்க யாரு.?
“நான் கேசவனோட “காலேஜ் மேட்.” நானும் அவனும் காலேஜ் படிக்கிறப்ப உயிர் நண்பர்கள். அவனை பாத்துட்டு போகுறதுக்காக வந்தேன்.”
“தம்பி அப்போ, உங்களுக்கு விசயமே தெரியாதுன்னு சொல்லுங்க.
கேசவன் இப்போ உயிரோட இல்ல. அவனை எரிச்சு ஒருமணி நேரம் ஆகிடுச்சு.”
“என்ன சொல்றிங்க.?’ வெண்ணிலவனுக்கு பூமி சுழன்றது..
-அதிர்ச்சிகள் தொடரும்

