அப்பாவை காணவில்லை

அப்பாவை காண வில்லை

அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை, என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும் போதுதான் தெரிந்தது. அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாக சொன்னாள் “கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளியே போன மனுசன் இன்னும் காணலை” என்றவளிடம் அப்பா இன்னும் வரலையா? ஆச்சர்யமுடன் கேட்டவன் இந் நேரத்துக்கு வந்திருப்பாரே? குரலில் கவலையை காட்டினான்.
நீங்க கிளம்புங்க, அவர் வந்துட்டாருன்னா உங்களுக்கு போன்ல சொல்றேன்.அவன் மனம் ஊசலாட ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அப்பாவை தேடி கிளம்பினால் அலுவலகத்துக்கு அரை நால் லீவு போட வேண்டியதாகி விடும். இவளும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எனக்கு ஏதாச்சும் லீவு போடுங்கன்னா உங்களுக்கு ஆகாது என்பாள். யோசித்தவன் சரி அப்பா வந்தவுடன் எனக்கு போன் பண்ணு என்று அரை மனதாய் கிளம்பினான்.
பத்தரைக்கு மனைவியிடமிருந்து போன் குரலில் பதட்டம், இன்னும் உங்கப்பாவை காணலைங்க, அவனுக்கு மனதுக்குள் பெரும் திகில் வந்து உட்கார்ந்து கொண்டது. எங்கு போயிருப்பார்? வீட்டிலிருந்து ஒரு அரை பர்லாங் நடந்தால் பூங்கா ஒன்று வரும், இதில்தான் இவரோடு சேர்ந்து நான்கைந்து பேர் வாக்கிங் செல்வர்.ஆனால் அவர்களுடன் எனக்கு அறிமுகமில்லையே.
மதியம் மேல் அரை நாள் விடுப்பு எழுதி கொடுத்து விட்டு வீடு வந்தவன் அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு அவன் அப்பா தினம் நடக்கும் பாதை வழியே நடக்க ஆரம்பித்தான். யாரிடம் விசாரிப்பது? அவனே இந்த ஏரியாவுக்கு குடி வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. யாரிடமும் முதலில் அறிமுகப்படுத்திக்கொள்ள சங்கடப்பட்டதால் இந்த இக்கட்டான நேரத்தில் யாரிடம் போய் கேட்பது? என்பது புரியவில்லை.
அவன் கால்கள் அந்த பூங்காவை நோக்கி இழுத்து சென்றன. மெல்ல பூங்காவுக்குள் எட்டி பார்க்க அந்த உச்சி வெயிலில் ஒருத்தரும் உள்ளே இருப்பதாக தெரியவில்லை. மெல்ல உள்ளே நடை போட்டான். காலை நேரத்தில் பரபரப்பாய் காணப்படும் பூங்கா அந்த வெயிலில் ஆளரவில்லாமல் இருந்த்து. ஓரிருவர் மட்டும் பெஞ்சில படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இதில் தன் அப்பா எங்கேனும் உறங்குகிறாரா என ஒவ்வொருவர் முகத்தையும் உற்றுப்பார்த்தான். பின் அவனே தன் செயலுக்கு வெட்கப்பட்டுக்கொண்டான். தன் அப்பா ஒரு போதும் பொது இடங்களில் இப்படி படுத்து உறங்குபவர் அல்ல. அப்படியென்றால் எங்கு போயிருப்பார்?
அவருக்கும் இந்த ஊர் புதியதுதான், ஆனால் இவனைப்போல அவர் கூச்சப்படுபவர் அல்ல. வந்த ஒரு வருடத்துக்குள் அவருக்கு என்று நண்பர் வட்டாரத்தை ஏற்படுத்தி இருந்தார். காலையில் எழுந்து கை கால் கழுவிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினார் என்றால் அவருடன் வாக்கிங் செல்ல ப்த்து பேராவது ஒன்று சேர்ந்து விடுவர். இவன் எழுந்திருப்பதற்கு ஏழு ஏழரை ஆகி விடும். அதற்குள் வீடு வந்து விடுவார். அதன் பின் ஒரு குளியல், பின் மருமகளுக்கு சமையலுக்கு உதவி செய்வார். இவர்கள் திருமணம் ஆகி மூன்று வருடங்கள்தான் ஆகியிருந்தது. அதனால் இவன் மனைவிக்கு அப்பா கூட இருப்பது ஒரு பலம் என்று கூட சொல்ல்லாம். இருந்தாலும் சில நேரங்களில் தன்னிடம் பேசுவது போல வெடுக்கென அப்பாவிடம் பேசியிருப்பாளோ? என்று யோசித்தான். அப்பா தேவையில்லமல் யாரிடமும் வாய் கொடுப்பவர் அல்ல. அதே நேரத்தில் எல்லோரிடமும் நல்ல முறையில் பழகுவார். இதுவரை இவனிடம் இவன் மனைவியைப்பற்றி எந்த குறையும் சொன்னதில்லை. ஒரு வேளை நாம்தான் அவரிடம் இவள் எப்படி உன்னிடம் நடந்து கொள்கிறாள் என கேட்காமல் விட்டு விட்டோமோ? இப்படி யோசித்தான்.
பத்தாவது படித்துக்கொண்டிருக்கும் போது அம்மா என்னையும் அப்பாவையும் விட்டு மேலுலகம் போய் சேர்ந்தாள். அதற்குப்பின் அப்பா தான் உலகம் என்றாகி விட்டது. அப்பா காலையில் எழுந்து இவனுக்கு காப்பி வைத்து கொடுத்து எழுப்பி அதன் பின் சாப்பாடு செய்து டிபன் பாக்சில் வைத்து அவனை பள்ளிக்கு அனுப்புவது வரையில் ஒரே பரபரப்பாய் வேலை செய்து அதற்கு பின் அலுவலகம் கிளம்புவார். ஞாயிறு அன்று அவனுக்கு அசைவம் பிடிக்கும் என்று செய்து வைத்து விட்டுத்தான் வேலைக்கு கிளம்புவார். அவருக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்றுதான் விடுமுறை. அதனால் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பது இரவு நேரம் மட்டும்தான்.
அப்பா ஓய்வு எடுத்து அக்கடாவென உட்கார்ந்திருப்பதை இவன் பார்த்ததே இல்லை. அம்மாவின் நினைவு இவனை கஷ்டப்படுத்தக்கூடாது என்று இவர் அம்மா செய்து கொடுக்க வேண்டிய வேலைகளை அனைத்தையும் இழுத்துப்போட்டு செய்வார். இவன் பட்டப்படிப்பு முடித்து ஒரு வருடம் வேலையில்லாமல் வீட்டில் இருந்தபொழுது கூட இவனை வேலையே செய்ய விடவில்லை. அப்பா அவனுக்கு வழக்கம்போல எல்லா வேலைகளையும் செய்து விட்டே செல்வார். அதே போல் “எம்பிளாய்மெண்ட் நியூஸ்” பத்திரிக்கை எல்லாவற்றையும் வாங்கி வந்து நிறைத்து விடுவார். அரசு வேலைக்கான தேர்வு அனைத்தையும் எழுத சொல்லி ஊக்கப்படுத்துவார்.
ஒரு வழியாக அவனுக்கு வேலை ஒன்று கிடைத்தது. அடுத்த வருடத்தில் ஒரு போட்டோவை கொண்டு வந்து காட்டினார். பெண் பிடிச்சிருக்கா? அப்பா அதற்குள் என்ன அவசரம் என்று கேட்டவனுக்கு உன் அம்மா இருந்திருந்தால் அவசரப்பட்டிருக்க மாட்டேன், பாவம் நீ என் கையால் சாப்பிடற கொடுமை உனக்கு வந்திடுச்சு. சீக்கிரம் ஒரு பொண்ணு கையால சாப்பிட ஆரம்பிச்சியின்னாத்தான் என் மனசு நிம்மதியாயிருக்கும் என்று அவன் வாயை அடைத்து விட்டார்.
இந்த பொண்ணு என் நண்பனோட பொண்ணு, உனக்கு எப்படி அம்மா இல்லையோ அது மாதிரி இந்த பொண்ணுக்கும் அம்மா இல்லை. ஆனா அவனுக்கு இரண்டு பொண்ணுங்க இருக்கு. முத பொண்ணை நான் எடுத்துக்கறேன்னு அவங்கம்மா இறந்தப்பவே சொல்லி வச்சுட்டேன். நீ இப்ப என்ன சொல்றே? இதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. கல்யாணம் நல்லபடியாக நடந்து அப்பாவுக்கு சமையலில் இருந்து ஓய்வும் கொடுத்தது அவனுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. இருந்தாலும் அப்பா சும்மாயிருக்கமல் மருமகளுக்கு கூட மாட அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார். அடுத்து வந்த வருடத்திலேயே விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டார். இவர் வீட்டில் ஓய்வாக இருப்பதை பார்த்த இவனுக்கு மனசு சந்தோசமாக இருந்தது.
மறு வருடமே இவனுக்கு மாற்றல் வர இவர்கள் இங்கு குடி வந்து இந்த ஒரு வருடத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி.
. காக்கி சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் மூலையில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் இங்க காலையில வயசானவர் ஒருத்தர் வாக்கிங் வருவாங்களே? இங்க வர்றவங்க எல்லோரும் வயசானவங்கதானே “ஏதோ நகைச்சுவையாக” பேசுவதாக நினைத்து பேசிய அந்த காக்கி சட்டைக்காரர் இவனின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்தவுடன் உடனே அமைதியாகி சார் அவர் எப்படி இருப்பாரு?அப்படீன்னு சொன்னீங்கன்னா அடையாளம் சொல்லுவேன். நான் காலையில இருந்து இங்கதான் இருக்கேன். இந்த பூங்காவுக்கு நான்தான் வாட்ச்மேன்.
அவன் அப்பாவின் அங்க டையாளங்களை சொல்ல ஓ தினமும் ஒல்லியா உசரமா ஒருத்தர் வருவாரே? அவரா. அவரை காலையில இருந்து இங்க பாக்கலீங்களே, இவனின் பதிலில் மேலும் உடைந்து போனான். பூங்காவுக்கே வரலையின்னா எங்க போயிருப்பாரு. யாரிடம் சொல்வது? என்ன செய்வது ஒன்றும் புரிபடாமல் நிலை குலைந்து வீட்டுக்கு திரும்பினான். ஒரு வேளை அப்பா அங்கு வந்திருப்பாரோ என்று. அங்கே மனைவியின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டான். அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று.
இதுவரை அமைதியாய் அவன் சட்டை பையில் இருந்த செல்போன் கிண்கிணித்தது .”மகேஸ்” அப்பாவின் குரல் இவன் நெஞ்சில் பாலை ஊற்றியது போல் இருந்தது. “அப்பா”” எங்கேப்பா போயிட்டீங்க? குரல் உடைந்தது சாரிடா காலையில வாக்கிங் கிளம்பி வரும்போது தினமும் என் கூட வாக்கிங் வர்றவரோட ஒய்புக்கு திடீருன்னு நெஞ்சு வலி வந்து உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டோம். ஆனா பிரயோசமில்லைடா, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது, என்னோட பழகறவங்க ஒய்புங்க இப்படி போய் சேர்ந்துடறாங்களேடா. குரல் உடைந்து அழுவது போல் இருந்தது. இப்ப ஹாஸ்பிடல இருந்து அவங்களை வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டு இருக்கோம். அதுக்குள்ள உன் கூட கிளம்பறதுக்கு முன்னாடி இங்கிருக்கற போன்ல இருந்து போன் பண்ண்றேன். நீ மனசை போட்டு அலட்டிக்குவியேன்னுதான் போன் பண்ணறேன். எல்லாம் முடிச்சுட்டு வந்திடறேன்.
“அப்பா”..”அப்பா”..அப்பாவின் மீது கோபப்பட முடியவில்லை. பிறருக்காக கவலைப்படும் அப்பா. இந்த அரை நாளில் என்னை நிலைகுலையச்செய்து விட்ட அப்பா “வழியில பசிக்கு ஏதாவது சாப்பிடு” முடிஞ்சவுடனே சீக்கிரம் வந்து சேரு. குரலில் வருத்தம் தெரிய போனை அணைத்தவன், குலுங்க குலுங்க அழுதான். இந்த அழுகை அவன் அம்மா அவனை விட்டு மறைந்த போது கூட அழுததில்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Dec-19, 12:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : appavai kaanavillai
பார்வை : 204

மேலே