படைத்தவன் பட்ட பாடு

நூறாண்டு எழுதிய ஓவியமோ!
கோடியுகம் மீகண்ட இயற்கைப் பொழிலோ!
புரளியாய் சொல்லக்கூட, எனக்குக்
கற்பனை வருமோ!

சிற்பியோ? கவிஞனோ?
உனைப் படைத்தவன்,
கற்பனைக் கடவுளோ?

கண் கொடுக்க நினைத்தவன்
கருங்குழியில் அச்செடுத்தான்!
தேகம் இழைக்கவோ - மயில்பீலி
முக்கோடி கடன் பெற்றான்!

உன் இதழ் சிவக்க, ஓர்
திரவியம் படைத்தான்! அதில்,
மிஞ்சியன கொண்டு,
விண்மீன்களை வடித்தான்!

உன் புருவம் வரைய,
இருள் யாவும் குழைத்தான்!
உன் கையொப்ப வாசனைக்கோ,
கோடி மலர் சோதித்தான்!

கூந்தலைத் திரிக்க,
கருமேகங்கள் படைத்தான்!
அதில் வகிடொன்று திணிக்க,
மின்னலைப் பிடித்தான்!

உன் பாத சுவடுகளில் உள்ளடக்கா
கவிதைகள் உண்டோ
உன் உடல் மொழிக்குள் அடங்காத
இலக்கணம்தான் உண்டோ!

உனை ரசிப்போர் எவரையும்
படைக்கவில்லை என்றே,
ஆயக் கலைகள்,
அறுபத்தி நான்கு என்கிறான்!

உன் இதழைச் சுவைக்கும், சுவை
அரும்புகளை வேண்டும் -
என் தவத்திற்கு பதிலளிக்க வருவான்!
அன்று கேட்கிறேன்.
உன்போல் ஒருவளைப்
படைக்க முடியாமல் போனானா?
உனைப் படைத்து சோர்ந்தானா? என்று!

எழுதியவர் : விக்னேஷ். ச (14-Jan-20, 3:52 pm)
பார்வை : 3106

மேலே